நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி. 

மத்தேயு 5:13-15 வரை நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.  

இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லப்போகிற செய்தி இயேசுவைப் பற்றி அல்ல. உங்களைப் பற்றி தான். நீங்கள் அவ்வளவு விசேஷித்தவர்களா? ஆம் உண்மையிலேயே நீங்கள் விசேஷித்தவர்கள் தான். நீங்கள் ஏதோ இருக்கிறோம் ஏதோ விதி வந்தால் சாகப் போகிறோம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் மற்ற மக்களும் நாமும் ஒன்று அல்ல. அவர்கள் வாழ்வதைப் போல தான் நாமும் வாழ்கிறோம். ஆனால் நாம் வணங்கிற தேவனை அவர்கள் வணங்குவதில்லை.  இது தான் ரொம்ப முக்கியம். அவர்கள் சாதாரணமான ஒரு செங்கல்லை எடுத்து கொள்கிறார்கள் அதை தண்ணீரால் சுத்தமாக கழுவி துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி அதை வணங்குவார்கள். அவைகளாலே நமக்கு நன்மையோ தீமையோ ஒன்றும் செய்ய முடியாது. அதைப்போல ஒரு மரத்திற்கும் செய்வித்து விக்கிரக ஆராதனை செய்கிறார்கள். (வணங்குகிறார்கள்) அந்த மரம் எழும்பி வந்து உதவி செய்யவோ ஆறுதல் கூறவோ முடியாது. இதை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்தேயு 5:13-ல் நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 

நாம் ஒவ்வொருவரும் பூமிக்கு உப்பாயிருக்கின்றோம். உப்பை நன்றாய் கவனித்தால் நமது ஒவ்வொருவருடைய வாழ்விலும் அனுதின தேவைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக  காணப்படுகிறது. உப்பை எங்கிருந்து தயாரிக்கின்றார்கள் என்றால் கடலிலுள்ள தண்ணீரைதான் உப்பாக உருவாக்குகிறார்கள். இதில் கவனிக்ககூடிய காரியம் என்னவென்றால், கடலிலிருந்து வாய்க்கால்களை  உருவாக்கி, அதின் வழியாய் சமமான ஒரு இடத்திற்கு அந்த தண்ணீரை கொண்டு வருவார்கள். அதன் பின்னர் அநேக பாத்திகளை ஏற்படுத்தி அவைகளில் தண்ணீரை நிரப்பி, அவைகளில் ஒதுங்குகிற எல்லா கழிவுகளையும் வெளியேற்றி பக்குவப்படுத்துவார்கள். இந்தத் தண்ணீர் குறிப்பிட்ட நாள் வரைக்கும் தேக்கிவைப்பார்கள்.   ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி அதன் மேல் படும்போது அந்த தண்ணீர் எல்லாம் உலர்த்தப்பட்டு, வெண்மையாக மாறும். பிறகு பனி துளிகள் போல படர்ந்து உப்பாக மாறும். அதன் பிறகு இதை அநேகர் பயன்படுத்துவார்கள் . 

பிரியமானவர்களே நாம் ஒவ்வொருவரும் பூமிக்கு உப்பாய் இருக்கிறோம் என்று வேதத்திலே வாசிக்கிறோம். நாம் பிறந்தது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஏழ்மையான குடும்பத்திலோ,  நடுத்தர குடும்பத்திலோ, வசதியான குடும்பத்திலோ, தாழ்ந்த ஜாதியிலோ அல்லது உயர்ந்த ஜாதியிலோ பிறந்திருக்கலாம், எந்த ஜாதியில் பிறந்திருந்திருந்தாலும் நீங்கள் அந்த உப்பு பாத்தியில் பாய வைக்கப்பட்ட கடல் தண்ணீர் பிறகு அங்கு ஜாதியும் இல்லை உயர்ந்தவனுமில்லை தாழ்ந்தவனில்லை. ஏனென்றால் அந்த உப்பு பாத்தியில் வெயிலின் தாக்கம் அதிகமாக அதிகமாக நமக்குள் இருக்கிற கறை திறை அழுக்கு முதலானவைகளை நீக்கி  புதிதாக்கபட்ட சாரமுள்ள நல்ல உப்பாய் நாம் மாற்றப்படுகிறோம். 

ஒரு பழமொழி சொல்வார்கள்:  “உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்லுகிற பழமொழி  நூற்றுக்கு நூறு உண்மைதான்.”

உப்பின் தன்மை என்னவென்றால்  உப்பு சேர்க்கப்படாத எந்த உணவும் ருசியாய் இருப்பதில்லை அதேவேளையில் உணவில் உப்பு அதிகரித்தாலும்  குறைவாகயிருந்தாலும் சாப்பிடவே முடியாது. உப்புக்கு கறிக்கும் தன்மை உள்ளது. உப்பு எந்த உணவோடு சேர்கிறதோ அந்த உணவு சுவையாய் மாறுகிறது. வேதம் கூறுகிறது  நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் தான் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள். தேவ பிள்ளைகளாகிய நாம் இல்லாத வீடோ, தேசமோ, சமுதாயம் கிராமமோ எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே கர்த்தரை தேடுகிற நாமோ (நீங்களே) உலகத்திற்கும் எல்லா சமுதாயத்திற்கும் ஆசீர்வாதமானவர்கள் (உப்பு போன்றவர்கள்).

பிரியமானவர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாரமற்றவர்களாக இருப்பீர்களென்றால்  வெளியிலே கொட்டபடுவதற்கும் மனுஷரால் மிதிக்கப்படுவதற்கும் ஒழிய வேறெதற்கும் உபயோகப்படமாட்டீர்கள். உப்பானது ஒவ்வொரு இல்லத்திற்கும் மிகவும் தேவையுள்ளதாய் இருக்கிறது. உப்பை பயன்படுத்தாத எந்த வீடும் இல்லை. ஏழை வீடு முதற்கொண்டு வசதியுள்ள வீடு வரைக்கும்,  மிக அத்தியாவசியமான ஒரு பொருளாகவே உப்பு காணப்படுகின்றது. உப்பு ஆகாரத்தில் குறைந்தாலும் அதிகரித்தாலும் சாப்பிடமுடியாது, உப்பின் சுவையானது உப்பு எந்த உணவோடு சேர்கிறதோ அந்த உணவுக்கு சுவையை உண்டாக்குகிறது. அதைபோலவே நீங்கள் உங்கள் தன்மைகளையும், நற்கிரியைகளையும் பார்த்து மற்றவர்கள் மாற்றமடைவார்கள், நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் உப்பு சுவை குறையுமானால் அதை வெளியில் கொண்டு போய் கொட்டுவார்கள் உப்பை குப்பையில் கூட கொட்டமாட்டார்கள் அதை ரோட்டில்தான் கொட்டுவார்கள் ஏனென்றால்  போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாரும் அதை மிதித்துக் கொண்டு போக வேண்டும் என்று அதை கொட்டுவார்கள் நீங்கள் சுவையற்று போவீர்களானால் நீங்கள் வெளியிலே கொட்டப்பட்டு மனிதர்களால் பிடிக்கப்பட்டுபோவீர்கள். நீங்கள் சுவையுள்ளவர்களாயிருப்பீர்களென்றால் நமக்குரிய கனமும் மரியாதையும் உங்களுக்கு கிடைக்கும். 

உப்புக்கு ஒரே வடிவமைப்பை நீங்கள் பார்க்க முடியாது. பல துகள்களாக பலவிதமான கோணங்களில் அதின் வடிவம் காணப்படுகிறது. உப்புக்கு எப்படி ஒரு வடிவமைப்பு இல்லையோ அதே போல நீங்களும் காணப்படுகிறீர்கள்.   நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம், அனைவரும் ஒரு வடிவிலும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. ஒவ்வொருவரையும் கர்த்தர் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு குணத்திலும், ஒவ்வொரு முகசாயலும் மற்றும்  ஆவிக்குரிய ரீதியிலும் வடிவமைத்துள்ளார்.

தேவனின் படைப்பில்  உயர்வாகவோ தாழ்வாகவோ கருப்பாகவோ  சிகப்பாகவோ உண்டாக்கப்பட்டிருக்கலாம்.    உங்களை அவர் இப்படியெல்லாம் வடிவமைத்துள்ளார். நீங்கள் அனைவரும் பலவிதமான வடிவிலே ஒரே சாயலாய் உண்டாக்கப்பட்டுள்ளீர்களென்றால், இதற்கு  ஆண்டவருடைய மாபெரும் கிருபை தான் காரணம். இதை குறித்து நாம் மிகுந்த மனநிறைவோடு தேவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களாயிருக்கவேண்டும். என்னை தேவன்  சபைக்கு பிரசங்கம் பண்ண வடிவமைத்துள்ளார் அதைப்போல உங்களையும் விசுவாச மக்களாக வடிவமைத்துள்ளார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார், ஆனால் பார்ப்பதற்கு  உப்பின் வடிவம் மிகவும் சிறியதாக இருந்தாலும் அது பயன்படாது என்று ஒதுக்கவே மாட்டார்கள். அதைப்போல உங்களுக்குள் சாரம் இருக்கும்வரை உங்களுடைய வரங்களையும், மகிமையும், திறமையைம் ஒருவராலும் அழித்துவிடவே முடியாது,

கடலில் இருந்து உருவாக்கப்பட்டு வெளியே வருவதைதான் உப்பு என்று சொல்கிறோம்.  கடலானது உலகத்தை குறிக்கிறது. உப்பு தேவ பிள்ளைகளாகிய உங்களை குறிக்கிறது. சகலவித உலக வழிபாடுகளை விட்டு விலகி பிரித்தெடுக்கப்பட்டவர்களாக உங்களை காண்பிக்கபடுகிறீர்கள். எப்படி கடலில் இருந்து தண்ணீரைப் பிடித்தெடுத்து அந்த தண்ணீரை பாத்தியில் சேர்த்து  அதில் இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி நன்றாக உலர்த்தப்பட்டு உப்பாகிறதோ, அதே போல தேவன் உங்களையும் உலகத்திலிருந்து தனியாக பிரித்தெடுத்து, நம்மில் இருக்கிற பாவசாபங்களை பரிசுத்த இரத்தத்தினால் கழுவி, மீட்டெடுத்து, பரிசுத்தம் என்னும் வென்மையைக் கொடுத்து சாரத்தை உங்களுக்குள் ஏற்றி, நல்லதொரு உப்பாக பயன்படும்படி கர்த்தர் உருவாக்கியிருக்கிறார். கடலானது உலகம் என்றும்,  உப்பானது நாம் (மனிதர்கள்) என்று சொன்னால் அதில் காணப்படும் சாரமானது யார்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்து என்கிறதான சாரம் உள்ளவர்களாய் நாம் எதுவரைக்கும் நிலைத்திருக்கிறோமோ, அதுவரைக்கும் கனத்துக்குரியவர்களாயும் தேவனால் உயர்த்தப்பட்டவர்களாயும் இருப்பீர்கள். இயேசு கிறிஸ்து என்கிற சாரத்தை என்று இழந்து போகிறீர்களோ அன்றைக்கே நீங்கள் மனுஷர் பார்வையிலும் தேவனுடைய பார்வையிலும் கனவீனமுள்ளவர்களாயும் அற்பமானவர்களாயுமிருப்பீர்கள், சிலர் தங்களது  எண்ணத்தில் ஏதோ சந்தர்ப்பசூழ்நிலையில் இரட்சிப்படைந்துவிட்டோம் என்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல உங்களை தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே ஆண்டவருடைய பிள்ளைகளாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உப்பினால் தீமைகளும் உண்டாகும் ஏதாவது ஒரு வீட்டின் தரையிலேயோ சுவற்றிலேயோ உப்பை போட்டு விட்டீர்களென்றால் நாளடைவில் உப்பானது சிமெண்ட் தரையாயிருந்தாலும்கூட உள்ளிருக்கின்ற செங்கற்களையும் முற்றிலுமாக அரித்து அந்த இடத்தை உதவாமல் செய்துவிடும். 

ஒரு தேசத்து ராஜா ஒருவர் தன் எதிர் நாட்டு படையோடு யுத்தம் செய்து, அந்த நாட்டை பிடித்து ஜெயித்து விட்ட நிலையிலும் அத்தேசத்தின் மீது கோபம் தீராமல் அந்த தேசத்தின் மீதெங்கும் உப்பை  தூவிவிட்டான். அதன் பிறகு நடந்ததென்னவென்றால் அந்த தேசத்தில் ஒரு புல் பூண்டும் முளைக்காதபடிக்கு வறண்ட பூமியாக மாறிவிட்டது. அணுகுண்டு போடப் பட்ட பூமியிலே கூட சில நேரம் புல் முளைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உப்பு விதைக்கப்பட்ட பூமியில் மாத்திரம்  புல் முளைக்கவே வாய்ப்பேயில்லை. வேதத்தின் அடிப்படையில் 2 இராஜாக்கள் 2:18,19,20,21, 22: அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன், இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 

 எலிசாவின் நாட்களில் அங்குள்ள ஒரு பட்டணம்  பாழ் நிலமும் வனாந்தரமும் அங்குள்ள தண்ணீர் கெட்டு போனதாகவும் இருந்தபடியினால் அங்கே குடியிருக்கவோ  குடியிருப்புக்கு ஏற்றதாகவோ இல்லை என்று சொன்னார்கள்.. அதற்கு எலிசா ஒரு புதியதான தோண்டியை (பாத்திரத்தை) கொண்டு வரச்சொல்லி உப்பை அதிலே நிரப்பி அந்த நீரூற்று அண்டையிலே கொண்டுபோய்க்  போட்டான். அப்பொழுது அந்த தண்ணீரில் ஆரோக்கியம் உண்டாயிற்று தண்ணீரைக்குடிக்கவும் தேசத்தின் ஜனங்கள் குடியிருக்கவும் ஏதுவாய் மாறினது. எலிசா உப்பினால் ஆரோக்கியபடுத்தினான்.

உப்பின் நன்மைகள்: 1. ஆகாரத்தின் முழு பங்குக்கும் உப்பு மிக அவசியமாயிருக்கிறது. 2. மரித்துப் போன சரிதத்தை பதப்படுத்துவதற்குகூட பயன்படுகிறது. அதேபோல் நீங்களும் உலகத்திற்கு நன்மையாகவும் தீமையாகவும் பயன்பட முடியும். ஆனாலும் நாம்  தீமையை விட்டு நன்மை செய்யக்கடவோம்.

நீங்களே உலகத்திற்கு வெளிச்சம்:

மத்தேயு 5: 14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது 15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

பிரியமானவர்களே ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து, நீங்களே உலகத்திற்கு வெளிச்சம் என்றும், சாட்சி என்றும் சொல்கிறார். எப்பொழுது நாம் உலகமனைத்திற்கும் வெளிச்சமாய் மாற முடியும் என்றால் நமக்குள் பிதா என்கிற தீபமும் இயேசு கிறிஸ்து என்கிற திரியும் பரிசுத்த ஆவியானவர் என்கிற எண்ணையும் நிறைவாய் இருக்கும். ஆகவே நாம் உலகத்திற்கு மகிமையான வெளிச்சத்தை காண்பிக்க முடியும். 

பண்டைய காலத்தில் சில ஏழ்மையான வீடுகளில் அகல் விளக்கை பயன்படுத்தி வெளிச்சத்தில் வாழ்ந்தார்கள். நடுத்தர குடும்பத்தினர் காமாட்சி விளக்கை பயன்படுத்தி வாழ்ந்தார்கள். அதைவிட உயர்ந்தவர்கள் குத்துவிளக்கை பயன்படுத்தினார்கள்.  பழம்பெரும் நாட்களில் மின்சாரமோ மின்விளக்குகளும் வருவதற்கு முன்பாக இந்த அகல் விளக்கும், காமாட்சி விளக்கும், குத்து விளக்கையும், பயன்படுத்தி வாழ்ந்து வந்தார்கள். அன்றைய நாட்களில் இந்த விளக்குகளை வீட்டிற்கு வெளிச்சம் தருவதற்கு  மாத்திரமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய நாட்களில் அந்த அனைத்து விளக்குகளையும் விக்கிரக பொருளாக மாற்றி அதைத் தொழுது வருகிறார்கள்.

நாம் வெளிச்சமாய் மாறவேண்டும் என்றால் நமக்குள்ளே எண்ணெயும் திரியும் விளக்கும் காணப்பட வேண்டும்.  திரி எவ்வளவு முக்கியமோ அதே போல் விள்க்கும் அவ்வளவு முக்கியம். விளக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு எண்ணையும்  முக்கியம். அப்பொழுதுதான் வெளிச்சம் கொடுக்க முடியும். நாம் வெளிச்சமாய் இருக்க வேண்டுமென்றால், பிதாவானவர் விளக்காகவும் கிறிஸ்துவானவர் திரியாகவும் பரிசுத்த ஆவியானவர் எண்ணெயாகவும் செயல்படுகிறார்கள்.  மூன்று பேரை ஒன்றாய் இணைந்து திரியேகமாய் செயல்படும்போது நாம் உலகத்திற்கு வெளிச்சமாயிருப்போம்.

ஒரு சூரியன்  இந்த பூமி அனைத்திற்கும் எவ்வளவாய் ஒளி தருகிறது என்று பாருங்கள் அந்த சூரியன் மாத்திரம் இல்லை என்றால் முழு உலகமே இருண்டு போய் விடும். அதே போல நம்முடைய பிதாவாகிய தேவனும், குமாரனாகிய இயேசுவும்,  பரிசுத்த ஆவியானவராகிய திரியேக தேவனும் நமக்குள் இல்லை என்றால் நம் வாழ்வும் இருண்டு போய் விடும். வானத்து நிலவை பாருங்கள் அது தானாக வெளிச்சம் தருவதில்லை. அது பகல் முழுவதும் சூரியன் இடத்திலிருந்து வெளிச்சத்தை பெற்றுக் கொண்டு அதன் பிறகு இரவெல்லாம் வெளிச்சமாய் பிரகாசிக்கிறது. அதேபோல தேவனுடைய ஒளியிலே நாம் நிரப்பப்பட்டு நாமும் உலகத்திற்கு பிரகாசிக்கிற ஒளியாக இருப்போம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *