சீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள், இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயம் ” புதிய எருசலேம் ஆலயம்” என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 1717 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் லுத்தரன் திருச்சபைக்காக இத்தேவாலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் நிற்கிறது.
சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன, இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனேரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 8 (நான்கு மாத சிறைவாசம்)