கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனம் என்னவென்றால் பரிசுத்தமாக்கும் கர்த்தர் (1 தெசலோனிக்கேயர் 5:23)
1 தெசலோனிக்கேயர் 5:23
“சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.” உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக
நாம் இங்கு கவனிக்க வேண்டிய வார்த்தை என்னவென்றால் பரிசுத்தம் என்றால் என்ன என்பதை பற்றி கவனிக்க வேண்டும். பரிசுத்தம் என்பது மாசற்றது, தூய்மையானது, புனிதமானது. அதாவது தேவன் விரும்பத்தக்கதாக நம் ஆவி ஆத்மா சரீரத்தை முற்றிலுமாக அவருக்காக பரிசுத்தப்படுத்துவது அதுதான் பரிசுத்தம்.
சரீதத்தை பரிசுத்தமாக்குவது எளிமையான காரியம் அதனை குளித்து சுத்தமாக்கிக் கொள்ளலாம் ஆனால் ஆத்துமாவை பரிசுத்தமாக்குவது எப்படி? மற்றும் ஆவியை பரிசுத்தமாய் வைத்துக் கொள்வது எப்படி? வேத வசனம் தெளிவாக சொல்லுகிறது சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் (ஆவி, ஆத்துமா, சரீரம்) பரிசுத்தமாக்குவராக. சரீரத்தைக் கூட பரிசுத்தமாக்குவது கர்த்தர் தான். தேவன் நம்மை பரிசுத்தமாக்கினால் நாம் முற்றிலும் பரிசுத்தமாய் இருப்போம்.
பூமியில் ஏன் இந்த பரிசுத்தம்:
யாத்திராகமம் 29:44 ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,
ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன். இங்கு நான் பரிசுத்தமாக்குவேன் என்று வருகிறது அல்லவா அதில் நான் என்பது சமாதானத்தின் தேவன். நம்மை பரிசுத்தமாக்குகிறவர் சமாதானத்தின் தேவன்.
எதற்காக இந்த பரிசுத்தம்:
எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,
யாத்திராகமம் 29:45 இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.
பூமியில் பரிசுத்தம் உனக்கு எதற்கு வேண்டுமென்றால் ஆசாரிய ஊழியம் செய்வதற்கு.
ஆசாரிய ஊழியம் என்றால் என்ன?
ஆசாரிய ஊழியம் என்பது இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் ஒன்று கூடி தேவனை ஆராதிப்பது தொழுது கொள்வது தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்வது இவைகள் தான் ஆசாரிய ஊழியும் நீங்களும் ஆசாரிய ஊழியம் செய்வதற்காக கர்த்தர் உங்களை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
ஆசாரிய ஊழியம் எங்கு செய்வது?
ஆசாரிய ஊழியம் உங்கள் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் ஏன் என்றால் உங்கள் குடும்பத்திலேயே கர்த்தரை அறியாத கணவன், மனைவி, பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி என்றால் கர்த்தர் உங்களை ஆசாரிய ஊழியம் செய்வதற்காக அதாவது கர்த்தரை அறியாத ஒவ்வொருவரையும் கர்த்தரை ஆராதிக்க செய்வதற்காக உங்களை பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். தேவன் உங்களை நடத்த வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் குடும்பத்தை கர்த்தரிடத்தில் நடத்த வேண்டும். இதற்குகாக தான் முற்றிலுமான பரிசுத்தம் வேண்டும். ஏன் என்றால் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு நான் உங்களை பரிசுத்தப்படுத்தினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பரிசுத்தம் இல்லை என்றால் தேவனிடத்தில் பிரவேசிக்கவே முடியாது தேவனிடத்தில் நாம் நெருங்க வேண்டும் என்றால் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
நம்மைத் தேடுகிறவர்களுக்கு பலனை அளிக்கிறவர். நீ பரிசுத்தமாக இல்லை என்றால் தேவனிடத்தில் சேரவே முடியாது. நீ பரிசுத்தமாய் வாழ்ந்து ஆண்டவரே என்று நோக்கி கூப்பிட்டால் உங்கள் அருகில் அசைவாடுவதை நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். நீண்ட நேரம் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் பதில் மட்டும் வரவே இல்லை என்று சொல்பவரா நீங்கள்? உங்கள் தேவனாகிய கர்த்தரை பரிசுத்தமாய் நோக்கிப் பாருங்கள் உங்களுக்கு பதிலை தருகிற தேவனாய் இருக்கிறார். நீங்கள் ஜெபித்தும் பதில் கிடைக்கவில்லை என்றால் யார் காரணம்? நீங்கள் தான். நீங்கள் இன்னும் பரிசுத்தமாய் தேவனை நோக்கி பார்க்கவில்லை அல்லது தேடவில்லை எனவே தான் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை பரிசுத்தமாய் நோக்கி பார்ப்பீர்கள் என்றால் அவர் உங்களுக்கு பலன் அளிப்பார்.
நாம் ஏன் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென்றால் அவர் பரிசுத்தர் ஆகையால் நாமும் பரிசுத்தராய் இருக்க வேண்டும். தேவ தூதர்கள் ஓயாமல் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் போல நாமும் எந்நேரமும் தேவனை ஆராதித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆகையால் பிரியமானவர்களே தேவன் நமக்கு கொடுத்திருக்கிற முற்றிலுமான பரிசுத்தம் எதற்கு என்றால் தேவனுக்கு ஆசாரிய ஊழியம் செய்வதற்காக. ஏனென்றால் நம்மை முற்றிலுமாக பரிசுத்தம் ஆக்குகிறவர் தேவனே.
எப்படி பரிசுத்தம் உண்டாகும்?
நாம் எப்படி இருந்தால் பரிசுத்தம் உண்டாகும் என்பதை வேத வசனத்தின் மூலமாக பார்க்கலாம்
லேவியராகமம் 20:8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டு அதை அப்படியே செய்துவந்தாள் தேவன் உங்களை பரிசுத்தமாக்குகிற கர்த்தராக இருப்பார். நம்முடைய முன்னோர்கள் பெரும்பாலானோர் படிக்காதவர்கள் நாம் எல்லோரும் படித்தவர்கள் நாம் முன்னோர்கள் பெரும்பாலானோர் வேத வசனத்தை படித்து நடக்கவில்லை பழகி நடந்தார்கள் நாம் எல்லோரும் படித்து நடக்கிறோம் அவர்கள் ஆண்டவரை சீக்கிரமாய் பார்த்தார்கள் நாம் சீக்கிரமாய் பார்க்க முடியவில்லை அவர்கள் தேவனோடு எளிமையாக நடந்தார்கள் நாம் இன்னும் நடக்கவில்லை நாம் நடக்க முடியாததற்கு காரணம் என்னவென்றால் எனக்கு தான் எல்லாம் தெரியுமே பிறகு எதற்கு இன்னொருவர் என்று நாம் நினைக்கிறோம் முன்னோர்கள் எனக்கு ஒன்றும் தெரியாதே என்று சொன்னதினால் தேவனோடு நடந்தார்கள் நாம் என்ன செய்கிறோம் என்றால் படித்து விட்டோம் என்ற எண்ணத்தில் எனக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டாம் என்று சொல்லுகிறதினால் நாம் இன்னும் தேவனோடு நடக்க முடியவில்லை நீ பரிசுத்தமாக வேண்டும் என்றால் ஒரே ஒரு காரியம் தான் செய்ய வேண்டும் கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும்.
ஏன் பரிசுத்தமாக வேண்டும்?
லேவியராகமம் 21:6
6. தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அதாவது கெடுக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக. தகனபலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்களாக இருந்தால் கட்டாயமாக பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.
- தகனபலி:
தகனம் என்றாலே எரிப்பது, சாம்பலாக கொடுப்பது என்று அர்த்தம். உங்களை முற்றிலுமாக (ஆவி ஆத்துமா சரீரம்) அவருக்கு அர்ப்பணிப்பதே தகனம்.
ஒரு நாள் ஒரு ஊழியர் ஞானஸ்தானம் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பொழுது ஞானஸ்தானம் பெற வந்த நபர் ஒரு கையை மாத்திரம் வெளியே நீட்டிக்கொண்டு ஞானஸ்தானம் எடுத்தார். அப்பொழுது அந்த ஊழியர் சொன்னார் இதைப் போன்று கைகளை வெளியே நீட்டிக்கொண்டு ஞானஸ்தானம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு மீண்டும் அவருக்கு ஞானஸ்தானம் கொடுத்த போது மீண்டும் அவர் அதே காரியத்தை செய்தார் அப்பொழுது ஊழியர் கேட்டபோது அவர் வரும்போது என்னை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டார் அதனால் அவனை ஒரு அறையாவது அறைய வேண்டும் அதுவரை தண்ணீருக்குள் கைவிடமாட்டேன் என்று சொன்னார்.
இது என்னவென்றால் முற்றிலுமாக நாம் அர்ப்பணிக்கவில்லை மற்றவர்கள் மேலே உள்ள பகை எரிச்சல் கோபம் இவை அனைத்தையும் வைத்திருக்கிறதினால் நீ முற்றிலுமாக தகனிக்கப்படவில்லை அதாவது அர்ப்பணிக்கவில்லை. உங்களை அவமானப்படுத்தினவர்களை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் சும்மா இருங்கள் உங்களுக்காக நான் யுத்தம் பண்ணுவேன் என்று சொன்ன ஆண்டவர் உங்களுக்காக கண்டிப்பாக யுத்தம் பண்ணுவார் அவன் என்னை அவமானப்படுத்தி விட்டான் அதனால் நானும் அவனை அவமானப்படுத்துவேன் என்று நீ நினைத்தால் அவர் உன்னை விட்டுவிடுவார்.
யார் ஒருவன் தன்னை முற்றிலுமாக ஆண்டவருக்கென்று ஒப்புக்கொடுக்கிறானோ அவன் தான் முற்றிலுமாக தகனிக்கப்பட்டு வந்திருக்கிறான் எனவே கட்டாயமாக நீ பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.
லேவியராகமம் 21:7
7.அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.
- ஊழியம் செய்கிறவர்கள் (பரிசுத்தமானவர்கள்) வேசியை திருமணம் செய்ய கூடாது.
- ஊழியம் செய்கிறவர்கள் (பரிசுத்தமானவர்கள்) கற்பு குலைந்தவளை திருமணம் செய்ய கூடாது.
ஏனென்றால் அவர்கள் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் அவர்களை திருமணம் செய்த பிறகும் அப்படியே இருந்தால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படும்.
லேவியராகமம் 21:8
8.அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
- தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
பரிசுத்தம் என்பதை நீங்கள் தேவனுக்கு வெளிப்படுத்த வேண்டும் நான் பரிசுத்தத்தோடு வந்திருக்கிறேன் நான் பரிசுத்த கைகளோடு வந்திருக்கிறேன் நான் பரிசுத்த சிந்தையோடு வந்திருக்கிறேன் பரிசுத்த மனதோடு வந்திருக்கிறேன் என்று நீங்கள் தான் தேவனுக்கு முன்பாக உங்களை வெளிப்படுத்த வேண்டும்.
நீங்கள் எதற்காக பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென்றால் தேவனுக்கு உங்களை தகன பலியாக ஒப்புக்கொடுப்பதற்கும், அப்பத்தை செலுத்துவதற்கும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.
எனவே தேவனுடைய பிள்ளைகளே தேவன் விரும்புகிற தேவன் கொடுக்கிற பரிசுத்தத்தை பற்றி கொண்டே இருங்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
நாம் ஏன் நம்மை பரிசுத்தமாக வேண்டும்?
நெகேமியா 13:22 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.