பர்த்த லோமேயு சீகன்பால்க் – அச்சு எந்திரம்: (Bartholomlaus Ziegenbalg) – 10

இந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன. “ கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்” (SPCK – Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றினர். பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் பணம் கொடுத்து மீட்கப்பட்டன. 1712ல் தரங்கம்பாடிக்கு அச்சுப்பொறி வந்துசேர்ந்தது. மேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713ல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் தமிழ் புதிய ஏற்பாட்டின் முதல் பாகம் 1714லிலும், இரண்டாம் பாகம் ஜூலை 15 , 1715லிலும் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. புதிய ஏற்பாட்டை அச்சேற்றியபோது அதற்கு “வேதபொஷ்த்தகம் என்று பெயர் கொடுத்தார். இவ்வரிய தொண்டினால் வேதாகமம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. 1715ஆம் ஆண்டு, சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிக்குப் பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். அவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ல் நவம்பர் மாதம் மரியா டாரதியை திருமணம் செய்தார். இந்த புதுமணத் தம்பதியர் ஆகஸ்டு 1716ல் இந்தியா வந்தனர். இவர்கள் 1716ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.

பர்த்த லோமேயு சீகன்பால்க் – சீகன்பால்க்கின் பிறபுத்தகங்கள்(Bartholomlaus Ziegenbalg) – 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *