பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 6 (கடற்பயணம்)

கடற்பயணம் :

கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க்கில் இருந்த கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடையூறு செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷனெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது.

மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் 1705ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் நாள் இருவரும் மன்னர் சார்பில் அவருடைய செலவில் இந்தியாவிற்கு தரங்கம்பாடியிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். இவர்கள் பயணத்தின் போது, அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும், கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், நேரடியாகக் கண்ட சீகன்பால்க் தனது கடற்பயணத்தை, ” மரணக் கல்விச் சாலை ” ( Academy of death ) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது ” The General School of True Wisdom ” என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் சீகன்பால்க் அவர்களின் உருவச்சிலை வெளியிடப்பட்டது.

அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலைவனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும் பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்திற்கு பிறகு 1706ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர் தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது. கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரையில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் அவர்களை அனுப்பியிருந்தால், அவர்கள் மன்னரின் உளவாளிகளாய் இருப்பார்கள் என்ற சந்தேகத்தால் அவர்களுக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை, அவர்களின் வருகை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னருக்கும், டேனிய போதகர்களுக்கும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் கப்பலிலிருந்து கரை வந்து சேர மூன்று நாட்கள் படகுகள் கொடுக்கப்படவில்லை. இறுதியாக அந்தக் கப்பல் இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால்வைத்த நாள் இந்தியாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன்னினால் பொறிக்கப்பட வேண்டியதொரு நாள் 1706ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணிக்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.

அரசர் கொடுத்தனுப்பிய கடிதத்தை கவர்னர் இடம் கொடுக்க வேண்டும். ஆனால் கவர்னரோ இவர்களை அழைக்க ஆட்களை அனுப்பாமல் தாமதித்துக்கொண்டிருந்தார். கவர்னர் ஹாசியஸ் (commander J . C . Hassius) யைச் சந்திக்க காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை காத்துக் கிடந்தனர். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் ஜெபித்துக் கொண்டு அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ஹேசியஸ் என்பவர் அவர்களை வந்து சந்தித்து,“ யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். இறுதியில் அந்த இரு மிஷனெரிகளையும், அந்த அதிகாரி அழைத்து சென்றார்.

அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட் போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறைந்து விட்டான், மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல், எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். தேவன் இவர்களை கைவிடவில்லை. முடிவில் போர்ச்சுக்கீசியருடைய அடிமைகள் தங்கும் இடத்தில் தங்கினர். பின் அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவதற்கு இடமளித்தார். நாட்கள் சென்றது, இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மானியர்கள் சீகனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர். மிஷனேரி ஊழியத்தை விரும்பாத டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் அநேக விதங்களில் இவர்களை துன்புறுத்தினர்.

தமிழ் மொழி கற்றலின் ஆரம்ப முயற்சி தொழிற்சாலையின் அலுவல் மொழியான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாகவே இருந்தது.

சீகன்பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப்பழகினார்.

பின் ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் தினமும் 9 மணி நேரம் கற்று 8 மாதங்களில் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளில் கற்றதை வாசிக்கவும், பிறர் வாசிப்பதை கவனமாய் கேட்டு, தெருக்களிலும், சந்தைகளிலும், கடைகளிலும் சந்திக்கின்ற யாவருடனும் தமிழில் பேசி அதன்மூலம் தமிழில் தேர்ச்சி பெற்றனர். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும் கற்றார்.

பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 7 (அருட்பணி தொடக்கம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *