கண்மணி போல் காத்தருள்வார் | Pastor B. E. Samuel | APA Church

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த ஜூன் மாதம் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் பார்க்கப் போகிற தேவனுடைய வார்த்தை என்னவென்றால் சங்கீத புத்தகம் 17:8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம்.

கண்மணியைப்போல என்னைக் காத்தருளும் என்றால் கண்ணின் இமை தனக்கு ஆபத்து வரும் நேரத்தில் கண்களை மூடி காப்பாற்றுகிறது போல கர்த்தர் உங்களை எல்லா தீங்கும் விலக்கி‌ காப்பார்.

உபாகமம் பகுதியில் பார்க்கும் போது 

உபாகமம் 32:10 பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.

கர்த்தர் பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் உன்னை கண்டுபிடித்தார். ஒரு உதவியும் கிடைக்காத இடத்தில் இருந்தாய், பாழான இடங்களில் இருந்தாய், விசாரிக்க ஆள் இல்லாமல் இருந்தாய், எதற்கும் பயன்படாத இடத்தில் இருந்தாய் அப்படி இருந்த உன்னை அவர் கண்டுபிடித்தார், நடத்தினார், உணர்த்தினார், தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். 

வாழ்க்கையிலே அநேக பிரச்சனைகள் இருக்காலம், ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பிக்கலம், எப்படியாவது உன்னை கீழே தள்ளுவது சாத்தானுடைய நோக்கமாய் இருக்கலாம் சகோதரியே / சகோதரனே கவலைப்படாதே கண்ணின் மணியை போல காக்கிற கர்த்தர் உனக்குண்டு.

எந்த காரியத்தில் காத்தருள்வார்?

1 இராஜாக்கள் 8:24  தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். 

  1. வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்:

உன்னை அழைக்கும் போதே, உன்னை தெரிந்து கொள்ளும்போதே அவர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார். உனக்கு அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டுமென்றால் அவரை அப்படியே பின்பற்ற வேண்டும் சிலர் வாக்குத்தத்தம் மட்டும் எடுத்துக் கொள்வார்கள் கர்த்தர் சொன்ன கட்டளைகளை வழிகளை பின்பற்றவே மாட்டார்கள் அப்படி என்றால் கர்த்தர் உன்னை எப்படி காத்தருள்வார். உன்னை கர்த்தர் காத்தருள வேண்டுமென்றால் அவருடைய வாக்குத்தத்தையும், அவருடைய வழியையும், அவருடைய கட்டளையும் பின்பற்ற வேண்டும்.

வசனத்தில் கவனித்து பாருங்கள் தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; என்று பார்க்கிறோம். தாவீது யார்? ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர் இவர் தேவனோடு இருந்தார் தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டுயிருந்தாலும் தேவனோடு ஐக்கியமாக வாழ்ந்தார், எப்பொழுதும் தேவனை துதித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார் இவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாலும் கர்த்தரோடு இருந்ததினால் அவரை கர்த்தர் ராஜாவாக்கினார். அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதுக்கு தான் கர்த்தர் வாக்குதத்தம் பண்ணினார்.

உன்னை அவர் எப்படி காப்பாற்றுகிறார் உன்னை எப்படி நடத்துகிறார் வாக்குத்தத்தினால் உன்னை காப்பாற்ற வல்லவராய் இருக்கிறார். தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். என்று 1 இராஜாக்கள் 8:24 வசனத்தில் பார்க்கிறோம்.

நீ ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் போது  அவருடைய வாக்குத்தத்தங்களை சொல்லி கூப்பிடும்போது அவர் உன்னை தம்முடைய வாக்குத்தத்தின்படியே உன்னை காப்பாற்றுவார்.

அப்படிதான் ஒரு சகோதரர் மலையின் மேலே எரி சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று கீழே விழுந்து விட்டார் அப்படி விழுகிற சமயத்தில் ஒரு மரக்கிளையை பிடித்துக் கொண்டு ஆண்டவரே என்னை காப்பாற்றும் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் அப்பொழுது ஒரு சத்தம் அவருக்கு கேட்டது அது என்னவென்றால் அந்தக் கிளையை விட்டு விடு என்று, இந்த சகோதரருக்கு பயம் ஆனால் ஆண்டவர் மீண்டும் சொன்னார் அந்தக் குரலைக் கேட்டு ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அதை விட்டு விட்டான் ஆனால் அவனுக்கு எந்த ஆபத்தும் நேரிடவில்லை ஏன் என்றால், அங்கே சினிமா படப்பிடிப்புகாக போடப்பட்டிருந்த வலை அங்கே இருந்தது அதனால் அவர் காப்பாற்றப்பட்டார். 

அருமையான தேவனுடைய பிள்ளையே கர்த்தர் உனக்கு வாக்குத்தத்தம் அருளி அதனைக் கொண்டு உன்னை காப்பாற்றுகிறார்.

  1. ஜெபம்:

1 நாளாகமம் 4:9 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

1 நாளாகமம் 4:10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

இந்த வசனத்தை நன்றாக கவனித்தீர்கள் என்றால் யாபேஸ் தன் சகோதரரை பார்க்கிலும் கனம் பெற்றவனாக இருந்தாலும் அவன் தாய் அவனை துக்கத்தோடு பெற்றதினால் அவனுக்கு யாபேஸ் என்று பேர் வைத்தார். ஆனால் யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி தேவரீர் என்னை ஆசீர்வதித்து என் எல்லையை பெரிதாக்கி உமது கரம் என்னோடு இருந்து தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று ஜெபம் பண்ணிக் கொண்டான் தேவன் அவருடைய ஜெபத்தை கேட்டு அவருக்கு பதில் கொடுத்ததாக 1 நாளாகவும் 4 அதிகாரம் 10 ஆம் வசனத்தில் பார்க்கிறோம். நன்றாக கவனியுங்கள் தேவன் உன் ஜெபத்தின் மூலமாக உன்னை காப்பாற்றுவதற்கு உன்னை நடத்துவதற்கு அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார். முதலில் நாம் வாக்குத்தத்தத்தை கொண்டு காப்பாற்றப்படுகிறோம் இரண்டாவதாக உங்களுடைய ஜெபத்தினாலே காப்பாற்றப்படுகிறோம்.

ஜெபம் இரட்சிக்கப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது. விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லை என்றாலும் ஜெபம் கண்டிப்பாக பண்ண வேண்டும்.

உன் வாழ்க்கையில் ஜெபம் இல்லை என்றால் ஜெயம் உன் வாழ்க்கை இல்லை என்று அர்த்தம். எதை எடுத்தாலும் தோல்வியாக முடிகிறது எதை செய்தாலும் தோல்வியாக முடிகிறது இது அனைத்திற்கும் காரணம் உன் வாழ்க்கையில் ஜெபம் இல்லாததுதான் அருமையான சகோதரனே, சகோதரியே உன் வாழ்க்கையில் தோல்வியாக இருக்கிற காரியங்கள் வெற்றியாக மாற வேண்டும் என்றால் ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் மிக மிக முக்கியமானது. உனக்கு பிரச்சனைகள் வரும் போது யாரோ ஒருவரிடம் சென்று மணி கணக்கில் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாய், ஒரு மணி நேரம் தேவனுடைய சமூகத்தில் உட்கார்ந்து ஜெபம் பண்ணிப்பார் உன்னுடைய பிரச்சினைகள் உனக்கு விரோதமாக எழும்பின ஆயுதங்கள் வாய்க்காமல் போகும். அதற்கு நீ ஜெபம் செய்ய வேண்டும்.

  1. உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.

2 நாளாகமம் 6:15  தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.

இந்த வசனத்தை நன்றாக கவனித்து பாருங்கள் அவர் தம்முடைய வாயினால் சொன்னதை தன்னுடைய கரத்தினாலே நிறைவாக்குகிறார் என்று பார்க்கிறோம். கர்த்தர் ஆகிய ஆண்டவர் ஒரு சிலருக்கு வார்த்தையினால் சுகத்தை கொடுத்தார் ஒரு சிலருக்கு தம்முடைய கரங்களினாலே சுகத்தை கொடுத்தார். அவர் தம்முடைய வாயினால் சொன்னதை அப்படியே நிறுத்திக் கொள்ளாமல் தன்னுடைய கரத்தினாலே அதை நிறைவாக்குகிற ஆண்டவராய் இருக்கிறார்.

அருமையான சகோதரனே சகோதரியே கர்த்தராகிய ஆண்டவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் உனக்கு வாழ்க்கையிலே அற்புதங்கள் நடக்கும் உனக்கு தடையா இருக்கிற காரியங்கள் மாறும் உனக்கு விரோதமாய் இருக்கிற எல்லாம் விலகி போகும் கர்த்தர் உனக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

கண்மணி போல் காப்பாற்றுகிறவர் வாக்குத்தத்தினாலே, கண்மணி போல் காப்பாற்றுகிறவர் ஜெபத்தினாலே, கண்மணி போல் காப்பாற்றுகிறவர் வார்த்தையினாலே அவருடைய கையின் கிரியையினாலே உன்னை காக்கிறவராக இருக்கிறார்.

  1. சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்

சங்கீதம் 64:1  தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

  • தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்;

தேவனே என் விண்ணப்பத்தில் அதாவது என் ஜெபத்தின் சத்தத்தை கேட்டருளும் என்று சங்கீதத்தில் பார்க்கிறோம் அருமையான சகோதரரே சகோதரியே உன் ஜெபம் கர்த்தருடைய சமூகத்தில் விசேஷித்து கேட்கப்படுவதாக இருக்க வேண்டும் ஏதோ கடமைக்கு செய்தோம் என்று இல்லாமல் உன்னுடைய ஜெபம் கருத்துள்ளதாக இருக்க வேண்டும் செய்யப்படுகிற ஜெபம் கர்த்தருடைய சமூகத்தில் வந்து எட்டத்தக்கதாக இருக்க வேண்டும். உன்னுடைய ஜெபம் கர்த்தருக்கு பிரியம் உள்ளதாக இருக்க வேண்டும்.

  • சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

பயம் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் பிரச்சனைக்குரியது சத்துரு நம்மை முதலில் அழிக்கும் காரியம் பயம். உன்னை தேவனிடத்தில் சேராதபடிக்கு உன்னை ஜெபம் செய்ய விடாமல் இருப்பதற்கு அவன் செய்கின்ற காரியம் உனக்கு பயத்தை ஏற்படுத்துவது தான். சத்துருவாள் வரும் பயத்தை நீக்கி உன் பிராணனை காத்தருள வேண்டும் என்றால் அந்த பயத்தை முதலில் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். 

  1. உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்

சங்கீதம் 71:2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.

உமது நீதியினிமித்தம் என்றால் சித்தம், (அல்லது) விசுவாசம். சித்தம் என்பது தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது. விசுவாசம் என்பது தேவனுடைய நீதி 

நீ தேவ சித்தத்தின்படி காப்பாற்றப்பட வேண்டும், உன் விசுவாசத்தின் படியும் நீ காப்பாற்றப்பட வேண்டும். இன்று நம்மில் அனேகர் விசுவாசம் இல்லாமல் ஜெபித்துக்  கொண்டிருக்கிறோம். தேவனுடைய சித்தம் இல்லாமல் ஜெபம் செய்து கொண்டிருக்கிறோம் இது மாதிரியான ஜெபம் கர்த்தருடைய சன்னதியில் சேராது அருமையான சகோதரரே சகோதரியே உன்னுடைய ஜெபம் தேவனுடைய சித்தத்தை அறிகின்றதாக இருக்க வேண்டும் மற்றும் விசுவாசத்தில் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

எனவே அருமையான தேவனுடைய பிள்ளைகளே நாம் ஆராதிக்கிற தேவன் நம்மை காப்பாற்ற வல்லமையுள்ள தேவனாக இருக்கிறார் சாதாரணமாக அல்ல கண்மணி போல காக்க வல்லவராயிருக்கிறார் அருமையான தேவனுடைய பிள்ளைகளே உன்னை அவர் தமது வாக்குத்தத்தங்களை கொண்டு கண்மணி போல காக்கவல்லவர் இரண்டாவது உன் ஜெபத்தை கேட்டு காத்தருள வல்லவர் மூன்றாவது கரத்தால் காக்க வல்லவராயிருக்கிறார் நான்காவது சத்துருவால் வரும் பயத்துக்கு விலக்கி காத்தருள வல்லவர் ஐந்தாவது அவர் தமது நீதியால் காக்க வல்லவராயிருக்கிறார் எனவே அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீ ஆராதிக்கிற தேவன் உன்னோடு உன்னை காத்தருள்வார்.

கர்த்தர் தாமே உன்னோடு இருக்கிறார் அல்லேலூயா ஆமென்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *