உன் ஜெபம் கேட்கப்பட்டது | PASTOR B. E. SAMUEL

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த மாதம் சாரோனின் ரோஜா இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நாம் பார்க்கப் போகிற தேவனுடைய வார்த்தை என்னவென்றால் அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 31. என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம்.

“கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது – அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31”

முதலாவது கொர்நேலியு யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் இவர் செசரியாப்பட்டணத்தில் இருக்கிற இத்தாலிய  பட்டாளத்தில்(இராணுவத்தில்) நூற்றுக்கு அதிபதியாக அதாவது நூறு போர் வீரர்களுக்கு கேப்டனாக அதிபதியாக இருந்து பணி புரிகிறவராக காணப்படுகிறது கொர்நேலியு தெய்வ பக்தி நிறைந்தவராகவும் தன் வீட்டார் அனைவரோடும் தேவனுக்கு பயந்து வாழ்ந்தவராகவும் ஜனங்களுக்கு எப்பொழுதும் மிகுந்த தான தர்மங்கள் செய்கிறவராகவும் தேவனை நோக்கி எப்பொழுதும் ஜெபிக்கிறவராகவும் வேதம் சொல்லுகிறது

இவர் யூதர் அல்ல, யூத மார்க்கத்தை சேர்ந்தவரும் அல்ல, கிறிஸ்தவரும் அல்ல இவர் செசரியா பட்டணத்து ரோமனாகவும் இத்தாலிய பட்டாளத்து நூற்றுக்கு அதிபதியாகவும் இருக்கிறார் என்று கவனித்து பாருங்கள் . இத்தாலியப்பட்டணம் முழுவதும் ரோமர்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தனர் கொர்நேலியு அந்த பட்டணத்திலே நூற்றுக்கதிபதியாக இருக்கிறார். 

ரோமர்களுக்கு சீஷர் (ராஜா)  தான் தெய்வம்.  ரோமர்கள் பல தெய்வ வழிபாடுகள் கொண்டவர்கள்

அவன் தேவபக்தியுள்ளவன்:

கொர்நேலியு தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

இவர் தெய்வ பக்தி உள்ளவராக மட்டுமல்ல தன் குடும்பத்தார் அனைவரோடும் கூட தேவனுக்கு பயந்தவராக இருந்தார். இந்த காலங்களில் குடும்பத்தில் ஒருவர் மட்டும் தேவனுக்கு பயந்து வாழ்பவர்களாக இருப்பார்கள் மற்றவர்கள் தேவனைப் பற்றி அறியாதவர்களாக இருப்பார்கள் இதைப் போன்று இருக்கக் கூடாது உங்கள் குடும்பம் முழுவதும் தேவனுக்கு பயந்தவர்களாக, பக்தி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இவர் நூற்றுக்கு அதிபதியாக இருந்தும் கூட தன் வீட்டார் அனைவரையும் தேவனுக்கு பயப்படுகிற பயத்தோடு, பக்தியோடும் நடத்தி வந்தவார். நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்களுடைய வீட்டை தேவனுக்கு பயப்படுகிற பயத்தோடு, பக்தியோடு நடத்தவில்லை என்றால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பை. உங்கள் வீட்டை நீங்கள் பக்தியாக நடத்த வேண்டும் கொர்நேலியுவை பாருங்கள் நூற்றுக்கு அதிபதியாக இருந்தும் தெய்வ பக்தி உள்ளவனாகவும் தன் குடும்பத்தார் அனைவரையும் பயபக்தியுடன் நடத்துகிறவனாகவும் இருந்தார். 

ஒரு சிலர் தன்னுடைய ஏழ்மை நிலையிலேயே கர்த்தரை தேடுவார்கள் கொஞ்சம் பணம் இருந்தால் தேவனை தேட மாட்டார்கள் ஏன் என்று கேட்டால் எனக்கு எல்லாமே கிடைக்கின்றது நான் ஏன் தேவனை தேட வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நூற்றுக்கதிபதி தான் தேவனை தேடினதும் அல்லாமல் தன் வீட்டாரையும் தேவனை தேடுகிறவர்களாக பக்தி உள்ளவர்களாக நடத்தி வந்தார் இது முக்கியமானது நீங்கள் பக்தியாக இருந்தால் மட்டும் போதாது, சொந்த குடும்பத்தை பக்தி உள்ளவர்களாக நடக்க செய்ய வேண்டும்.

தருமங்களைச் செய்தான்:

அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

ரோமர்கள் என்றாலே யூதர்களுக்கு அருவருப்பானவர்கள். ஆனால் இந்த ரோமன் ஜனங்களுக்கு தர்மம் செய்வதினாலே ஜனங்கள் எல்லோரும் அவன் பட்சமாய் மாற தேவன் அவனுக்கு உதவி செய்தார்

எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்:

நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? ஒரு சிலர் சொல்வார்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவனை தேடுவேன் என்று கவனித்து பாருங்கள் கொர்நேலியு இவர் நூறு போர் வீரர்களுக்கு அதிகாரியாக பணிபுரிந்து கொண்டு தன் சொந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும் இவருக்கு ஓய்வு கிடைப்பது என்பது கடினமான காரியம் ஆனாலும் இவர் எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார் நேரம் கிடைக்கும்போது அல்ல எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் செய்து கொண்டிருந்தார் நாம் சும்மாவே இருந்தாலும், சும்மாவே படுத்துக் கொண்டிருந்தாலும், சும்மா அமர்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தாலும் ஜெபம் செய்கின்ற பழக்கம் நம்மிடம் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை கவனியுங்கள் இந்த நூற்றுக்கு அதிபதி இவர் நூறு பேருக்கு தலைவர், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதற்கு மத்தியில் எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான்.

“பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, 

அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

-அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3,4″

தேவ தூதன் கொர்நேலியுவை பார்த்து உன் ஜெபம் மட்டுமல்ல உன் தர்மங்களும் தேவனுடைய சன்னதியில் வந்தெட்டியது. 

தர்மம் செய்வது மிகவும் முக்கியமானது எனக்கு பழக்கமான நண்பர் ஒருவர் நாங்கள் சென்னையில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திருநங்கை சகோதரி காரின் கதவைத் தட்டி உதவி கேட்டுக் கொண்டிருந்தார்கள் என் நண்பர் தர்மம் செய்தார் நான் ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் நாம் உதவி செய்யவில்லை என்றால் பிறகு யார் உதவி செய்வார்கள் என்று சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாயிற்று. ஏனென்றால், நான் அப்படியெல்லாம் செய்ததில்லை மிகவும் ஏழ்மையானவர்களுக்கு மற்றும் முடியாதவர்களுக்கு தான் தர்மங்களை செய்துள்ளேன் ஆனால் திருநங்கைகளுக்கு உதவியது இல்லை எனக்குள்ளே மிகவும் வருத்தப்பட்டேன் பிறகு எங்கள் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் காரின் கதவை தட்டி உதவி கேட்டுக் கொண்டிருந்தார் உடனே என் நண்பரின் ஞாபகம் வந்தது நான் அவருக்கு உதவினேன். 

நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றால் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது – அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:31″

இப்படிப்பட்டவனுடைய ஜெபத்தை தான் தேவன் கேட்கிறார்.

உங்கள் ஜெபம் கேட்கப்பட்டதா?

உங்கள் ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை என்று ஒரு கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 2 வசனம் தெளிவாக சொல்லுகிறது அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். நம்மில் சிலர் நேரம் கிடைக்கும்போது ஜெபம் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள். நேரம் கிடைக்கும் போது ஜெபம் பண்ணுவது சம்பிரதாயம். நீ தேவனுக்காக நேரத்தை ஒதுக்கி ஜெபம் பண்ணுவது ‌வாஞ்சை. நீங்களும் நேரத்தை ஒதுக்கி ஜெபம் பண்ணுங்கள் உங்கள் ஜெபம் கேட்கப்படும்.

தானியேல்:

இவர் ஒரு யூதர்.

இவர் சிறையாக பாபிலோனுக்கு கொண்டு போகப் பட்டவர்.

பாபிலோனுடைய கலாச்சாரங்களை இவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது ஆனால் அவர்களுடைய கலாச்சாரத்தை இவர் எடுத்துக் கொள்ளாதவராக காணப்படுகிறது 

மற்றவர்கள் இடத்திற்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வார்கள் ஆனால் யூதர்கள் அப்படி மாற்றிக் கொள்ள மாட்டார்கள். 

சில பேர் போகும் இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார்கள் ஏன்னென்று கேட்டால் ஊரோடு ஒத்து வாழு என்று சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் எங்கு இருந்தாலும் தேவனுடைய பிள்ளைகளாக தான் வாழவேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளக்கூடாது. 

நீங்கள் தானியலை போல வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அவர் தன்னை எதற்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு சூழ்நிலை வந்தது 120 தேசாதிபதிகள் இருந்தார்கள் அதில் ஒருவராக தானியேல் இருந்தார். தானியல் தவிர மற்ற தேச அதிபதிகள் தானியல் எதற்காகவும் நம்மோடு இணைந்திருக்கவில்லை என்று தானியலின் மேல் மற்ற தேசாதிபதிகளுக்கு கஷ்டமாக இருந்தது எனவே தேசாதிபதிகள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு செய்தார்கள். இவர்கள் ராஜாவிடம் சென்று ராஜாவே 30 நாட்களுக்கு ராஜாவாகிய உம்மைத் தவிர வேறொருவரையும் சேவிக்க கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். 

ராஜாவுக்கு தானியலைப் பழி வாங்க தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியாமல் உத்தரவை பிறப்பித்தார் ஏன்னெறால் தானியலின் மேலே ராஜாவுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. கட்டளையை பிறப்பித்த பிறகு யோசிக்கிறார் நாம் இப்படி செய்து விட்டோமே என்று, ஆனால் தானியல் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தன் வழக்கத்தின் படியே தேவனை நோக்கி ஜெபம் செய்து கொண்டுயிருந்தான்.  ஆனால் தேசாதிபதிகளின் சட்டம் என்னவென்றால் ராஜாவைத் தவிர வேறு யாரையும் சேவிக்க கூடாது என்று அதனால் தானியேல் குற்றவாளியனார்‌ தேசாதிபதிகள் வந்து மிகவும் சந்தோஷப்பட்டு தானியேலை கொன்று விட்டோம் என்று மிகுந்த சந்தோஷப்பட்டார்கள். ராஜா தானியேலை காப்பாற்றுவதற்காக என்னென்னமோ முயற்சிகளை செய்து பார்க்கிறார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

அதனால் தானியேலை சிங்கங்களின் குகையிலே கொண்டு போய் போட்டார்கள். ராஜா இராமுழுவதும் தூங்காமல், திராட்சை ரசம் குடிக்காமல், கீத வாக்கியங்களை தன்னிடம் சேர்த்துக் கொள்ளாமல் பொழுது விடிந்ததும் சிங்கங்களின் குகைக்கு சென்று துயரக் குரலாக தானியலே ஜீவன் உள்ள தேவனுடைய தாசனே உன்னை விடுவிக்க தேவன் வல்லவராக இருந்தாரா என்று ராஜா கேட்டார் அதற்கு தானியேல் என் ராஜாவே நீர் என்றும் வாழ்க சிங்கங்களின் வாய்களுக்கு என்னை தப்புவிக்க தேவன் வல்லவராக இருந்தார். உடனே சிங்க கெபியிலிருந்து தானியலை எடுத்து விட்டு மற்ற தேசாதிபதிகளையும் அவர்களின் மனைவிகளையும் அவர்களின் பிள்ளைகளையும் சிங்கங்களின் கெபியில் போட்டார்கள் அவர்கள் சிங்க கெபியில் உள்ளே செல்வதற்குள்ளவே சிங்கம் அவர்களை பசித்து போட்டது.

நீங்கள் ஆராதிக்கிறவர் சாதாரணமானவர் அல்ல அவர் அசாதாரணமான தேவன். உங்களைக் காப்பாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். 

“நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். தானியேல் 9:23”

நீங்கள் எந்நேரமும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தால் உங்களுக்கு  எப்பேர்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதை தேவன் இல்லாமல் போக செய்திடுவார். நீங்கள் ஜெபம் செய்வது உதடு அளவு தான் ஜெபம் செய்கிறீர்கள், உங்கள் உள்ளத்தில் இருந்து ஜெபம் செய்யவே இல்லை. நீங்கள் உள்ளத்தில் இருந்து ஜெபிக்கும் போது தேவன் உங்களுக்கு அறிவை உணர்த்துவார். 

நீங்கள் ஜெபம் பண்ணும் போது இவ்வாறு பதில் வர வேண்டும் பிரியமானவனே/ பிரியமானவளே இன்று பதில் வர வேண்டும் இதுவரை அப்படி வரவில்லை என்றால் நீங்கள் செய்கின்ற ஜெபத்தில் தான் குறை உள்ளது உங்களின் மேல் அல்ல. அந்த குறையை கண்டுபிடிங்கள். உங்கள் ஜெபம் ஆண்டவருடைய சன்னதியில் போய் சேரும்படியாக ஜெபிக்க வேண்டும் அப்படி ஜெபித்தால் நீ மிகவும் பிரியமானவன் என்று தேவன் அழைப்பார் நீ வேண்டிக் கொள்வதற்கு முன்னமே கட்டளையை பிறப்பிப்பார்.
நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். தானியேல் 9:23″

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *