பரிசுத்த ஆவி |Rev. B.E. Samuel

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.கடந்த மாத செய்தியில் ஞானஸ்நானம் நமக்கு எவ்வளவு முக்கியமோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அவ்வளவு முக்கியம் என்பதை  தியானித்தோம். இன்றைக்கும் அதன் தொடர்ச்சியாக பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதற்கு உண்டாகும் தகுதிகள் என்ன என்ற தலைப்பில் தியானிக்க போகிறோம்.

யோவான் 3:5 -இல் இயேசு சொல்வதை கவனியுங்கள். ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லுகிறார்.

ஞானஸ்நானத்தையும் பரிசுத்த ஆவியையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முக்கியப்படுத்தி பேசுகிறதை நாம் இங்கு பார்க்கிறோம்.

1. நீதி ,தேவபக்தி, வருகைக்கு காத்திருத்தல்:

லூக்கா 2:25 வது வசனத்தில் சிமியோன் என்ற பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும், தெய்வபக்தியும் உள்ளவனாய், இஸ்ரவேலின் ஆறுதல் வர காத்திருக்கிறவனாய் இருந்தான். அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார். பிரியமானவர்களே பரிசுத்த ஆவி நம்மேல் இருக்க வேண்டும் என்று சொன்னால் சில தகுதிகள் நமக்கு அவசியமாக இருக்கிறது. இதற்கு ஆதாரமாக இங்கே சிமியோனுக்குள் இருந்த சில தகுதிகளை  நாம் பார்க்கலாம்.

1.            நீதியும் உள்ளவராகவும்,

2.            தேவபக்தி உள்ளவராயும்,

3.            இஸ்ரவேலின் இரட்சிப்பு (ஆறுதல்) வர காத்திருந்தவராகவும் இருந்தார்.

ஆகவே வேதத்தில் சொல்லப்படுகின்ற இந்த ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்க வேண்டுமென்றால். நீங்கள் தேவனுடைய நீதி உள்ளவர்களாயும், தேவபக்தி உள்ளவர்களையும், தேவனுடைய வருகைக்கு காத்திருக்கிறவர்களாயும் இருக்க வேண்டும் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஒருவன் மேல் கர்த்தருடைய ஆவி இருக்கவேண்டும் என்றால் மேற்கண்ட  தகுதிகள் காணப்பட வேண்டும்.

2. ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடிவருதல்:

அப்போஸ்தலர் 2:4 ஆம் வசனத்தில் வாசிக்கும்போது அங்கு எல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடி வந்தார்கள். அது எந்த நாள், எந்த இடம், என்று சொன்னால் பெந்தெகோஸ்தே என்னும் நாளிலே மேல் வீட்டறை ஒன்றிலே ஏறக்குறைய 120 பேர் ஒன்றாய் கூடி வந்திருந்தார்கள். அக்கினி மயமான நாவுகள் பிரிந்து அவர்கள்மேல் வந்து அமர்ந்தது. எல்லோரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள் என்று சொல்லியிருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசினார்கள் என்று நம்மால் பார்க்கமுடிகிறது. 

இதில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமானதொரு காரியம்   ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடிவந்தார்கள். எப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆளுகை செய்வார். எப்பொழுது ஆட்கொள்வார் என்று சொன்னால் ஒரு மன படவேண்டும் ஓரிடத்தில் கூடி வரவேண்டும் ஒருமனம் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

3. மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்;:

அப்போஸ்தலர் 2:38 ஆகிய வசனங்களை  நன்றாக வாசித்து கவனிப்போமேயானால் புரிந்து கொள்வதற்கு அல்லது ஆவியின் வல்லமையை பெற்றுக் கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கும். மேல்வீட்டறையிலே கூடியிருந்த  120 சீடர்களில் பேதுரு பரிசுத்த ஆவியில் நிறைந்து பேசுகிறார். 3000 பேர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள் அவர்கள்  மத்தியில் உரைத்தது என்னவென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்பி அவரவர் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற வேண்டும். அப்படி பெறும்போது  பரிசுத்த ஆவியின் வரத்தை நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லுகிறார்.

பேதுரு சொல்கிறதை கவனியுங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் முதலாவது மனம் திரும்பவேண்டும் இரண்டாவது ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவேண்டும். ஏதோ கூட்டத்தோடு கூட்டமாக  ஞானஸ்நானம் எடுப்பதல்ல மனம் திரும்பின பிறகு தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். இனி என் வாழ்க்கை இயேசுவோடு மட்டும்தான் என்கிற மனம் திரும்புதல் அவசியம் தேவை.

இனி இயேசுவுக்குப் பின் செல்வேன்  இனி பாவத்தை பார்க்க மாட்டேன் இனி சிலுவை எனக்கு முன்னே உலகம் பாவம் எனக்கு பின்னே என்கிற ஒரு மனம் திரும்புதல் மெய்யான மனம் திரும்புதல் நமக்கு அவசியமாக காணப்படுகிறது. அப்படி மெய்யாக மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும் பொழுது நாம் பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்றுக் கொள்வோம்.

4. கீழ்ப்படிதல் மூலம் பரிசுத்த ஆவியின் வரம்:

அப்போஸ்தலர் 5:32 இந்த வசனத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கிற சத்தியம் மிக முக்கியமானது. தேவன் யாருக்கு பரிசுத்த ஆவியை கொடுக்கிறார் என்பதை இந்த வசனத்தின் மூலமாக பார்க்கிறோம். தேவனுக்கு கீழ்ப்படிக்கிறவர்களுக்கு பரிசுத்தஆவியை தருகின்றார்.

அப்படியானால் தேவனுக்கு கீழ்படிவதற்க்கும் பரிசுத்தஆவி நமக்கு தேவைப்படுகிறது இந்த வசனத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தேவனுக்கு கீழ்ப்படிகிற அனுபவம் கீழ்ப்படிகிற மாற்றம் நமக்குள் வரவேண்டும். கீழ்ப்படிதல் இல்லாமல் ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. கீழ்ப்படிதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான ஒரு காரணமாக இருக்கிறது.

5. நன்மை செய்தல்:

அப்போஸ்தலர் 10:38 வது வசனம் மேற்கண்ட அனைத்து வாக்கியங்களை பார்கிலும் மிக முக்கியமான வாக்கியம் என்று சொல்லலாம். தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார் தேவன் அவரோடு கூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராகவும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாகிறவராகவும் சுற்றித் திரிந்தார் என்று வேதம் சொல்லுகிறது.

நசரேயனாகிய இயேசுவே பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் நிரப்பபட வேண்டியது அவசியமானால் நாமும் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் நிரப்பப்பட வேண்டியது மிக அவசியம். அப்பொழுது தான் தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வேதம் சொல்கிறது. தேவன்  இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். நாமும் தேவனோடிருந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் பொழுது நம்மோடு கூட, நமக்குள்ளே அவர் வருகிறார், நம்மை அனைத்து கொள்கிறார். நம்மை பார்க்கிறவர்கள் நம்மை மாத்திரமல்ல நமக்குள்ளே இருக்கின்ற தெய்வத்தையும் தெய்வத்தினுடைய மகத்துவத்தை தெய்வத்தினுடைய வல்லமையை காண முடியும் இதைத்தான் வேதம் தெளிவாக சொல்கிறது.

6. பகைவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்:

அப்போஸ்தலர் 13: 9 வசனத்தை தியானிக்க போகிறோம் அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியில் நிறைந்தவனாய் அவனை உற்றுப் பார்த்து எல்லா கபடமும் எல்லா பொல்லாங்கும் நிறைந்தவனே பிசாசின் மகனே நீதிக்கெல்லாம் பகைஞனே கர்த்தருடைய செம்மையான வழியை புரட்டுவதில் ஓயமாட்டாயா என்று கேட்கிறான் நன்றாய் கவனியுங்கள்

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் பொழுது கர்த்தருடைய வழியை புரட்டுகிறவர்களை நாம் தடுக்க முடியும் கர்த்தருடைய வழியைக் கெடுக்கிற மக்களை நாம் தடுத்து ஆட்கொள்ள முடியும்.அவர்களை தடுக்க தைரியம் எப்போது நமக்கு வரும் என்றால் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும் போது மட்டுமே.

வாக்கியத்தை கவனியுங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப் பார்க்கும்போது அவனிடம் கபடம் காணப்படுகிறது பொல்லாங்கு காணப்படுகிறது பிசாசின் மகனாக காணப்படுகிறான், நீதிக்கு எல்லாம் பகைஞனாக இருக்கிறான,; சதாகாலமும் கர்த்தருடைய வழியைக் புரட்டுவதிலேயே அவனுடைய முழு கவனம் இருக்கிறது என்று சொல்லி பார்க்கிறோம்.

இப்படிப்பட்டவர்களை பிசாசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் நமக்கு பரிசுத்தாவியின் அபிஷேகம் வல்லமை  தேவை. அப்படியானால் பரிசுத்தாவியோடு கூடிய வல்லமையும் அபிஷேகம் இன்னும் அதிகமதிகமாய் நமக்கு தேவைப்படுகிறது. ஆகையால் அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதில் சிறிதுகூட காலதாமதம் செய்யாமல் விரைவில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

7. அந்நியபாஷை பேசுதலும் தீர்க்கதரிசனம் உரைத்தலும்:

அப்போஸ்தலர் 19:6 அல்லாமலும் அவர்கள்மேல் கைகளை வைத்த பொழுது பரிசுத்தஆவி அவர்கள் மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளை பேசத் தொடங்கினார்கள். அந்நிய பாஷைகளைப் பேசி தீர்க்க தரிசனம் சொன்னார்கள்.

நன்றாய் கவனியுங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் அந்நியபாஷையை பேசி தீர்க்கதரிசனமும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது தீர்க்கதரிசனம் அல்ல அது பரிசுத்தஆவியும் அல்ல. அது பிசாசினுடைய தரிசனம். அது குறி சொல்லுதல் என்று சொல்லி சொல்வார்கள். இன்றைக்கும் இப்படி சொல்லுகிற ஊழியக்காரர்கள் இருக்கின்றார்கள் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வேதம் சொல்லுகிறபடி பரிசுத்தாவியில் நிறைந்து ஆண்டவர் எனக்கு என்ன சொல்லுகிறார் எனக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் நம்முடைய ஆர்வத்தை காட்டவேண்டும். அதை விட்டு நாம் எனக்காக அந்த ஊழியர் என்ன சொல்வார்கள்  இவர்கள் எனக்காக என்ன சொல்லுவார்கள் என்று அங்கேயும் இங்கேயும் நாம் ஓடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏனென்றால் பரிசுத்த ஆவி உங்களோடு கூட இருக்கிறார். பரிசுத்த ஆவி நிரப்பப்படுவது மட்டுமே தேவை. நிரப்பப்பட்டு விட்டீர்கள் என்றால் அவரோடு அந்நியபாஷையில் பேசி தீர்க்கதரிசனத்தில் சொல்ல வல்லமை உள்ளவராக இருக்கின்றீர்கள். அவரை போல ஒரு தெய்வம் இல்லவே இல்லை. பரிசுத்த ஆவி இல்லாமல் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியாது பரலோகமே போக முடியாது.

8. தேவ அன்பு இருதயங்களில் ஊற்றப்படுதல்:

ரோமர் 5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டு இருக்கிறபடியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

பரிசுத்த ஆவி ஊற்றப்படும் பொழுது அல்லது நிரப்பப்படும் போது நம்முடைய இருதயங்களில் பரிசுத்தாவியானவர் பூரணமாய் நிறைகிறார். நாம் பரிசுத்த ஆவியினாலே என்றைக்கு நடப்படுகிறோமோ நிரப்பபடுகிறோமோ அப்பொழுது தேவனுடைய அன்பு நம்  இருதயத்திலே தங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேவனுடைய அன்பு அது விலையேறப்பெற்றது தேவனுடைய அன்பு நமக்கு இருந்தால் இந்த உலகம் நமக்கு பின்னாலே தான்.  1 கொரிந்தியர் 13 அதிகாரத்தில் அன்பைகுறித்து அநேக வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அன்பு மிக முக்கியமானது இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது. இம்மூன்றில் அன்புதான் பெரிதென்று வேதம் விளக்கி காண்பிக்கிறது

இந்த அன்பு எப்படிப்பட்டது என்றால் மனுஷீக அன்பாக அல்ல   உலகத்தின் அன்பாக அல்ல.  அது தேவாதி தேவனுடைய அன்பு அது உன் இருதயத்திலே நிரப்பப்பட வேண்டும். அப்படி நிரப்பபடவேண்டுமென்றால் பரிசுத்த ஆவி உன்மேல் ஊற்றப்பட வேண்டியது நிரப்பப்பட வேண்டியது மிக மிக அவசியமாய் இருக்கிறது. ஆகையால் அவரை போல ஒரு அன்பான தெய்வம் இல்லவே இல்லை.அதேபோல் பரிசுத்த ஆவியின் ஒத்தாசை இல்லாமல் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியாது பரலோகமும் போக முடியாது. என்பதை நாம்  மறந்து விட வேண்டாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *