பயப்படாதிருங்கள் | Pr. B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கர்த்தருடைய வார்த்தைக்கு நேராக கடந்து செல்லலாம். இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளின் நற்செய்தியை அவர் உயிர்த்தெழுந்த பிறகு சொல்லிய சில வார்த்தைகளை நான் உங்களோடு கூட பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல் பேசிய வார்த்தைகளை மத்தேயு 28:9,10 வசனங்களில் வாசிப்போம்.

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். மத்தேயு 28:9,10

இயேசுவைப் பின்பற்றின சீஷர்களும் மகதலேனா மரியாளும் இயேசுவின் தாயாகிய மரியாளும் இயேசுவின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கம் இடும்படி வாரத்தின் முதல்நாளிலே இயேசுவின் கல்லறைக்கு வந்தார்கள். பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளானது சனிக்கிழமையாக இருந்தது புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளானது ஞாயிற்றுக்கிழமையானது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் வாரத்தின் முதல் நாள் ஓய்வு நாளாக மாற்றப்பட்டுள்ளது. இதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஆகையால், இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை சுகந்தவர்கத்தை இடும்படி இவர்கள் வரும்போது கல் அப்புறப்பட்டு இருந்தது.

அங்கு இரண்டு தேவதூதர்கள் காணப்பட்டார்கள் அவர்களை கண்டு இவர்கள் பயந்தார்கள் உடனே தேவதூதர்கள் அவர்களிடத்தில் நீங்கள் யாரை தேடுகிறீர்கள்? சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை தேடுகிறீர்கள். அவர் இங்கே இல்லை! அவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்று சொன்னார்கள். தேவதூதர்கள் இந்த செய்தியை அவளிடத்தில் சொன்ன உடனே அவர்கள் பயத்தோடும், சந்தோஷத்தோடும் ஓடி சீஷர்கள் இடத்தில் சொல்லப் போகிற வழியில் இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு அவர்களை வாழ்க என்று வாழ்த்தினார். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து பயப்படாதீர்கள் என்று சொன்னார் முதலாவது அவர் வாழ்க என்று வாழ்த்துகிறார், இரண்டாவதாக பயப்படாதிருங்கள் நீங்கள் போய் இந்த செய்தியை என் சகோதரரிடத்தில் போய் சொல்லுங்கள் அவர்களை என்னை கலிலேயாவில் வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொல்கிறார் நன்றாக கவனியுங்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு முதலில் சொன்ன வார்த்தை நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்பதுதான் நன்றாக வாழவேண்டும் ஆசீர்வாதமாக வாழவேண்டும் சுகமாக வாழவேண்டும் எல்லா கிருபைகளை பெற்று வாழவேண்டும் எல்லா இன்பங்களையும் பெற்று வாழவேண்டும் என்று விரும்புகிறார்.

நாம் தலைவர்களைதான் வாழ்க என்று வாழ்த்துவோம் எந்த தலைவரும் தொண்டனை பார்த்து வாழ்கவென்று வாழ்த்தவேமாட்டார்கள் நமது தலைவராகிய என் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரம்தான் தொண்டர்களையும் சீடர்களையும் பார்த்து வாழ்க என்று வாழ்த்தினார். இப்படிப்பட்ட ஒரு தலைவர் உண்டா? இல்லை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இயேசு என்கிற தலைவர் நம்மை பார்த்து வாழ்க என்று வாழ்த்தினார்.

இரண்டாவதாக அவர் சொல்லுகிறார் எதைக்குறித்தும் நீங்கள் பயப்பட வேண்டாம் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்கிறார் இன்றைக்கு அநேக காரியங்களைக் குறித்து நமக்கு பயம். இயேசுகிறிஸ்து நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்கிறார்.

மத்தேயு எழுதின சுவிசேஷம் 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மேற்கண்ட மூன்று வசனங்களில் பார்க்கும் போது எல்லோரும் பயந்து கொண்டு இருக்கிற நேரத்தில் இயேசு அவர்களை நோக்கி வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வானத்தைப் பார்த்து பயப்படவேண்டாம் பூமியையும் பார்த்து பயப்படவேண்டாம். ஏனென்றால், வானத்திலும் பூமியிலும் அதிகாரம் பெற்ற ஒரே தெய்வம் நாம் ஆராதித்துகொண்டிருக்கிற இயேசு கிறிஸ்து ஒருவரே அவர் சொல்லுகிறார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

அதன் பின்பு ஐந்து கட்டளைகளை இங்கே கூறுகிறார்
1.நீங்கள் புறப்பட்டுப் போங்கள் (சுவிஷேசம் அறிவிக்க)
2.சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்
3.பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படி செய்யுங்கள்
4.நான் உங்களுக்கு கற்பித்ததை அவர்கள் கடைபிடிக்க செய்யுங்கள்
5.உலகத்தின் கடைசி பரியந்தமும் நான் உங்களோடு கூட இருக்கிறேன்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக ஆனதினால் அவருடைய அதிகாரங்களும் உங்களுக்கு சொந்தமானதாய் மாறிவிடுகிறது ஆகையினால் நீங்கள் இப்பொழுது இருக்கும் சிறையிருப்பு மாறும்படி நீங்கள் ஜெபித்தால் உங்களுடைய ஜெபத்தை கர்த்தர் கேட்டு சகல அதிகாரங்களையும் உடையவர் அவர் தம் அதிகாரத்தை கொண்டு சரிப்படுத்த வல்லமையுள்ளவராக இருக்கிறார். அப்படியிருப்பதினால் அந்த அதிகாரத்தை குறித்து நமக்கு தெரியவேண்டுமல்லவா. வானத்திலும் பூமியிலும் அதிகாரம் உடைய ஒரே கர்த்தர் இயேசுகிறிஸ்து மட்டும்தான் என்பதை நாம் உறுதியாக புரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் புறப்பட்டுப் போங்கள் :

முதலாவது நீங்கள் புறப்பட்டுப் போக வேண்டும் நீங்கள் புறப்பட்டு போகாமல் யாரையும் சீஷராக்கமுடியாது ஒருவர் சொல்லாமல் எப்படி செய்தியை கேள்வி படுவார்கள் ஆகையினால் நாம் புறப்பட்டுப் போக வேண்டும்.

சுவிசேஷம் சொல்லவேண்டும்:

நீங்கள் போய் அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் அதற்கு ஏற்றவாறு சுவிசேஷம் சொல்லி சீராக்கவேண்டும் சீஷர் என்றால் பின்பற்றுகிறவன் என்று அர்த்தம் நீங்கள் இயேசுவை பின்பற்றுபவர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

கற்றுக் கொடுக்க வேண்டும்:

அவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படியாக நீங்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

உபதேசம்:

இயேசுகிறிஸ்துவினுடைய உபதேசத்தை கைக்கொள்ளும்படி அவர்களுக்கு சொல்லி வேதாகமத்தை ஏன் வாசிக்கவேண்டும் எனவும் சொல்லி அவர்களை வழிநடத்த வேண்டும்.
நீங்கள் இதையெல்லாம் செய்தால் உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடு கூடஇருப்பேன் என்று அவர் வாக்குறைத்திருக்கிறார்.

உயிர்த்தெழுந்த இயேசு கொடுத்த இறைக்கட்டளை:

மாற்கு 16:16,17,18 வசனத்தை வாசிக்கலாம்.

  1. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். 17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள், 18. சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

இந்த வசனத்தில் அவர் சொல்லுகிறார் முதலில் என்னை விசுவாசியுங்கள் அப்படி விசுவாசித்தால் என்ன நடக்குமென்றால் இப்படிப்பட்ட அற்புதங்களும் அதிசயங்களும் அடையாளங்களும் நடக்கும் நீங்கள் பிசாசுகளைத் துரத்துவீர்கள். இயேசுவை விசுவாசித்த ஒரே காரணத்தினால் உங்களுடைய வார்த்தையில் பிசாசுகள் ஓடும் நீங்கள் ஜெபிக்கும்போது அற்புத சுகம் அடைவீர்கள். காரணம் என்னவென்றால், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு அவர் சொன்னது என்னை விசுவாசித்தால் இவைகள் எல்லாம் நடக்கும் என்றார். விசுவாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார் நல்லதோர் விசுவாசிகளாக மாற்றப்படுவீர்களாக அதை தொடர்ந்து விசுவாசத்தில் நிலைத்திருங்கள் என்று கற்பிக்கிறார்.

லூக்கா 23 அதிகாரம் இந்த அதிகாரம் முழுவதும் கவனித்தீர்கள் என்றால் முழு சம்பவம் உங்களுக்கு புரியும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளில் எம்மாமுவுக்கு நடந்து போகின்றதான சீஷர்கள் வழியில் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைக் குறித்தும் வர்த்தமானங்களை குறித்தும் பேசிக்கொண்டே போனார்கள்.

இப்படி அவர்கள் பேசி சம்பாஷித்து கொண்டிருக்கையில் இயேசுதாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்து போனார் ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிற காரியங்கள் என்னவென்று கேட்டார் அதற்கு அவர்கள் சொல்கிறார்கள். இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடி நீர் அந்நியராய் இருக்கிறீரோ என்றார்கள். அதற்கு அவர் எவைகள் என்றார் அதற்கு அவர்கள் நசரேயனாகிய இயேசுவை குறித்தவைகளே தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிப்பதற்கு புத்தி இல்லாத மந்தை இருதயம் உள்ளவர்களே கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும் தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேத வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக் குறித்து சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்து காண்பித்தார்.

பின்பு அவர் அப்புறம் போகிறவர் போல காண்பித்தார் அவர்கள் அவரை நோக்கி நீர் எங்களுடனேயே தங்கியிரும் சாயங்காலம் ஆயிற்றே பொழுது போயிற்று என்று அவரை வருந்தி கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர்களுடனே தங்கும்படி அவர் போனார் அவர்களோடு அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை இயேசு என்று அறிந்து கொண்டார்கள் உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார். அப்பொழுது அந்த ராத்திரியில் அவர்கள் எழுந்திருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போய் சீஷர்கள் இடத்தில் நடந்தவைகளை சொன்னார்கள் மெய்யாகவே இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்துவிட்டார். அதை நாங்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். அவர் அறியாமையில் உள்ளவர்கள் கண்களை திறந்தார் இயேசு அவர்கள் கூடவே நடந்து போனார் ஆனால் அனேகருக்கு இயேசு தெய்வம் என்று தெரியும்வேண்டுமென்று விரும்புகிறேன்.

லுக்கா எழுதின சுவிசேஷம் 24:36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

நன்றாக கவனியுங்கள் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிற சீடர்கள் இயேசுவை தரிசித்த பின்பு அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்து அவர்கள் கண்ட எல்லாவற்றையும் இயேசுவின் சீஷர்கள் இடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இயேசு அவர்கள் நடுவில் வந்து நின்றார். நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். நமக்கு சொல்கிற வார்த்தை என்னவென்றால் சமாதானம் நாம் சமாதானமாக இருக்க வேண்டும் எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.

இந்த பூமியிலே நான் யாரை வேண்டும் என்றாலும் மன்னித்து விடுவேன் ஆனால் இவர்களை மாத்திரம் மன்னிக்கவேமாட்டேன் என்று நீங்கள் யாரையும் கைகாட்டாதீர்கள் நீங்கள் அவர்களை மன்னிக்கவில்லை. என்றால், தேவன் உங்களை மன்னிக்க மாட்டார். பரலோக ஜெபத்தில் அவர் இப்படி சொல்லுகிறார் நாங்கள் மற்றவர்களுக்கு மன்னித்தது போல நீர் எங்களுக்கு மன்னியும். ஆகவே இந்த பூமியில் யாரையும் உங்களுக்கு எதிரி என்று சொல்லாதீர்கள்.
யாரையும் எதிரியாக பார்க்காதீர்கள் உங்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது என்று யாரையும் சொல்லாதீர்கள். ஏனென்றால், அந்த எரிச்சல் சாத்தானுடையதாக இருக்குமே தவிர தேவன் உடையதாக இருக்காது. ஆகவே கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள் முதலில் உங்கள் குடும்பத்தில் சமாதானமாக இருங்கள் கணவன் மனைவி பிள்ளைகள் பெற்றோர் சமாதானமாக இருங்கள்.

அதன் பின்பு குடும்பத்தை சார்ந்தவர்களோடு சமாதானமாக இருங்கள் அடுத்தது உறவுகளோடு மாத்திரமல்ல அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சமாதானமாக இருங்கள் உலகில் யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம் மற்றவர்கள் உங்களை மதிக்கத்தக்க தாய் அவருடன் நீங்கள் சமாதானமாக இருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக அப்படியானால் நீங்கள் சமாதானமாக இருக்க வேண்டும். என்று இயேசு விரும்புகிறார் அநேகருடைய வாழ்க்கையில் சமாதானம் இல்லை காரணமே இல்லாமல் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்கள் அநேகர் நினைத்துக் கொள்வது அவர்கள் நம்மை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தவறாக நினைத்து கொள்வதினால் தான் சமாதானத்தை இழந்து போகிறார்கள். ஆகவே நீங்கள் எல்லோரும் சமாதானமாக இருங்கள் இயேசு எல்லாரையும் நேசித்தார் நல்லோர் தீயோர் எல்லோரையும் நேசித்தார்.

லூக்கா 24: 47. வாசிக்கலாம் அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் 48. அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

இங்கே நன்றாக கவனித்து பார்த்தோமென்றால் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சொன்ன வார்த்தை மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லா தேசத்தாருக்கும் இயேசுவின் நாமம் பிரசங்கிக்கப்பட வேண்டுமென்பதற்கு நீங்கள் சாட்சி. இப்பொழுது சுவிசேஷம் சொல்லும் வேலை நம்முடைய வேலையாக இருக்கிறது நாம் கட்டாயமாக மனந்திரும்புதல் பற்றி சொல்லவேண்டும் கட்டாயமாக பாவமன்னிப்பைகுறித்தும் பேசவேண்டும் இதை இரண்டும் சுவிசேஷமாக இயேசுவின் நாமத்தில் உலகமெங்கும் சொல்லப்பட வேண்டியவிஷயம்.

ஆனால், பாவமன்னிப்பையும் மனந்திரும்புதலையும் பற்றி சொல்லும்போது அநேகர் விரும்புவதில்லை எப்பொழுது பார்த்தாலும் இவர் கண்டிப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சிலர் நினைக்கலாம் பேசுவது நானல்ல என்னில் இருக்கிற ஆண்டவரே அப்பொழுது பேசுகிற என்மேல் தவறா இல்லையென்றால் சொல்ல சொன்னவர்மேல் தவறா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டாம். அவருடைய ஞானத்தை ஆராய்ந்து பார்க்கிற அறிவும் திறமையும் நம் யாருக்கும் இல்லவே இல்லை.

யோவான் 20:16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

மகதலேனா மரியாள் என்கிற ஒரு ஸ்திரி இருந்தாள் அவளிடம் ஏழு பிசாசுகள் பிடித்து இருந்தது அந்த 7 பிசாசுகளையும் அவளைவிட்டு இயேசு விரட்டினார். சுகம் கிடைத்த நாள் முதல் அவள் இயேசுவை பின்பற்ற ஆரம்பித்தாள் அப்படி பின்பற்றுவதில் மிகவும் பக்தியாக காணப்பட்டாள் நீங்கள் இங்கு ஒரு காரியத்தை கற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள் இயேசுவை எப்படி பின்பற்றுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயம் கவனித்துப் பாருங்கள்.

இயேசு இந்த மகதலேனா மரியாளுக்கு தான் உயிர்த்தெழுந்த பிறகு முதல் முதலில் தரிசனம் ஆகிறார் அவர் தாயாருக்கு கூட இந்த பாக்கியம் கிடைக்கவில்லை அவருடைய நெருக்கமான சீடர்களுக்கு கூட இந்த பாக்கியம் கிடைக்கவில்லை யாருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால், இவர்கள் எல்லோரையும் விட இன்னும் அதிகமாக தேவனைத் தேட ஆரம்பித்தாள் மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால், இயேசுவின் கல்லறை வாசலில் உட்கார்ந்து கொண்டு ஐயோ இயேசுவை காணவில்லையே என்று அழுது கொண்டிருக்கிறபோது அந்த நேரத்தில் தேவதூதன் இறங்கி வந்து ஏன் அழுகிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு அவர் இயேசுவைக் காணவில்லை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்கிறாள். அதற்கு தேவதூதன் அவர் இங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்று சொன்னான். அவளுக்கு பின்புறத்தில் இருந்து இயேசு நின்று மரியாளே என்று கூப்பிடுகிறார் அவள் திரும்பிப் பார்த்து இயேசு என்று அறியாமல் அவரிடத்தில் நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்கிறாள் அதற்கு இயேசு சொன்ன வார்த்தை மரியாளே என்கிறார் உடனே அவள் புரிந்து கொள்கிறாள் இது இயேசுவினுடைய சத்தம் என்று அதற்கு அவள் ரபூனி போதகரே என்று கூப்பிட்டாள் மரித்து உயிர்த்தெழுந்த முதல் தரிசனம் பேதுருவுக்கு கிடைக்கவில்லை ஏன் சொந்த தாய்க்கு கூட கிடைக்கவில்லை. ஆனால், இந்த மரியாளுக்கு கிடைத்த காரணம் அவர் மேல் அவள் வைத்த பக்திதான், அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் அதிகமாய் ஆண்டவரிடத்தில் அன்பு செலுத்தினால் அவர் தரிசனத்தை நிச்சயமாக உங்களுக்கும் கொடுக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார். நீங்கள் போதகரை விட அதிகமாக ஜெபித்தீர்களென்றால் போதகரை விட உங்கள் மேல் தான் அதிகமாக அன்பு செலுத்துவார். முதல் தரிசனம் அவளுக்கு கிடைத்ததென்றால் அவள் எந்த அளவுக்கு இயேசுவைத் தேடியிருப்பாள் கல்லறையிலேயே உட்கார்ந்து இருந்தாள் இயேசுவைக் காணவில்லை என்ற இந்த ஆர்வமும் அக்கறையும் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

யோவான் 20:20.அவர் இப்படி சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். 21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்ன காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே இன்றைக்கு சபையில் பரிசுத்தஆவியானவரின் ஆளுகை இல்லை அநேகருடைய வாழ்வில் பரிசுத்தஆவி இல்லை போதகர் இடத்தில் கூட பரிசுத்த ஆவியின் அனுபவம் காணப்படவில்லை பரிசுத்த ஆவி இருப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். விசுவாசிகள் எல்லோரும் கைதட்டி குதித்து வாயில் வந்ததையெல்லாம் உரையாடுகிறார்கள். பரிசுத்த ஆவியை பெற்றது போல பாவனை செய்கிறார்கள்.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் அவர்கள் போடுகிற வேஷத்தை கண்டு ஏமாற்றம் அடைவதற்கு என் ஆண்டவர் ஏமாளி அல்ல நீங்கள் அந்நியபாஷை பேசினால் நலமாக இருக்க வேண்டும். அழகாக இருக்கவேண்டும் கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும் அதுதான் நவமான பாஷை இயேசுவே சொன்ன வார்த்தை அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

தேவன் ஊற்றாமல் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளமுடியாது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இயேசு கிறிஸ்துவால் மட்டும்தான் உங்கள் மேல் ஊற்றமுடியும் அப்பொழுதுதான் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்து இறங்கும் பரிசுத்த ஆவி இல்லாமல் உங்களால் ஆராதிக்க முடியாது. நீங்கள் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் நீங்கள் விசுவாசியாக இருக்கவோ வாழவோ முடியாது மற்றவர்கள் பார்வையில் நீங்கள் அபிஷேகம் பெற்றது போல காணப்படலாம் ஆனால் உங்கள் நடிப்பு ஆண்டவரிடத்தில் செல்லவே செல்லாது அவர் நாத்தான்வேலை பார்த்து உத்தம இஸ்ரவேலன் என்றார்.

அதற்கு அவன் என்னை எப்படி தெரியும் ஆண்டவரே என்று கேட்டதற்கு நீ அத்தி மரத்தின்கீழ் நின்று கொண்டிருந்தபோது எனக்கு உன்னை தெரியும் என்கிறார் இப்படிப்பட்ட ஆண்டவருக்கு நீங்கள் யார் என்று தெரியும் அவர் அனைத்தையும் அறிந்தவர் ஆகவே பரிசுத்த ஆவியைபெற்றுக் கொள்ளுங்கள்.

யோவான் 20:26. வசனத்தை வாசிக்கலாம் மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

முதலில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீடர்களை சந்தித்தார் அப்பொழுது தோமா என்கிற சீடன் அங்கே இல்லை அவன் வந்த பிறகு எல்லோரும் சொன்னார்கள். இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் அவர் எங்களுக்கு தரிசனமானார் என்றார்கள் அதற்கு அவன் நான் நம்ப மாட்டேன் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையானால், ஆணி அடிக்கப் பட்ட அவரது கைகளில் நான் என் விரலை விட்டு பார்ப்பேன் ஈட்டினால் குத்தப்பட்ட அவரது விலாவில் என் கையை போட்டு பார்ப்பேன்.

அந்த காயத்தை பார்த்தால்தான் நான் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்புவேன் என்றான். அதன் பின்பு தான் இயேசு மறுபடியும் எட்டுநாளுக்குப் பின்பு சீடர்களோடு தோமாவும் இருக்கும்போது தரிசனம் ஆகிறார். பின்பு அவர் தோமாவை நோக்கி நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளை பார் உன் கையை நீட்டி என் விலாவில் போடு அவிசுவாசியாக இராமல் விசுவாசியாயிரு என்றார்.

பின்பு சொல்கிறார் தோமாவே நீ என்னை பார்த்ததினால் விசுவாசிக்கிறாய் பார்க்காமல் விசுவாசிக்கிற இவர்கள் பாக்கியவான்களாய் இருக்கிறார்கள். எப்பொழுது நீங்கள் விசுவாசிக்க வேண்டும் கிறிஸ்தவனாக கிறிஸ்தவராக இருந்து விசுவாசம் இல்லாமல் இருக்கக்கூடாது இயேசுவோடு இருந்தால் விசுவாசியாக வாழவேண்டும். அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் அவிவாசியாக இருப்பதைவிட விசுவாசியாக இருக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதன்பின்பு உடனே தோமா ஆண்டவரே என்னை மன்னியும் என்கிறார். அதற்கு ஆண்டவர் நீ என்னை பார்த்ததினால் விசுவாசிக்கிறாய். ஆனால், இந்த உலகத்தில் என்னை பார்க்காமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் நீங்களும் பாக்கியவான்களாக வாழவேண்டுமென்று விரும்புகிறேன்.

கர்த்தர்தாமே இந்த வார்த்தைகளை கொண்டு உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *