தேவ ஆவியினாலே எல்லாமே ஆகும் | Rev. B.E. Samuel

சகரியா 4:6-7 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய். தலைக்கல்லை அவன் கொண்டுவருவான். அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.


கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தியானிக்கபோகிற முக்கியமாக வார்த்தை தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் என்பதே.


ஆதியிலே ஏற்படுத்தபட்ட சபையின் சரித்திரத்தின் கண்ணோட்டத்தை தான் தியானிக்க போகிறோம். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு அப்போஸ்தலர்கள் மூலமாக உருவாக்கப்பட்டதான் ஆதிசபை. இந்த சபைக்கு கொடுக்கப்பட்ட பெயர் பெந்தகோஸ்தேசபை இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த ஐம்பதாவது நாளில் இந்த சபை துவங்கப்பட்டது. அன்று பரிசுத்த ஆவி பொழிந்தருளப்பட்டு நூற்றிருபது பேர் அபிஷேகம்பண்ணப்பட்டார்கள் பெந்தேகோஸ்தே என்ற நாளிலே ஏற்படுத்தப்பட்ட சபையாக இருக்கிறபடியினால் இந்த சபைக்கு பெந்தகோஸ்தே சபை என்று அழைக்கப்பட்டது.


இந்த சபையானது வளரத் தொடங்கி அநேகவிதமான நெருக்கங்களை சந்திக்க தொடங்கியது. அந்த நாட்களில் ரோமன் கத்தோலிக்க சபைகள் வளர ஆரம்பித்ததும் அதில் மார்ட்டின் லூதர் என்பவர் எழும்பி ஒரு வசன புரட்சியை உண்டாக்கி பாரம்பரிய சபைகளுக்கு சவாலாக சில வசன அடிப்படையான சத்தியங்களை வைராக்கிமாய் போதித்தார். வசனமும் பரிசுத்தஆவியும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
ஆனால் இன்றைய நாட்களில் சபைகள் உருவாக்கப்பட்டு வளர்ந்துள்ளதே தவிர சபைகளில் பரிசுத்த ஆவியானவரும் சத்திய வசனமும் நிலைத்திருக்கவில்லை. ஆதி அப்போஸ்தல நாட்களில் இருந்த வல்லமை அபிஷேகம் இந்நாட்களிலே நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட இராமல் குறைந்துபோய் அனலுமின்றி குளிருமின்றி சபைகள் மங்கி இருளடைந்துள்ளது.


ஒவ்வொருவருடைய மனதின் எண்ணம் என்னவென்றால் ஆலயத்தில் அலங்காரமான உருவங்களும் சிற்பங்களும் அதில் உள்ள சொருபங்களுமே கடவுள் வாழும் ஆலயம் என்று எண்ணிக்கொள்கிறார்கள் ஆனால் கட்டிடம் ஒருபோதும் சபையாகிட முடியாது. கூடிவருகிற தேவ ஊழியக்காரரும் விசுவாச மக்கள் தான் சபை என்று நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பலமோ பராக்கிரமோ ஒருநாளும் ஒரு காரியத்தையும் சாதித்துவிட முடியாது. அதை நம்பினால் நம்மை நாமே ஏமாற்றிகொண்டவர்களாக மாறிவிடுகிறோம். சிம்சோனை இஸ்ரவேலுக்கு நியாயாதிபதியாக ஏற்படுத்தினார். அவன் தன் தாயின் வயிற்றில் பிறந்தது முதல் கொண்டு நசரேயனாயிருப்பான். அவன் தலைமயிர் சிரைக்கபடாமலும் தீட்டானதொன்றையும் தொடாமலும் மதுபானமும் திராட்சரசமும் குடியாமலுமிருக்கவேண்டுமென கட்டளை பெற்றிருந்தான். இஸ்ரவேலுக்கு நியாயாதிபதியாக ஏற்படுத்த பட்டவனாகவும் தேவனுக்காய் தெரிந்துகொள்ளப்பட்டவனமாய் இருந்தான். அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
அதைப்போலவே தாவீதும் தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, ஆண்டவருடைய வல்லமையினாலே அந்த சிங்கத்தின் வாயை இரண்டாக கிழித்து அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.
நம்முடைய பெலத்தின் வல்லமைக்கும், சிந்தனையின் ஞானத்திற்கும், அப்பாற்பட்ட ஒரு வல்லமைதான் தேவனாகிய கர்த்தரின் வல்லமை அது இவ்வுலகத்திலே உள்ள அனைத்து வல்லமைகளை பார்க்கிலும் பெலத்த வல்லமையாக இருக்கிறது.

  1. ஓரு ஊழியனாக இருக்க வேண்டும் என்றால்?
  2. மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று முழுகி ஞானஸ்நானம் பெற்று இருக்க வேண்டும்.
  3. பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் பெற்று இருக்க வேண்டும்.
  4. ஊழியத்திற்கு அழைப்பு பெற்றிருக்க வேண்டும்.
    (யோவான் 16:7-8) நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
    நாம் நினைக்கலாம் நான் அதிகமாய் படித்து இருக்கிறேன் என் பெயரில் இவ்வளவு சொத்து இருக்கிறது திரளான ஆஸ்தி எனக்கு உண்டாயிருக்கிறது எனக்கு என்ன குறை என்று தன்னுடைய சுய பலத்தை காண்பித்து தன்னுடைய சொந்த ஞானத்தை நம்பி நாம் வாழ்ந்து கொண்டிருப்போமானால் அது தேவனுக்கு முன்பாக வீணாயிருக்கும். உதாரணத்திற்கு நாங்கள் இந்த ஊருக்கு வந்து ஊழியத்தை ஆரம்பித்த நாட்களில் எனக்கு என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. ஒரே ஒரு சைக்கிளும் சமையலுக்கு ஒரு சில பாத்திரங்கள் மாத்திரமே இருந்தது. ஆனால் இப்பொழுது ஆண்டவர் குறையாக அல்ல நிறைவாகவே உயர்த்தியுள்ளார் ஆனால் அது என் சொந்த பெலத்தினால் அல்ல அனைத்தும் பரிசுத்தாவியானவரின் ஒத்தாசை. பரிசுத்த ஆவியானவர் இம்மட்டும் வழிநடத்தின படியால் இந்த ஊழியம் இம்மட்டும் நடைபெற்று வருகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. தொடர்ந்து கர்த்தருடைய ஆவி பற்றிய இன்னும் சில முக்கிய காரியங்களை இன்றைக்கு நாம் பார்ப்போம். பரிசுத்த ஆவியினால் என்னென்ன ஆகும்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள்:


(மத்தேயு 1:18) இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.


உலகபிரகாரமாக ஒரு ஆணும் பெண்ணும் உடன்படாமல் கர்ப்பம் தரிப்பது கூடாத காரியம். மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த நாட்களில் அவர்கள் கூடி வருமுன்னே மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள். யோசேப்பு மரியாள் கர்ப்பவதியானாள் என்பதை அறிந்து இரகசியமாய் அவளைத் தள்ளிவிட தீர்மானித்தார் ஏனென்றால் அவன் நீதிமானாய் இருந்தபடியினால் அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை. இந்த பூமியில் பரிசுத்த ஆவியால் மாத்திரமே ஒரு பரிசுத்த சந்ததியை உருவாக்க முடியும்.


வேலூரில் இருந்து ஒரு குடும்பம் நமது சபைக்கு வந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்துகொண்டு ஆராதனையின் போது அக்குடும்பத்திலுள்ள வாலிபமகளின்மேல் அசுத்தஆவி ஒன்று அலைகழிக்க ஆரம்பித்தது. ஊழியராகிய நான் சபை நடுவே இயேசுவின் நாமத்தினாலே பிசாசை வெளியே போ என்று கடிந்து கொண்டபோது உடனே பிசாசு வெளியேறி அந்த வாலிபபெண் விடுதலை பெற்றுக்கொண்டாள். அதன் பிறகு அவர்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள் அதிலே என் மகள் 25 வயது ஆகியும் பெரிய மகளுக்கான பருவம் அடையாமல் இருந்தது. உங்களிடம் வந்து ஜெபித்து பிறகு ஒரு வாரத்தில் பருவமடைந்துவிட்டாள். இதற்கு முன்னமே என் மகளுக்கான திருமணம் வரன் ஆயத்தமாக இருந்தார். திருமணகாரியங்களும் நன்கு நடைபெற்றது. கர்த்தர் உங்கள் மூலமாக இந்த மகளுக்கு பெரிய காரியங்களை செய்தார்.


இயற்கைக்கு அப்பாற்பட்ட எவ்வளவு பெரிய சக்தியினாலும் செய்யக் கூடாத மாபெரும் வல்லமையானாலும் பரிசுத்த ஆவியினாலே செய்ய முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றவர்களாக இருப்பீர்கள் ஆனால் அந்த பரிசுத்த ஆவியை ஒருநாளும் இழந்து விடாதபடி அதைக் காத்துக் கொள்ள வேண்டும் அபிஷேகத்தை பெற்றவளாய் இருந்தால் அந்த அபிஷேகத்தை காத்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியை பெற்ற பிறகு பரிசுத்த ஆவியை நமக்குள் இருக்கிறாரா ? இல்லையா? என்று நமக்குச் சந்தேகம் வரும். ஆனால் ஆண்டவர் மிக அழகாக ஒரு வாக்குத்தத்தம் சொல்லி இருக்கிறார் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை. என்றைக்கு நாம் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று முழுகி ஞானஸ்நானம் பெற்று உலகத்தை விட்டு தேவனை பற்றி கொள்கிறோமோ அன்றைக்கே பரிசுத்த ஆவியானவர் நம்மை அங்கீகரித்து அபிஷேகித்து நம்மோடு கூட இருக்கிறார்.

தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளை துரத்த முடியும்.
(மத்தேயு 12:28) நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
பிரியமானவர்களே தேவனுடைய ஆவியினாலே மாத்திரம் தான் பிசாசுகளை துரத்த முடியும். இந்த பொல்லாத உலகத்திலே பிசாசின் கிரியைகள் நிறைந்த மக்கள் நடுவினிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்தால் மாத்திரமே அவைகளை (பிசாசின் கிரியைகளை) கட்டவும், துரத்தவும், அழிக்கவும் முடியும். இயேசு கிறிஸ்து தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளை துரத்தினார்.
(அப்போஸ்தலர் 10:38) நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.


பரிசுத்த ஆவியினாலே தீர்க்கதரிசனம் :


(லூக்கா 1:67-70) 67. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: 68. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும், 70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளினார்.
சகரியா என்பவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனம் உரைத்தார் என்று வேதம் சொல்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் வந்தால் நாம் தீர்க்கதரிசனம் சொல்ல முடியும். ஆவியானவர் எப்பொழுது நமக்குள் நிறைந்து இருக்கிறாரோ அப்பொழுதுதான் தீர்க்கதரிசனம் நமக்குள் இருந்து வெளியே வரும். இதற்கு மாறாக இன்றைக்கு அநேகர் பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக்கொள்ளாமல் பரிசுத்த ஆவியினாலே அல்லாமல் மாம்சமாகவே அநேக தரிசனங்களையும் தீர்க்கதரிசன வார்த்தைகளையும் உரைத்துக்கொண்டு இன்றைக்கு அவமானப்பட்டு போகிறதை நாம் பார்க்கிறோம். தீர்க்கதரிசனம் என்பது வரப்போகிற காரியங்களையும் நடந்த காரியங்களையும் நடந்துகொண்டிருக்கிற காரியங்களையும் தீர்க்கமாக தரிசனத்தை பார்த்து சொல்வது.

மரணத்தை அறிந்து கொள்ள முடியும்:

(லூக்கா 2:26) கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.


பரிசுத்த ஆவியினாலே மரணத்தையும் அறிந்து கொள்ளமுடியும். அதெப்படியென்றால் வேதத்தில் பார்க்கிறோம். சிமியோனிடம் ஆவியானவர் நீ கிறிஸ்துவை காண்பதற்கு முன்னே மரணம் அடைவதில்லை என்று சொல்லியிருந்தார். சிமியோன் கர்த்தருடைய வருகைக்காக காத்திருந்தார். நாமும் வருகைக்காக தான் காத்திருக்கிறோம் ஏதோ ஆண்டவர் மறுபடியும் பிறப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. மீண்டும் அவர் ஒரு மணவாளனாக வருவார் என்று நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் சிமியோன் நான் மரணம் அடையுமுன்னே கிறிஸ்துவை காண வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையோடு காத்திருந்தார்.


அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திற்க்கு வந்திருந்தான். நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் இயேசுவை உள்ளே கொண்டு வருகையில், சிமியோன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர், புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான் என்று இந்த பிள்ளையை வாங்கி ஆசீர்வதிப்பதை பார்க்கிறோம் கடைசியாக நான் பார்த்த காரியங்களில் மரணத்தைக்கூட தேவ ஆவியினால் அறிந்துகொள்ள முடியும் என்பதை நாம் தேவ மனுஷனாகிய சிமியோன் மூலமாக நாம் பார்க்கிறோம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *