பரிசுத்த ஆவியைபப் பெற்றீர்களா | |Rev. B.E. Samuel

அப்போஸ்தலர் 19: 2 – 6
2. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாயப்போய், எபேசுவுக்கு வந்தான். அங்கே சில சீஷரைக்க்கண்டு 
3. நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
4. அப்பொழுது அவன்; அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்; யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
5. அப்பொழுது பவுல்; யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
6. அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த நாட்களிலே பரிசுத்த ஆவியை குறித்து, நாம் வேத  சம்பவங்கள் மூலமாய் ஆராய்ந்து பார்க்கப்போகிறோம். மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியதை மேற்கண்ட அதிகாரத்தின் இரண்டாம் வசனத்தில் பார்க்கிறோம்.

நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா  என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்போஸ்தலர் 19:2

இந்த பூமியில் வாழ்கின்ற நாம் ஒரு காரியத்தை நன்றாய் விளங்கி கொள்ள வேண்டும் விசுவாசிகளாவதும் பெரிய காரியமல்ல, ஞானஸ்நானம் பெறுவதும் பெரிய காரியமல்ல, இவ்வாக்கித்தில் சொல்லப்பட்டுள்ள பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதுதான் மிக மிக முக்கியமான காரியம்.

ஒருவேளை நாம் நினைக்கலாம், ஞானஸ்தானம் பெற்ற உடனே நாம் விசுவாசிகள் ஆகிவிட்டோம் என்று, இன்றும் சிலர் சுய ஆதாயத்திற்காக  சந்தர்ப்ப சூழ்நிலைக்காக, ஞானஸ்நானம் எடுப்பார்கள் சிலர் திருமணத்திற்காக ஞானஸ்நானம் எடுப்பார்கள் இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது, அதெல்லாம் உண்மையான இரட்சிப்பும் அல்ல, அது உண்மையான விசுவாசிக்கு அடையாளமும் அல்ல, என்றைக்கு தேவனை விசுவாசித்து என்றைக்கு தேவனை ஏற்றுக் கொள்கிறார்களோ, தன் இருதயத்தில் என்றைக்கு தேவனுக்கு முழுவதுமாய் இடம் கொடுக்கின்றார்களோ, அன்றைக்குதான் அவர்கள் உண்மையான விசுவாசிகளாய் இருக்க முடியும்.

ஒரு வேளை நம்மை பார்த்து இந்த கேள்வியைக் கேட்போம் என்றால்! எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நாம் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றோமா? என்பதுதான் இங்கே நமக்கு கேள்வி. அநேகர் இன்றைக்கும் சபைகூடி வருவார்கள்,  மிக நன்றாக பாடல்களைப் பாடி ஜெபிப்பார்கள். ஆனால் எந்த ஒரு சிறிய சரீர அசைவும் இல்லாதபடி தன்னை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். இவர்களைப் பார்த்து  நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று  கேட்போமென்றால் நலமாயிருக்கும்.

அப்பல்லோ என்பவர் கொரிந்து பட்டினத்தில் இருக்கையில் பவுல் மேடான தேசங்கள் வழியாய் போய் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது அங்கே சில சீஷர்களை பார்த்தபொழுது இந்த கேள்வியை கேட்கிறார். அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னவென்றால் பரிசுத்த ஆவி ஒன்று உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை, அப்பொழுது எப்படி நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்கள்.

இன்றைக்கு நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பரிசுத்த ஆவியை அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டுமா? உண்மையிலே பரிசுத்த ஆவி மிகவும் அவசியம் தேவை. அவரில்லாமல் எந்தவிதமான ஆவிக்குரிய நன்மைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. ஆவியில் நிறைந்து ஆண்டவரோடு ஜெபிக்கவும் முடியாது.

லூக்கா 3: 16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக  நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.

ஞானஸ்நானத்தை ஏற்படுத்தியவர் யோவான் ஆகவே அவரை யோவான் ஸ்நானகன் என்று அழைக்கின்றோம். அவர் ஞானஸ்நானம் கொடுத்த போது ஜனங்களிடத்தில் எளிமையான மொழிநடையிலேயோ, அன்பான வார்த்தைகளை  பேசியதாகவோ பார்க்கமுடிவதில்லை. மிகுந்த கோபத்தோடும் மிகுந்த வைராக்கியத்தோடும் அவர்களிடத்தில் விரியன் பாம்புக் குட்டிகளே தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழி காட்டினவன் யார்? என்று, அங்கு சூழ்ந்திருந்த ஜனங்களையும், வேதபாரகர் மற்றும் போர் சேவகரையும் பார்த்து வைராக்கியமாய் பேசுவதை பார்க்கிறோம்.

மேற்கண்ட வசனத்தில் யோவான் அழகாய் சொல்லுகிறார் நான் உங்களுக்கு தண்ணீரினால் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுக்கிறேன். என்னிலும் வல்லவர் எனக்கு பின் வருகிறார். அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும்  ஞானஸ்நானம் கொடுப்பார்.

மூன்று விதமான ஞானஸ்நானம:;

1.         ஜலத்தினால் பிறப்பது ,2. ஆவியினால் பிறப்பது 3. அக்னியினால் பிறப்பது

இந்த மூன்று வித ஞானஸ்நானத்தை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும். இதைக்குறித்து நிக்கொதேமுக்கு இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:5-6)

யோவான் ஸ்நானகன் கூறியிருப்பதோடு இயேசு கிறிஸ்துவும் இங்கே நமக்காக வலியுறுத்துகிறார், மூன்று விதமான ஞானஸ்நானம் பெற்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ஞானஸ்நானம் என்பது மனம் திரும்புவதற்கு ஏதுவானது, நாம் உலகத்தோடும்; விக்கிரகத்துதோடும் அசுத்தத்திற்கும் ஒத்து போகாமல், அவைகளுக்கு விலகி பரிசுத்தமான தேவனிடத்தில் விசுவாசத்தோடு அவரைப் பற்றிக் கொள்வதே ஞானஸ்நானம்.

ஞானஸ்நானம் பெற்றால்தான் பரிசுத்த ஆவி பெற முடியுமா?

நாம் தேவனிடத்தில், முழுமனதோடு விசுவாசித்தாலே போதும் பரிசுத்த ஆவியை நிறைவாய் பெற்றுக்கொள்ள முடியும்.   இதற்கு அடையாளமாக கொர்நேலியு தனது வீட்டில் ஜனங்களோடு கூடியிருக்கையில் பேதுருவின் பிரசங்கித்தில் கூடியிருந்த யாவர் மேலும் பரிசுத்தஆவியானவர் பொழிந்தருளினார். அப்பொழுது பேதுரு  நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா? என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 10:47-48)

பரிசுத்த ஆவி பெறுவதற்கு ஞானஸ்நானம் அவசியமா ?

பரிசுத்த ஆவி பெறுவதற்கு ஞானஸ்நானமே முக்கிய அடிப்படை அல்ல. முழு நம்பிக்கையோடு விசுவாசித்தால் போதும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஞானஸ்நானம் அவசியம் இல்லையா? அப்படியானால் ஞானஸ்நானம் அவசியம் இல்லையா என்று கேட்கலாம் ஞானஸ்நானமும் அவசியம். விசுவாசமும் தேவபக்தியும் மிகவும் அவசியம்.

மூன்று விதமான அபிஷேகம்

1.         ஞானஸ்நானம் அபிஷேகம்,  2. ஆவியின் அபிஷேகம், 3. அக்கினி அபிஷேகம்

பரிசுத்தஆவி நமக்குள் வரும் போது நமக்குள் ஞானத்தின் ஆவி கிரியை செய்யும். பரிசுத்தஆவியை பெற்றேன் என்று சொல்லி சபை மத்தியில் ஞானமற்ற செயல்களை செய்யும்போது அது சரியான அபிஷேகம் அல்ல. பரிசுத்த ஆவி வரும் போது விஷேசித்தமான அறிவும், தெளிவும், ஞானமும் நமக்குள் கிரியை செய்யும்.

பரிசுத்த ஆவியில் நிறையும்போது எப்படி நிரப்பப் படுகிறோம் என்பது மிகவும் கவனிக்க வேண்டும். நாம் பரிசுத்த ஆவியில் நிறையும் போது நமது ஆவியின் நிலை நமது கட்டுப்பாட்டை மீறி போக கூடாது. அப்படி தனது கட்டுப்பாட்டை மீறி மற்றவர்களுக்கு அது இடர்கள் உண்டாகுமானால், அந்த ஆவியில் ஏதோ ஒரு பிரச்சனை உண்டு. அது சரியான ஆவி அல்ல, அது தேவனுடைய ஆவியாக இருக்க முடியாது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியைப் பெறாமல் பரலோகராஜ்யம் நாம் செல்ல முடியாது. பரலோகம் போக ஞானஸ்நானம் மட்டும் போதாது.  பரிசுத்த ஆவியை பெற்றால்தான் பரலோகம் போகமுடியும்.

நிக்கோதேமு ஆண்டவரிடத்தில் அவரது வல்ல செயல்களை விமர்சிக்கும் போது, ஆண்டவர் அவனை நோக்கி ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காண மாட்டான் என்றார் அதற்கு நிக்கொதேமு ஒரு மனுஷன் முதிர் வயது இருக்கும் போது எப்படி பிறப்பான் என்றதற்கு ஆண்டவர் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை பிரவேசிப்பதில்லை என்று சொன்னார். ஜலத்தினாலே ஞானஸ்நானங் பெற்றவர்கள், ஆவியினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும்.

ஞானஸ்நானம் என்றால் மனந்திரும்புதல், விசுவாசம், மூழ்குதல் அவசியம் வேண்டும். ஆவியில் ஞானஸ்நானம் பெற, நம்முடைய எண்ணங்கள் நம்பிக்கை சிந்தனைகள், நம்முடைய யோசனைகள், நம்முடைய எல்லாம் நோக்கங்களும், நல்லொழுக்கம் உள்ளவைகளாக மாற்றப்பட வேண்டும்.

ஆகவே இன்றைய நாட்களில் நாமும் விசுவாசிகளாய் இருக்கலாம், ஒருவேளை ஞானஸ்நானம் கூட எடுத்திருக்கலாம், மனந்திரும்பியும்  இருக்கலாம், ஆனால் நாம் பரிசுத்த ஆவியைப் இன்னும் பெறாமல் இருப்போம் என்றால்  உடனடியாக அதைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாபெரும் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுது தான் மேற்கண்ட அத்தனை ஆவிக்குரிய மேன்மையான அனுபவங்களுக்குள்ளே சென்று, மாம்சீக உலக கிரியைகளை மேற்கொண்டு, ஆவிக்குரிய உன்னத வாழ்வை இந்த பூமியிலே கிறிஸ்துவுக்காக வாழ முடியும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *