நான் உன்னோடு கூட இருந்து உன்னை  ஆசீர்வதிப்பேன். | Pastor B. E. Samuel

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த 2023 ஆம் ஆண்டின் வாழ்த்துதலையும் ஸ்தோத்தரங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த ஆண்டு கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றி சுகம் தந்து பெலன் தந்து வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் தந்து வாழவைத்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். 

கடந்த ஆண்டு வாக்குத்தத்தின்படி மல்கியா 3:6 வசனத்தின்படி “நான் கர்த்தர் நான் மாறாதவர் ஆகையால் இஸ்ரவேலின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை” என்ற வாக்குதத்தம் கொடுத்தார். பிரியமானவர்களே கடந்த 2022 ஆம் ஆண்டு முழுவதும் கர்த்தர் மாறாதவராகவும் நிர்மூலமாக போகிறவர்களை காக்கிறவராகவும் இருந்து கரம் பிடித்து நாம் நடக்க வேண்டிய வழியில் செம்மையாய் சிறப்பாய் வழிநடத்தி கொண்டு வந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தவருக்கு ஆயிரம் ஆயிரமான கோடி ஸ்தோத்திரங்கள்.

இந்த  ஆண்டும் அவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் தயவினாலும் இரக்கத்தினாலும் நடத்தி இந்த வருடம் முழுதும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் உங்கள் கூட இருந்து உங்களை வழிநடத்தி ஆசீர்வதிக்க உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.

இந்த 2023 ஆம் ஆண்டின் வாக்குத்தமாக ஆதியாகமம் 26:3இல் “இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு,  நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.” நான் உனக்கு கொடுத்த இந்த தேசத்திலே நான் உன்னோடு கூட இருந்து உன்னை  ஆசீர்வதிப்பேன். 

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே தேவன் உனக்கு கொடுத்த அல்லது உன்னை வைத்திருக்கிற தேசத்திலே நிலைத்திரு அதை விட்டு விடாதே அதை இழந்து விடாதே அந்த கொடுக்கப்பட்ட அந்த தேசத்திலே நீ வாசம்பண்ணி கர்த்தருக்காக அவருடைய மகத்துவத்திற்காக அவருடைய வல்லமைக்காக சாட்சியாய் நீ வாசம் பண்ணும்போது தேவன் உன்னை ஆசீர்வதிக்க வல்லமை உள்ளவராய் இருக்கிறார். 

ஆதாமுக்கு தேவன் ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணினார் அந்த இடம் ஏதேன் தோட்டம் ஏதேன் தோட்டத்திலே ஆதாமுக்காக எல்லாவற்றையும் படைத்தார் சிருஷ்டித்தார் உண்டாக்கினார் அவனுக்காக விசேஷித்த விதமாக உண்டாக்கினார். அந்த ஏதேன் தோட்டத்திலே அவன் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பெயர் வைத்தது மாத்திரமல்ல, அதை ஆண்டு கொள்ளும்படியான அதிகாரத்தையும் தேவன் ஆதாமுக்கு கொடுத்தார். 

ஆதாம் தான் வைக்கப்பட்ட இடத்தில் இராமல் அதை இழந்து போனான் காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும் ஆதாம் செய்ய வேண்டாம் என்று சொன்ன செயலை மீறினவனாக காணப்பட்டான் தோட்டத்தின் மத்தியிலே உள்ள ஜீவ விருட்சத்தில் கனியை புசிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார் ஆதாமும் அவன் மனைவியாகிய ஏவாளும் அதை புசித்து மீறுதலுக்கு உட்பட்டார்கள் அதனால் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஏதேன் தோட்டம் என்கிற அந்த சிங்கார தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 

அருமையான தேவனுடைய பிள்ளைகளே நாம் நமக்கு கொடுக்கப்பட்ட தேசத்திலே குடியிராமல் போனதற்கு நாமே காரணமாக மாறிவிடுகிறோம். நீங்கள் தேசத்தில் சுகமாய் குடியிருக்க வேண்டுமென்றால் முதலாவது தேவனுக்கு கீழ்படிகிறவர்களாக அவர் சொல்லை கேட்டு  செய்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த வார்த்தையை  மீறுகிறவர்களாகவோ அலட்சியம் பண்ணுகிறவர்களாகவோ இருப்பீர்களேயானால் நீங்கள் தேவனுடைய வாக்குதத்ங்களை, ஆசீர்வாதங்களை மீறுகிறவர்களாக இருக்கிறீர்கள். 

ஆதாம் அவனை வைத்ததேசத்தில் வாசம் பண்ணும்போது கர்த்தருடைய இடத்தில் இல்லாதவனாக போனான் அவர்கள் தேவனால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளே வேத வசனம் சொல்லுகிறது சற்று நன்றாய் கவனித்து வாசியுங்கள் தேசத்திலே வாசம் பண்ணு அதை அலட்சியம் பண்ணாதே அதை புறக்கணிக்காதே நீங்கள் தேசத்தில் தேவ விருப்பத்தின்படியும் சித்தத்தின்படியும் தேசத்தில் இருந்து வாசம் பண்ணுவீர்களானால் ஆசீர்வாதம் உங்கள் மேல் வந்து பலிக்கும்  நீங்கள் தேசத்திலே வாசம் பண்ணும் போது தேவன் உங்களோடு கூட இருந்து உங்களை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றால் முதலாவது தேவன் உங்களை வைத்த இடத்திலே, சபையிலே, ஊரிலே வாசம் பண்ணுங்கள். 

தேவன் உங்களுக்கென்று கொடுத்த இடத்திலே தேவனுக்கென்று உத்தமமாக உண்மையாக தேவனை நோக்கி பார்க்கிற உள்ளத்தோடு இருப்பீர்களேயானால் இந்த ஆண்டு வாக்குத்தத்தம் “நான் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பேன்” என்பதே அவர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமானால் அவர் உங்களுக்கு என்று கொடுத்த இடத்திலே வைத்த இடத்திலே வைத்த சபையிலே நீங்கள் நிலைத்திருந்து அவரை நோக்கி பார்க்கும் போது அவர் உங்களோடு கூட இருந்து உங்களை ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.

யோசுவா 1:5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”

யோசுவா புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் போது கர்த்தர் யோசுவாவோடு பேசுகிறதை வாக்குதத்தம் கொடுக்கிறதை நாம் பார்க்கிறோம். மூன்றாவது வசனத்திலிருந்து நாம் அப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை வாக்குறுதியை நாம் பார்க்க முடிகிறது அதில் ஐந்தாவது வசனம் “நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை” என்று சொல்லிவிட்டு நான் மேலும் “மோசேயோடு இருந்தது போல உன்னோடு இருப்பேன்” என்று வாக்கு கொடுக்கிறார் இந்த வருடத்தினுடைய வாக்குதத்தம் “நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்” என்பதாக இதில் எப்படி கூட இருப்பேன் என்று சொல்லும்போது மோசேயோடு இருந்தது போல உன்னோடு கூட இருப்பேன். 

மோசேயோடு தேவன் எப்படி இருந்தார் ஒரு நண்பனை போல முகமாய் பேசுகிற ஒரு சிநேகிதனை போல தேவனுடைய வீட்டில் எங்கும் மோசே உண்மையுள்ளவனாய் இருந்தார் என்று வேதம் சொல்கிறது. அப்படிப்பட்ட மோசேயோடு தேவன் இருந்தது போல உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் அந்த வார்த்தையின் முடிவில் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்ற வாக்குத்தத்தத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது என்னவென்று சொன்னால் மோசேயோடு இருந்ததுபோல உன்னோடு இருப்பேன் அது மாத்திரமல்ல நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதும் இல்லை என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். 

உன்னோடு இருக்கிற ஆண்டவர்  மோசேயோடு இருந்தது போல உன்னோடு கூட இருப்பார் மோசே கொண்டு எகிப்தில் இருந்த தம்முடைய ஜனத்தை 10 விதமான அற்புதங்கள் மூலமாக அங்கிருந்து விடுதலையாக்கிக் கொண்டு வந்தார். பத்து விதமான அற்புதங்களை இஸ்ரவேல் மக்கள் பார்த்தார்கள் அதே பத்து விதமான வாதையை எகிப்தியர் கண்டார்கள் இஸ்ரவேலுக்கோ அது அற்புதம் உன்னை எதிர்க்கிற எகிப்தியருக்கோ அது சிட்சையாய் இருந்தது. அப்படிப்பட்ட அற்புதங்களை செய்கிறவராகிய ஆண்டவர் இந்த ஆண்டிலும்  உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பார். 

என்னென்ன காரியங்களில் நீ பயந்து கொண்டிருக்கிறாய் எது உன்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது எதில் நீ சோர்ந்து போகிறாய்? வியாதியா கடன் பிரச்சனையா தோல்வியா அவமானமா எதிலே நீ நெருக்கப்படுகிறாய் வருத்தப்படுகிறாய் சஞ்சலப்படுகிறாய் அருமையான தேவப்பிள்ளையே இந்த ஆண்டு மோசேயோடு இருந்தது போல உன்னோடு கூட இருக்கிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார். எப்பேர்பட்ட நெருக்கத்தில் இருந்தாலும் சரி கஷ்டத்தில் இருந்தாலும் சரி கண்ணீர் துக்கம் அவமானம் நிந்தனை போராட்டம் எவைகளில் இருந்தாலும் சரி அவை அனைத்திலும் இருந்து உன்னுடனே கூட இருந்து உன்னை விடுவிக்க பாதுகாக்க உயர்த்த உன் தேவன் வல்லவராய் இருக்கிறார். 

இந்த ஆண்டு நிச்சயமாய் தேவன் மோசேயோடு இருந்தது போல உன்னோடு கூட இருக்கப் போகிறார் அதற்கு நீ செய்ய வேண்டியது கர்த்தர் பேசுகிறதே நீ கேட்க வேண்டும் கர்த்தரோடு கூட அதிகமாய் நடக்க வேண்டும், பேச வேண்டும் அதுதான் உன்னுடைய வாழ்க்கையில தேவன் உன்னோடு கூட நடப்பதற்கான உன்னோடு கூட இருப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியும் நீ தேவனை விட்டு விலகினால் தேவன் உன்னோடு கூட இருப்பார் என்று நினைத்தாயானால் அது உன்னுடைய தவறு ஏன் என்று சொன்னால் நீ தேடினால் அவர் உனக்கு தென்படுவார் நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை கைவிடுவார் அவர் எப்பவுமே பொய் சொல்வதில்லை அவர் சத்தியபரர் அவருடைய வார்த்தைகளும் சத்தியம் உள்ளவைகள். 

இந்த ஆண்டு உன்னை சீரும் சிறப்புமாக ஆசீர்வதிக்க உன்னுடைய தேவன் வல்லமையுள்ளவராய் இருக்கிறார் தைரியம் கொண்டு அவரை இன்னும் அதிகமாய் பற்றிக்கொள் உன்னை ஆசீர்வதிப்பதே அவருடைய விருப்பமாய் இருக்கிறது.  

ஏசாயா 43:2 “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.”

அருமையான தேவப்பிள்ளையே ஏசாயா புத்தகத்தில் ஏசாயா சொல்லுகிறதை கவனியுங்கள் நீ தண்ணீர்களை கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம் நன்றாய் கவனியுங்கள் தண்ணீர்களை கடக்கும் போது என்று குறிப்பிடுகிறார் தண்ணீர்களை கடக்கும் போது தேவன் உன்னோடு கூட இருக்கிறார் ஆண்டவராகிய இயேசு நாலாம் ஜாமத்தில் கடலின் மேல் நடந்து வருகிறதை சீஷர்கள் கண்டு ஆவேசம் பேய் என்று பயந்தார்கள் இயேசு சொன்னார் நான் தான் பயப்படாதேயுங்கள்  என்று சொன்னார் அதற்கு பேதுரு ஆண்டவரே நீரேயானால் நானும் கடலின் மேல் நடந்து வர உதவி செய்யும் என்று கேட்டான் அதற்கு சரி நடந்து வா என்று ஆண்டவர் சொன்னார். 

அவன் இறங்கி கடலின்மேல் நடந்து போகிறபோது காற்றும் அலையும் கவனிக்கிறவனாய் இருந்தான் அப்பொழுது அவன் முழுகி போகிற ஒரு நிலைமை ஏற்படுகிறது இயேசுவைப் பார்த்து இயேசுவின் வார்த்தையை கேட்டு கடலில் இறங்கி நடந்த பேதுரு தொடர்ந்து இயேசுவை பார்க்காமல் அலையையும் காற்றையும் பார்க்க ஆரம்பித்தான் அதனால் அவன் தண்ணீரில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது அருமையான தேவப்பிள்ளையே நீ ஆரம்பிக்கும் போது தேவனை நோக்கி பார்த்து ஆரம்பிக்கிறாய் உன்னுடைய வழி இயேசுவை மறந்து, அழைத்தவரை மறந்து, அழைப்பை மறந்து சூழ்ந்திருக்கிற சோதனைகளையும், கஷ்டநஷ்டங்களையும், நெருக்கங்களையும், காற்றையும், அலையும் பார்த்து பயந்து போய் தண்ணீருக்குள் மூழ்கி விடுகிற நிலைமை உனக்கு உண்டாகிறது. 

கவனித்து பாருங்கள் அழைத்தது இயேசு அவரைப் பார்த்து போக வேண்டிய நீ பிறகு ஏன் காற்றை பார்க்கிறாய் இறங்கினது கடல் என்று உனக்குத் தெரியாதா அப்போ எந்த தைரியத்தில் இறங்கினாய் இயேசு இருக்கிறார் இயேசு எனக்கு முன்னே இருக்கிறார் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் இறங்கினாய் சிறிது தூரம் நடந்த உடனே ஏன் உனக்கு பயம் இயேசு எங்க போனார் அவர் உன்னுடனே கூட தானே இருக்கிறார் அதை விட்டு பயத்தினால் சுற்றி இருக்கிற சூழ்நிலைகளினால் சூழ்ந்து இருக்கிற பாரங்களினாலே சூழ்ந்து இருக்கிற பயங்களினால் காற்று எவ்வளவு வேகமாய் வீசட்டுமே அலை எவ்வளவு தூரமாய் கொந்தளிக்கட்டுமே இயேசு உன்னோடு கூட இருக்கிறார் என்பதை ஏன் மறந்துவிட்டாய் இயேசு உன்னோடு இருக்கிறார் கடல் மேல் நடந்தாலும் சரி ஆறுகளை நீ கடந்தாலும் சரி அவைகள் உன்னை பற்றாது அணுகாது என்பதை எந்த சூழ்நிலையிலும் மறந்து விட வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

ஆதியாகமம் 26:24 “அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.”

அருமையான சகோதரனே சகோதரியே இங்கே ஈசாக்கை குறித்து நாம் பார்க்க போகிறோம். ஈசாக்கு ஒரு துறவு வெட்டினான் அங்கு வாக்குவாதம் உண்டாயிற்று அதை விட்டுவிட்டு இன்னொரு துறவு வெட்டினான் அங்கேயும் வாக்குவாதம் உண்டாயிற்று மூன்றாவது இன்னொரு துறவு வெட்டினான் அங்கே வாக்குவாதம் உண்டாகவில்லை கர்த்தர் நமக்கு ஒரு இடத்தை உண்டாக்கினார் என்று சொல்லி அந்த துறவுக்கு ரெகோபோத் என்று பெயரிட்டான் அங்கே இருந்து ஈசாக்கு பேயசெபாவுக்கு போனான் அந்த ராத்திரில தான் தேவன் ஈசாக்கு தரிசனமானார். 

தரிசனமாகி நான் உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் தேவன் பயப்படாதே உன்னோடு கூட இருக்கிறேன் என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் நிமித்தம் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்தார் வாக்குதத்தம் செய்தார் அருமையான தேவப்பிள்ளையே ஆரம்பத்திலே அவன் செய்த எல்லாவற்றிலும் தடைகள் வந்தது எந்த துறவு வெட்டினாலும் அதற்கு தடை வந்தது எங்களுடையது என்று சொல்லி வஞ்சிக்கப்பட்டான் ஏமாற்றப்பட்டான் கடைசியிலே ஒரு துறவு வெட்டும்போது அங்கே சமாதானம் உண்டாயிற்று தேவன் அங்கே நடுநின்றி நியாயம் தீர்த்தார் அதனால் அவன் அந்த துறவுக்கு அந்த இடத்திற்கு ரெகோபோத் என்று பெயரிட்டார். 

அந்த ராத்திரியிலே தேவன் கொடுத்த தரிசனத்தை பார்க்கிறான் நாம் செய்வதெல்லாம் வாய்க்காமல் போய்விடுமோ இதோடு எங்களுடைய வாழ்க்கை இவ்வளவுதான் எல்லாம் முடிந்து போய்விட்டதோ எது செய்தாலும் தடை உண்டாகிறதே எந்த காரியத்திலும் நஷ்டம் வருகிறதே என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது அதைப்போல இன்றும் கூட நம்மில் அநேகர் வீடு கட்டுவார்கள் வாஸ்து சரி இருக்கோ இல்லையோ என்ற பயம் வாஸ்து சரிப்படுத்த சீர்படுத்த இவர்கள்  யார் தேவன் கட்ட நினைத்தது தடைபடாது. யாரோ ஒருவன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக வாஸ்து சரி இல்லை என்று சொல்லுகிறதே நீங்கள் கேட்க வேண்டாம்.

ஒரு சிறு கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது ஒரு பெரிய கோடீஸ்வரன் ஒரு தனிமையான ஒரு இடத்திலே ஒரு வீட்டை கட்டினார் அவன் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்த இடம்  நிறைந்த மரங்கள் உள்ள இடம் அந்த மரங்களை வெட்ட அவனுக்கு மனமில்லை அப்பொழுது அந்த மரங்கள் இடையே இடையே வீடு அமைத்து சிறப்பாக இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தான் அநேக காட்டு ஜீவராசிகளும் அந்த வீட்டைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்தது எதையும் அவன் தடை செய்யவில்லை ஒருநாள் தன் நண்பர்களுக்கும் விருந்து பண்ணும்படி அழைப்பு கொடுத்திருந்ததால் அவர்களும் வந்திருந்தார்கள் வீடு மிகவும் சிறப்பாக அழகாக இருந்தது பார்த்த நண்பர்கள் சொன்னார்கள் எல்லாம் சிறப்பாக, நன்றாக, அழகாய் இருக்கிறது உன் தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், வீட்டில் வாஸ்து பார்த்து கட்டினாயா என்று கேட்டார்.

ஏனென்றால் இப்பொழுது நீ நல்லா இருக்கிற வாஸ்து சரி இல்லனா எல்லாம் போயிடும் என்று பயமுறுத்தினார்கள் அவன் மிகவும் பயப்பட ஆரம்பித்தான் பிறகு அவர்களே ஒரு வழி சொன்னார்கள் என்னவென்றால் இங்கே ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் உலகிலேயே அவர்தான் பெரிய நிபுணர் அவரிடத்திலே போய் நீ விசாரித்தால் அல்லது வாஸ்து கேட்டால் நலமாய் இருக்கும் என்று சொன்னார்கள். அவர் பல இடையூறுகளுக்கு அப்புறம் வாஸ்து சாஸ்திரி நிபுணர் சந்தித்து என் வீட்டிற்கு வரவேண்டும் என் வீட்டினுடைய வாஸ்து சரியா இருக்கிறதா என்று பார்த்து சொல்ல வேண்டும் என்று கேட்டார் பிறகு அவரும் வருவதற்கு சம்மதித்தார், வந்தார் வீட்டை பார்த்தால் வீட்டு மரங்களை வெட்டாமல் அதற்கு இடையில் கட்டப்பட்டிருப்பது காட்டில் வாழ்கிற மிருக ஜீவன்களுக்கு எந்த தொல்லையும் இல்லாமல் இருப்பது போன்ற காரியங்களை எல்லாம் பார்த்து அவர் சொன்னார் உன்னுடைய வீடு எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார். 

எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு சொன்னான் மரங்களை வெட்டாமல் மிருக ஜீவன்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் யாருக்கும் எந்த தொல்லையும் தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வாழ்கிறவனுக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் வராது என்று  சொன்னான் அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையில் தேவனுடன் வாழும் போது யாருக்கும் எந்த தீங்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நீங்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு எந்த ஒரு கெடுதலும் வரவே வராது வாஸ்து இல்ல எந்த சாஸ்திரங்களும் உங்களை ஒன்றும் பண்ணாது வீடு கட்டினால் வாஸ்து பாக்கணும் அதை பாக்கணும் எது செய்தாலும் அதை பாக்கணும் இதை பாக்கணும் என்கிற காரியத்தை விட்டு விடுங்கள் எதை செய்தாலும் அதை ஜெபத்தோடு செய்யுங்கள். 

ஏன், ஜெபிக்கணும் என்ற எண்ணம் உங்களுக்கு வராதா? ஜெபிக்க மாட்டீர்களா? தேவனை விட இந்த உலகத்தில் பெரிய மனிதர் யாராவது உண்டா? தேவனை விட உலகத்தில் பெரிய சக்தி ஏதாகிலும் உண்டா? தேவனே அண்ட சராசத்திற்கும் ஆண்டவராக இருக்கிறார் அவருக்கு நிகராக இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் 

 தேவன் ஈசாக்கை சந்தித்தார்.  சந்தித்து பயப்படாதே ஆபிரகாமோடு இருந்தது போல நான் உன்னோடு கூட இருக்கிறேன் உன் தகப்பனாகிய ஆபிரகாம் என் ஊழியக்காரன் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தார் அருமையான தேவனுடைய பிள்ளைகளே இன்றைக்கு நீங்கள் இந்த ஆண்டு எடுத்து வைக்கப் போகிற ஒவ்வொரு அடிகளும் தேவன் உங்களோடு கூட இருந்து உங்களை கரம்பிடித்து வழிநடத்தி ஆசீர்வாதத்தின் பாதையிலே கொண்டுபோக அவர் வல்லமையுள்ளவராய் தயவுள்ளவராய் கிருபையுள்ளவராய் உன் கையை நீட்டி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 

நீ உன் கையை அவர் கையில் கொடுத்து கடந்துபோகும்போது இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செழிப்பாக சமாதானமாக நாம் வாழ முடியும். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *