தேவன் உங்களோடு இருக்கின்றார் | Rev. B.E. Samuel

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இந்த இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து நம்முடைய மகிமையினாலே நிரப்புவாராக.

பிரியமானவர்களே இன்றைக்கு நாம் தியானிக்க போகிற பகுதி. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைபற்றியதான செய்தி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி மத்தேயு 1:23-ல் சொல்லப்பட்டுள்ளது “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்” இம்மானுவேல் என்ற பெயர் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. “இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடுகூட இருக்கின்றார்” என்று அர்த்தமாம்.

தேவதூதன் யோசேப்புக்கு தரிசனமாகி மத்தேயு 1:20. தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி நம்மை இரட்சிப்பார் என்றான்.
தேவன் நம்மோடு இருக்கிறார் என்று பழைய ஏற்பாடு சொல்கிறது ஆனால், புதிய ஏற்பாட்டில் தேவன் நம்மோடு இருப்பது மாத்திரம் அல்ல நம்மோடு இருந்து இரட்சிக்கிறவராகவும், நம்மை மீட்கிறமீட்பராகவும் இருக்கிறார் என்று புதிய ஏற்பாடு சொல்கிறது. இயேசு பிறப்பதற்கு. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னே ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் “இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்றார்”

அவரது பிறப்பானது யூத குலத்தில் உண்டாகும் என அக்கால யூதக்குலமக்கள் அறிந்திருந்தபடியினால் யூத பெண்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த கன்னிகைகளாய் தங்களை காத்துக்கொண்டு, உலக இரட்சகர் எப்படியாகிலும் என்னிடத்தில் பிறப்பார் என்று எதிர்நோக்கி காத்திருந்தார்கள். அந்நாட்களிலே மரியாளும் மிகுந்த பரிசுத்தத்தோடும் பரிசுத்த ஆவியின் நிறைவோடும் வாஞ்சையோடு காத்துக்கொண்டிருந்தாள்.

லூக்கா 1:28-31,34,35. அந்த சமயத்தில்தான் காபிரியேல்தூதன் மரியாளுக்கு தரிசனமாகி கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? நான் இன்னும் புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளைப்பார்த்து பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் வந்து நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என்பதாய் வேதம் நமக்கு தெளிவாய் குறிப்பிடுகிறது.
அவருடைய பிறப்பைக் குறித்தும், தேவ திட்டம் மரியாளிடத்தில் எப்படி நிறைவேறும் என்பதையும், தேவதூதன் மூலமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த எல்லா நிறைவேறுதலுக்கும் முழு காரணமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஒன்று தான் மூலகாரணமாய் செயல்படுகிறதென்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் மிகவும் முக்கியமானவராக இருந்தார். அதே போல உலகத்தில் எந்த ஒரு மகத்தான காரியத்திற்கும் பரிசுத்த ஆவியானவர் மிக முக்கியமாக காரணராக காணப்படுகிறாரென்பதை நீங்கள் நன்றாய் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் சாத்தானை ஜெயிக்கவோ துரத்தவோ முடியாது. வேதத்தில் நடந்த ஓரு சம்பவம் பார்க்கிறோம் அபிஷேகம் பெறாத 7 பேர் ஒரு மனிதனுக்குள்ளிருந்த பிசாசை துரத்த போய், அந்த பிசாசு இவர்களைப் எதிர்த்துநின்று அவர்களை தாக்கி பலாத்காரம் பண்ணினதினால் அந்த ஏழுபேர் நிர்வாணமாய் ஓடிப்போனார்கள். ஆகவே பிசாசை துரத்துவதை குறித்து நாம் அற்பமாய் எண்ணிவிடக்கூடாது. மிகவும் பரிசுத்தமாயிருந்து ஆவியில் நிறைந்து ஜெபத்தில் அனுதினமும் இருந்தால்தான், எதிர்க்க முடியும் சாத்தானை ஜெயிக்க வேண்டும் என்றால் அபிஷேகம் மிக முக்கியம். நீங்கள் உலகத்திலுள்ள மற்ற எல்லா பிசாசுகளைத் துரத்துவதைவிட முதலாவது உங்களுக்குள் இருக்கிற குடும்பத்தில் இருக்கிற உங்களுடைய எல்லைகளில் இருக்கிற பிசாசின் வல்லமைகளை துரத்த நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டு ஆயத்தமாக காணப்படவேண்டும்.

மரியாள் பரிசுத்த ஆவியை பெற்றதினால் தான் இரட்சகராகிய இயேசுவை பெற்றெடுக்க முடிந்தது. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய கிரியைகளை செய்துவிட்டு போய்விடுவார் அதன்பின்பு முழுமையாக பரிசுத்த ஆவியானவர் மேல் வீட்டு அறையில் கூடி இருக்கும்போது ஊற்றப்பட்டார்

அப்போஸ்தலர் 2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. 4. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

பிரியமானவர்களே ஆவியின் அபிஷேகம் ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் முக்கியமான ஒரு அடையாளமாகப் காணப்படுகிறது. இன்றைய நாட்களில் இரட்சிக்கப்பட்டு அநேக வருஷங்கள் ஆகியும் ஆவிக்குரிய வாழ்வில் கொஞ்சமும் வாஞ்சை இல்லாமல் அபிஷேகம் பெற வேண்டும் என்ற விருப்பம் கொஞ்சமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஒரு தேவபிள்ளை இரட்சிக்கபட்டும் அபிஷேகம் பெறாமல் இருந்தால் அவரைப் போல பரிதாபமான மனிதன் வேறு யாரும் இருக்கவே முடியாது.

அப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டும் ஒரு பிரயோஜனமில்லாதவர்கள். வேதத்தில் வாசிக்கிறோம் அப்போஸ்தல நாட்களிலே 84 வயதைக் கொண்ட ஒரு விதவை தேவாலயத்தை விட்டு பிரியாமல் இரவும் பகலும் தேவாலயத்திலேயே தங்கி ஜெபம் பண்ணிகொண்டிருந்தாள் என்று பார்க்கிறோம். ஆனால் இன்று ஏன் உங்களால் அப்படி ஜெபிக்க முடியவில்லை? குறைந்தது தினமும் ஒரு மணி நேரமாவது தேவ சமூகத்திலே ஜெபிக்க முடியவில்லையே கொஞ்ச நேரம் ஜெபித்துவிட்டால் போதும் உடனே சோர்ந்து தூங்கிவிடுகிறீர்கள் சபைக்கு வந்தால் சபை ஆராதனையிலும் தூக்கத்தினால் சோதிக்கபடுகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்குள்ளே அக்கினியின் ஆவி மற்றும் மெய்யான அபிஷேகம் ஊற்றப்படாததினாலே நீங்கள் இந்த நிலையில் இருக்கின்றீர்கள். ஆதி அப்போஸ்தல நாட்களில் இருந்த அபிஷேகம் அந்த வயதான தாயாரை நிரப்பியிருந்தது அந்நாட்களில் இருந்த அந்த அபிஷேகம் இன்றைய நாட்களில் உங்களுக்கும்வேண்டும்.

அப்போஸ்தல நாட்களிலே மேல்வீட்டறையை நிரப்பின அந்த அக்கினி இன்று உங்கள் வாழ்வில் பரிபூரணபட வேண்டும் அதற்கு நீங்கள் உபவாசித்து தேவனை நோக்கி கண்ணீரோடு கதற வேண்டும். அப்பொழுது பரலோகத்தின் ஜீவநதியாம் பரிசுத்த ஆவியானவரை நீங்கள் பெற்று அக்கினியாய் மாற்றப்படுவீர்கள். உலகரட்கரான இயேசுவுக்கே பரிசுத்தாவியும் வல்லமையும் தேவைப்பட்டது:

அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் ஊழியம் செய்ய தொடங்கியபோது அவர் ஞானஸ்நானம் பெற்று கரையேறினவுடனே பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல ரூபம் கொண்டு அவர் மேல் வந்து அமர்ந்தார். அன்று முதல் கொண்டு அவர் ஒவ்வொரு கிராமங்களிலும் சென்று கட்டுண்டவர்களை விடுதலையாக்கவும் இருதயநொறுங்குண்டவர்களை ஆறுதல் படுத்தவும் குருடர் கண்களைத் திறக்கவும் செவிடர் செவிகளை திறக்கவும் முடவரை நடக்க செய்யவும் மரித்தவர்களை உயிரோடு எழுப்பவும் அநேக ஆத்துமாக்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருந்தார். எல்லாவற்றுக்கும் அடையாளமாக அவர்மேல் இருந்த அந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேக நிறைவுதான் அவர் பூமி எங்கிலும் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிய பண்ணினது. பிரியமானவர்களே நீங்களும் இரட்சிக்கப்பட்டு இருப்பீர்களென்றால் அபிஷேகம் பெற்று கர்த்தருக்காக ஒரு பிரயோஜனமுள்ள வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுக்கவேண்டும். இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருந்த படியால் அவர் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார்.

லூக்கா 1:44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. 45. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.

யோவான் ஸ்நானகனின் வேலை இயேசு கிறிஸ்துவுக்கு முன்பதாகவே அவருக்கு வழியை ஆயத்தப்படுத்துவது. இயேசுவின் உறவின் முறையான சகரியா எலிசபெத்திற்கு யோவான் ஸ்நானகன் பிள்ளையாக பிறக்கின்றார் அவர் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை கொடுத்து, ஜனங்களை மிகவும் எச்சரிப்போடு கண்டித்து, உணர்த்தி, எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் ஜனங்களை வழிநடத்திக் கொண்டு வந்தார். அவரைக் கண்டவர்கள் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தார்கள், நீங்களும் யோவானைப்போல பிரகாசமான ஒரு வாழ்வு வாழ வேண்டுமென்றால், எப்பொழுதும் பரிசுத்த ஆவியில் நிறைந்து இருக்க வேண்டும். யோவான்ஸ்தானன் தாயின் வயிற்றிலிருந்தபோதே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றதினாலே இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ண முன் அனுப்பப்பட்டார்.

பரிசுத்த ஆவியினால் அசாராதன காரியங்களை நடபித்த சிம்சோன்:
நியாயாதிபதிகள் 15:14. அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. 15. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான். 16. அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

சிம்சோன் ஒரு நசரேய விரதம் கொண்ட உடன்படிக்கையில் பிறந்தவன் அவன் தாய் தகப்பனார் பிள்ளை வேண்டி ஜெபித்த போது உனக்கு ஒரு பிள்ளையை தருவேன். அவனை நசரேயனாய் இருப்பான். இஸ்ரவேலை நியாயந் தீர்க்கக்கூடிய நியாயாதிபதியாக இருப்பான் என்று சில கட்டளைகளையும் ஆண்டவர் கொடுத்தார் அதன்படி மதுபானம் குடியானவனும் தீட்டானதை தொடாமலும் தன் தலைமயிரை சிரைக்கபடாமலும் கவனமாயிருக்க வேண்டும் என்ற கட்டளையை பெற்றிருந்தான். ஆண்டவர் தானே சிம்சோனின்மேல் தங்கிருந்தார் ஆவியானவர் அவனோடு இருந்தபடியினாலே ஒருமுறை அவனுக்கு எதிரிட்டு வந்த ஓராயிரம் பேரை அவன் கழுதையின் பச்சை தாடை எலும்பினாலே கொன்று போடவும் பலமுள்ளவனாக அவனை மாற்றியது ஆவியானவருடைய அபிஷேகம் பிரியமானவர்களே, நீங்களும் கர்த்தருக்காக பயனுள்ள ஒரு பாதையில் செயல்பட வேண்டுமென்றால், பரிசுத்த ஆவியின் நிறைவை நிச்சயமாய் பெற்றிருக்க வேண்டும். அதை காத்துக்கொள்ளவும் பிரியாசப்பட வேண்டும். சிம்சோன பரிசுத்த ஆவியை பெற்றதினாலே அவனுக்கு போடப்பட்ட அனைத்து கட்டுக்களும் அறுந்து போனது.

விசுவாசியென்றாலே பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்றவனாகத்தான் இருக்கவேண்டும்:

அப்போஸ்தலர் 19:2. நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
பரிசுத்த ஆவி இல்லாமல் நீங்கள் உலகத்தை ஜெயிக்கவே முடியாது. எந்த ஒரு விசுவாசிக்கும் பரிசுத்தஆவி தான் முக்கிய அடையாளம் பரிசுத்த ஆவி இல்லாமல் நீங்கள் பிசாசை ஜெயிக்க முடியாது. இன்றைக்கும் உலகத்தில் உங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற மனிதர்களை, நீங்கள் பெரும் சத்துருக்களாக எண்ணி அவர்களை பகைக்கிறீர்கள். ஆனால் உண்மையான சத்துருக்கள் அவர்கள் அல்ல, அவர்களுக்குள் கிரியை செய்கிற பொல்லாத சாத்தானே.

எபேசியர் 6:10 -ல் “அன்றியும் சகோதரரே நீங்கள் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” என்று வேதத்தில் அழகாய் சொல்லப்பட்டுள்ளது ஏன் நீங்கள் சபைக்கு செல்ல வேண்டும் அவரவர்கள் வீடுகளிலேயே அமர்ந்து ஜெபித்தால் போதாதா ? போதாது சபையில் தான் ஒருமனப்பட்டு நீங்கள் கூடி ஆராதிக்கவேண்டும் அப்பொழுதுதான் சாத்தானை எதிர்த்து நிற்க முடியும் தேவன் சபையிலே அபிஷேகித்து அனுப்புகிறார் எல்லாரும் சபை கூடி வரும்போது ஆவியில் நிறைந்து அவரவர்களுக்கு தந்தருளின வெவ்வேறு பாஷையை பேசத் தொடங்குவார்கள் தேவபிள்ளைகளே மரியாள் தேவனுடைய ஆவியினால் நிறைந்ததால், தேவ பிள்ளையாகிய இயேசுவை பெற்று இந்த உலகத்திற்கு கொடுக்க முடிந்தது நீங்கள் அதேபோல தேவ ஆவியினால் நிறைந்திருந்து தேவனுக்காக பலத்த காரியங்களை செய்ய வேண்டும் ஒரு விசுவாசிக்கு அடையாளமாக பரிசுத்தாவியின் நிறைவும்

பரிசுத்தர் ஆவியானவருடைய அபிஷேகமும் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜீவிக்கிற ஜீவியமும் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபிக்கிற ஜெபமுமே மிக முக்கியமான காரியம் ஆகவே பிரியமான தேவ பிள்ளைகளே காலம் தாழ்த்தாமல் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேக நிறைவை பெற்றுக்கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *