தேவனுடைய யுத்தம் | Pr. B. E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

II நாளாகமம் 20:3,4 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள்.

இங்கே வாசிக்கபட்டுள்ளதான ஒரு சம்பவத்தைதான் உங்களோடு செய்தியாக சொல்ல போகிறேன் யோசபாத் ராஜா இஸ்ரவேல் நாட்டை அரசாண்டு கொண்டிருந்தார். யோசபாத் ஆளுகை செய்துகொண்டிருந்தபோது அவனுக்கு விரோதமாக மோவாப் புத்திரரும் அம்மோன் புத்திரரும் தூர தேசத்தில் உள்ள மனுஷரும் யுத்தம் செய்ய வந்தார்கள். அப்பொழுது ராஜா பயந்து கர்த்தரை தேடுவதற்கு ஒருமுகப்பட்டு யூதா எங்கும் உபவாசத்தை கூறிவித்தான் அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்தில் சகாயம் தேட கூடினார்கள் யூதாவில் உள்ள எல்லா பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரை தேடி வந்தார்கள்.

நாம் ஆலயத்திற்கு போகிறோம் என்றால், கர்த்தரைத் தேட வேண்டும் நாம் ஆலயத்தில் அவரை பார்க்க வேண்டும் அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் அவருடைய கரம் நம்மேல் வைக்க வேண்டும் நாம் ஜெயம் எடுக்க வேண்டுமானால்? பிசாசு நமக்கு விரோதமாக எப்பொழுதும் யுத்தம் செய்து நமக்கு முன்பாக ஏதாகிலும் தடைகள் சாபங்கள் போராட்டங்கள் என்று போட்டுக் கொண்டே இருப்பான். நாம் ஒரு ஜான் வளர்ந்தால் ஒரு முழம் கீழே  சறிக்கிவிட செய்கிறான் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் கர்த்தரைத் தேட வேண்டும் யூத ஜனங்கள் எல்லோரும் கர்த்தரிடத்தில் ஒன்றுகூடி சகாயம் தேடினார்கள்.

II நாளாகமம் 20:5,6 அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று:எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது.

யோசபாத் ராஜா எப்படி ஜெபிக்கிறார் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே பரலோகத்தில் இருக்கிற நீரல்லவோ தேவன் என்றார் நமக்கு ஒரு பிரச்சினை வரும்போது என்ன சொல்கிறோம் ஆண்டவரும் தெய்வம்தான். அப்படி சொல்லும்போது ஆண்டவரை தூஷணம் செய்கிறீர்கள் ஆண்டவருக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம் ஆண்டவரும் தெய்வம் தான் அல்ல ஆண்டவர் தான் தெய்வம்.

தேவரீருடைய ராஜ்ஜியங்கள் எல்லாம் ஆளுகிறவர் அவருடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரம் இருக்கிறது அவரை ஒருவரும் எதிர்க்கக் கூடாது இயேசுவை எதிர்த்து நிற்க உலகத்திலே ஒருவராலும் முடியாது அதுதான் வேதம் சொல்லுகிறது. உனக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதமும் அது வாய்க்காதேபோம் நீங்கள் சில நேரங்களில் பயப்படுகிறீர்கள் ஒருவராய் வந்தால் நான் சமாளித்து விடுவேன். ஆனால், பல பேராக வருகிறார்களே என்று  நினைக்கிறீர்கள். உண்மையாகவே  நான் சொல்கிறேன் ஒருவராய் வந்தாலும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது பலபேராய் வந்தாலும் இயேசு உனக்குள் உன் ஜெபத்திற்க்குள் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. இயேசு உனக்குள் உன் ஜெபத்திற்க்குள் உன் வாழ்க்கைக்குள் இருந்தால் சகலமும் ஜெயமாய் முடியும். வேதம் சொல்கிறது உலகத்திலே இருக்கிறவனிலும் உங்களில் இருப்பவர் பெரியவர் என்று. யோசபாத் ஜெபத்தின் தொடர்ச்சியை பார்க்கலாம் 20:7,8,9 

II நாளாகமம் 20:7,8,9 எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.எங்கள்மேல் பஞ்சம் வறுமை, நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வசனத்தில் தேசத்தில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் பட்டயம் பஞ்சம் வறுமை என்கிற நியாய தண்டனை  சில நேரங்களில் நம் தேசத்திற்கு விரோதமாக வரும். அதாவது தேசத்தை ஆளுகிறவர்கள் மூலமாக ஜனங்களுக்கு கெடுதல்.தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக பட்டயங்கள் பஞ்சங்கள் ஆத்துமாவுக்கு விரோதமான கசப்பான காரியங்கள் வந்து நம் இருதயத்தையும் நம் தேசத்தையும் பட்டயம்போல் அது நம்முடைய ஆத்துமாவை வெட்டும். இருதயம் துண்டிக்கப்படும் நாம் மிகவும் வேதனைப்படுவோம்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் எங்கே தவறு செய்திருக்கிறோம் என்று உணர்ந்தால் போதும் அந்த நியாய தண்டனைக்கு தப்பித்துக்கொள்ளலாம். அநேகர் இன்று சொல்கிற ஜெபம் ஆண்டவரே ஏதாவது நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னியுங்கள் என்கிறார்கள் நாம் செய்த தவறு என்று நமக்கே நன்றாக தெரியும். ஆனால், நான் எதையாவது செய்திருந்தால் மன்னியுங்கள் என்கிறோம்.

அன்றைக்கு ஆதாம் செய்த அந்த தவறை தான் நாம் இன்றைக்கும் செய்கிறோம் ஏன் இந்த கனியை புசித்தாய் என்று ஆண்டவர் கேட்டதற்கு ஆதாம் நீர் கொடுத்த இந்த ஸ்திரி சொன்னதால் நான் இதை செய்தேன் என்றான் ஆதாம் செய்த தவறை தான் கிறிஸ்து பிறந்து 2000 வருஷம் ஆகியும் இதுவரைக்கும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். நினைத்துப் பாருங்கள் எங்கே தவறி இருக்கிறோம் இது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை  எனக்கு விரோதமாய் கத்தி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்மேல் தீய சொற்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதத்திற்கு வாய்ப்பே இல்லை என்று நிதானித்து மற்றவர்கள் மேல் பழி போடாமல் நீங்கள் முழங்கால்படியிட்டு எங்கே தவறு செய்துள்ளேன் ஆண்டவரே எனக்கு உணர்த்தும் என்று அப்படி ஜெபிக்கும்போது அந்த நிமிடத்திலேயே நீங்கள் விடுவிக்கபடுவீர்கள்.

பாவத்திலிருந்து விடுதலை ஆக்கப்படுகிறார்கள் ஜெபிப்பது எப்படி ஜெபிக்க வேண்டும் என்றால் என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபிக்க வேண்டும். ஏனென்றால், நம் கண் காது எல்லாம் எப்படியாவது பாவத்தை செய்துவிடும் பாவத்தின் சம்பளம் மரணம் மரண ஆக்கினை வந்துவிடும் அந்த ஆக்கினை நம்மில் வராதபடிக்கு முதலாவது நாம் என்ன செய்யவேண்டுமென்றால் யோசபாத் ராஜா சொல்லுகிறது போல எங்கள்மேல் பட்டையம் நியாய தண்டனை கொள்ளைநோய் பஞ்சம் வருகிறது என்று ஜெபிக்கிறார்.

நமது வீட்டில் நமக்கு நல்ல வருமானம் வந்தாலும் வறுமையாக காணப்படுகிறது. வறுமை வருவதற்கு காரணம் என்னவென்று அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் பட்டயமும் கொள்ளைநோயும் பஞ்சமும் வந்தால் உடனே முழங்கால்படியிட்டு எங்கே தவறு இருக்கிறீர்கள் என்று நிதானித்து சரி செய்து கொள்ள வேண்டும். மன்னிப்பு ஆண்வரிடத்தில் கேட்கவேண்டும் அவர் சவுக்கினாலும் விஷப்பனியினாலும் கருக்காயினாலும் தண்டிக்கிற ஆண்டவரல்ல  உங்களுக்காக அவர் மரித்தாலும் மரிப்பாரே தவிர உங்களை கொன்று போட மாட்டார் உங்களுக்காக அவர் ரத்தம் சிந்துவாரே தவிர உங்களை இரத்தம் சிந்த விடமாட்டார். உங்களுக்காக அவர் வாரினால் அடிக்கப் பட்டாலும் படுவாரே தவிர உங்களை வாரினால் அடிக்கமாட்டார் அப்படி தண்டனைகள் வருகிறது என்று சொன்னால் நாம் நிச்சயமாய் எங்கேயோ தவறி இருக்கிறோம் என்று கவனமாய் கவனிக்கவேண்டும். பிரியமானவர்களே இப்படியாக யோசபாத் ஜெபிக்கிறார் நியாய தண்டனை கொள்ளைநோய் பஞ்சம் வந்தால் எங்கள் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அவர் சந்நிதியாகிய ஆலயத்தில் போய் நின்று ஜெபித்தால் நீங்கள் கேட்டு பதிலளிப்பீர் என்று சொல்லுயிருகிறார்கள் என்று ஜெபிக்கிறார்

II நாளாகமம் 20:10,11,12 இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

பொதுவாக நமக்கு பிரச்சினைகள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் யாரிடத்தில் போனால் தீரும் என்று நினைக்க கூடாது யாரிடத்தில் போனாலும் தீராது இயேசுவை நோக்கி முதலாவது கண்ணோக்கி பாருங்கள் 

II நாளாகமம் 20:13 யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.

நாம் குடும்பமாக ஏன் தேவ  சந்நிதானத்திற்கு போகிறோம் இதுதான் காரணம் தேவஸ்தானத்தில் குடும்பமாக வந்து ஆண்டவரை கண்ணோக்கி பார்க்கும்போது நாம் குடும்பமாய் தேவசமூகத்தில் நிற்கும் போது குடும்பத்தார் முகத்தை பார்த்து மனதுருகி மன்னித்து ஆசீர்வதிக்க அவர் வல்லவராயிருக்கிறார். ஆகையால் எனக்கு பிரியமானவர்களே உங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் பிரச்சினை வந்தாலும் பிசாசின் கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் நாம் குடும்பமாய் ஆலயத்திற்கு போய் ஜெபமோ அல்லது உபவாச ஜெபமோ ஏறெடுத்தும் பொழுது கர்த்தர் பார்த்து நம் ஜெபத்தை கேட்டு பதிலளிக்க இயேசு வல்லவராயிருக்கிறார். நன்றாக இந்த வசனத்தில் பார்த்தோம் என்றால் குழந்தைகள்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள் என்று வேதவசனம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

II நாளாகமம் 20:14 அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

இங்கே யோசபாத் ராஜாவும் யூதா ஜனங்களும் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது ஆண்டவரே எங்களுக்கு விரோதமாய் அம்மொனியர் மோவாபியர் அன்னிய ஜனங்கள் கூட்டம் கூடி யிருக்கிறார்களே இதன் மத்தியில் எங்களுக்கு நீரே சகாயர்‌ என்று சொல்லித்தான் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது சபையிலே கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினார் யார்மேல் இறங்கினார் என்றால் யகாசியேல் என்னும் ஆசாப்பின்  புத்திரரில் ஒருவனான லேவியன் மேல் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினார் பரிசுத்த ஆவி உங்களுடைய வாழ்க்கையில் அவசியமா இல்லையா என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் அநேகர் இன்றய நாட்களில் பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுப்பதே இல்லை பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்கிறேன் நீங்கள் உங்களை நினைக்கவே நினைக்காதீர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக கல்வாரி காட்சியில் சிலுவையில் இயேசுவை நோக்கிப் பாருங்கள் அதை பார்க்க பார்க்க நீங்கள் மேலே போய்க் கொண்டே இருப்பீர்கள் நீங்கள் இயேசுவை குனிந்து கீழே பார்க்க முடியாது மேல் நோக்கி தான் பார்க்க முடியும் ஏனென்றால் கல்வாரி சிலுவையிலே உயிருடன் உங்களுக்காக தொங்கிக் கொண்டிருக்கிறார்  கல்வாரி காட்சியை நீங்கள் பார்க்கிற அந்நேரத்தில் தான் உங்களுக்கு சரீரத்திலே பிசாசானவன் பலவீனத்தையும் வலிகளையும் காண்பிப்பான் முழங்கால் வலிக்கிறது போல காணப்படும்  கை வலிக்கிறது போல காணப்படும் நான் உங்களுக்கு சொல்கிறேன் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வது சாதாரண காரியம் அல்ல பெற்றுக் கொண்டு விட்டார்கள் என்றால் உங்களைப்போல பாக்கியவான்கள் யாருமில்லை ஒரு காலத்தில் நான் பரிசுத்த ஆவியில் இருந்தேன் என்று சொன்னால் அது செல்லாது இன்றைக்கு நீங்கள் பரிசுத்த ஆவியில் நிரம்பி காணப்பட வேண்டும், 

ஒருவரை நீங்கள் இரட்சிப்புக்குள்  நடத்த வேண்டும் என்றால் வெற்றி சிறந்த வாழ்க்கையில்  நடத்தப்பட வேண்டும் என்றால் பாவத்திலிருந்து சாபத்திலிருந்து அநியாயத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் உங்கள் ஜெபம் கேட்கப் பட வேண்டும் உங்கள் ஜெபம் கேட்கப் வேண்டும் என்றால் பரிசுத்த ஆவியானவரை அவசியம் பெற்றிருக்கவேண்டும்.

  இங்கே யோசபாத் ராஜாவும் யூத ஜனங்களும் ஜெபம் செய்கிறார்கள் அப்பொழுது லேவியன் மேல் கர்த்தருடைய ஆவியானவர் இறங்கி வந்தார் அதன் பின்புதான் அவர்கள் வழி நடத்தப்படுகிறார்கள் பரிசுத்த ஆவியானவர் வந்தால்தான் நீங்கள் வழி நடத்தப் படுவீர்கள் வெற்றியின் வழியிலே சுகத்தின் வழியிலே பாதுகாப்பின் வழியிலே நடத்தப் படுவீர்கள் இதற்கு நீங்கள் கட்டாயம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக்கொள்வது அவசியம். இன்றைக்கு 90 சதவீத விசுவாசிகளில் பரிசுத்த ஆவி இல்லை பரிசுத்த ஆவி உண்டு என்று சொல்லி கொள்கிற விசுவாசிகளில் கூட நிறைவான அபிஷேகம் இல்லை சபைக்கு வந்தோமா போனோமா  என்று போய்விடுவார்கள். மற்றவர்களைப் பார்த்து நாம் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறோம் நம்மை பார்த்து அவர்கள் வளர்ச்சி அடைய வேண்டுமேதவிர ஏமாற்றபடக்கூடாது.

நீங்கள் ஜெபிக்கிற ஜெபம் ஆராதிக்கிற ஆராதனை அபிஷேகத்தின் நிறைவை பார்த்து அவர்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.  அதேநேரத்தில் மற்றவர்களைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளாத படிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  உங்களிடத்தில் ஜெயம் உள்ள வாழ்க்கை காணப்படுகிறதா? வெற்றியுள்ள வாழ்க்கை உண்டா? என்று ஆராய்ந்து பாருங்கள் எப்படி உங்களுக்கு வெற்றி உண்டாகும் என்றால் பரிசுத்த ஆவியானவர் வந்த பிறகு தான் ஜெயத்தை தருகிறார் வெற்றியின் வாழ்க்கையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது பரிசுத்த ஆவியானவர் அவசியம் லேவியன் மேல் இறங்கின ஆவியானவர் என்ன சொல்லுகிறார் வாசிப்போம்

II நாளாகமம் 20:15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே இந்த வசனத்தை பார்த்தீர்களா முக்கியமாக நமக்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் ஆவியானவர் வர வேண்டும் என்றைக்கு ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறீர்களோ அன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையில் ஜெயம். சில சபைகளில் குறி சொல்வது போல தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் ஜனங்களும் அதைக் காது கொடுத்துக் கேட்பார்கள் போதகர் சொல்வது அல்ல ஆவியானவர் சொல்வதைக் கேளுங்கள். சில நேரங்களில் போதகர் மூலமாக பேசுவார். ஆனால், போதகரையே பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது இயேசுவை பாருங்கள் இயேசுவை பார்த்தால்தான் பரிசுத்த ஆவியானவர் வருவார்.

பரிசுத்த ஆவியானவர் வந்தால்தான் வெற்றி நிச்சயம் இயேசுதான் எல்லாவற்றையும் செய்ய வல்லமை உள்ளவர் உங்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டம் எழும்புகிறதினாலும் உங்களுக்கு விரோதமாய் சம்பவங்கள் காணப்படுகிறதினாலும் இயேசுவிடம் போங்கள் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபியுங்கள் யுத்தம் உங்களுடையது அல்ல தேவனுடையது உங்களுக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதங்களும் உங்களை அசைக்கவே அசைக்காது அது ஒன்றுமே செய்யாது பிரச்சனை உலகத்தில் காணப்படாமல் இல்லை எல்லாருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உள்ளது ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒருவிதத்தில் பிரச்சினைகள் வரும் அப்படி பிரச்சினை வரும்போது என்ன செய்ய வேண்டுமென்றால் சபையிலே கூடி உபவாசித்து கர்த்தரை நோக்கி  ஜெபிக்கவேண்டும் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்குவார் அவர் சொல்லுவார் இது உங்கள் யுத்தம் அல்ல என்னுடையது என்பார் நீங்கள் சும்மா இருப்பீர்கள் நான் உங்களுக்காக யுத்தம் செய்வேன் என்பார்.

II நாளாகமம் 20:16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

தேவப்பிள்ளைகளே பரிசுத்த ஆவியானவர் ஏதோ தோராயமாக எதையும் சொல்வதில்லை எந்த வழியில் உங்களை சந்திக்க வருகிறார்கள் என்பதை பற்றி இங்கே இந்த வசனத்தில் தெளிவாக சொல்லுகிறார். யுத்தம் நடப்பதற்கு முன்பே எதிரிகள் எந்த வழியாக வருவார்கள் நீங்கள் எந்த வழியாக போவீர்கள் எந்த இடத்தில் அவர்களை சந்திப்பீர்கள் என்கிற விரிவாக்கம் கர்த்தரால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அருமையான தேவ பிள்ளைகளே உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் எந்த தர்க்கமாய் இருந்தாலும் எந்த சோதனையாய் இருந்தாலும் எந்த வேதனையாய் இருந்தாலும் இது யாராலும் தீர்க்க முடியாது. நிர்பந்தமான சூழ்நிலைகளில் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் முதலாவது நீங்கள் ஆண்டவரிடத்தில் முழங்கால் படியிட்டு ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் இறங்கி அந்நேரத்தில் உங்களை தொடுவார். அப்பொழுது அந்த காரியத்தில் நீங்கள் வெற்றியை பெற முடியும். யோசபாத் ராஜாவிடத்திலும் யூத ஜனங்கள் இடத்திலும் ஆவியானவர் சொல்லுகிறார் நீங்கள் யுத்தத்திற்கு பயப்பட வேண்டாம் யுத்தம் செய்வது நீங்கள் அல்ல நான் தான் யுத்தம் செய்யப் போகிறேன் நீங்கள் எதிர்த்துப் போய் சந்தியுங்கள் ஆனால் யுத்தம் செய்வது நீங்கள் அல்ல என்கிறார்.

II நாளாகமம் 20:17,18 இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.

அருமையானவர்களே கர்த்தருடைய அபிஷேகம் பெற்ற உடனே நமக்கு வேண்டியது ஆணவம் என்பது அல்ல தாழ்மை. அபிஷேகம் வந்தவுடனே ஆணவம் இருமாப்பு யாரையும் மதிக்காத குணாதிசயம் இருக்குமென்றால், அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அடையாளமே இல்லை அதைதான் வசனத்தில் பரிசுத்த ஆவியானவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட உடனே யோசித்து ராஜாவும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தாழவிழுந்தார்கள் கர்த்தருடைய வார்த்தையை கேட்ட உடனே அவர்கள் அவருடைய தாழ்மையை தரித்து கொண்டார்கள்.

II நாளாகமம் 20:19 கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டுமானால் கர்த்தரை மனதிற்குள்ளேயே துதிக்காமல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை எந்த அளவுக்கு ஆலயத்தில் சத்தமாய் கெம்பீரமாய் வேகமாய் விவேகமாய் துதிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு துதிக்கவேண்டும். ஆராதிக்கிற உணர்வு உங்களிடத்தில் ஏற்பட்டால் உங்களில் அமைதியாக இருக்கவே முடியாது சத்தமாக ஆராதித்து ஆர்ப்பரித்து துதிக்க முடியும்.

II நாளாகமம் 20:20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

இப்பொழுதும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் முதலில் நீங்கள் கர்த்தரை நம்ப வேண்டும் ஒரு போதகர் கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு சொல்லுகிறார் என்றால், அவர் என்ன பேசுகிறார் என்று  கேளுங்கள். முதலில் கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது நீங்கள் நிலை வரப்படுவீர்கள், இரண்டாவது தீர்க்கதரிசியை நம்புங்கள் அப்பொழுது சித்தி பெறுவீர்கள் ஆசீர்வதிக்கபடுவீர்கள். அப்பொழுதுதான் முழுமை அடைவீர்கள்.

II நாளாகமம் 20:21 பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.

இங்கே கவனியுங்கள் யுத்த வீரர்கள் மட்டும் ஆயுதம் அணிந்து தயாராக இருக்கிறார்கள் யோசபாத் ஒரு ஆலோசனை சொல்லுகிறார். நாம் யுத்தத்திற்கு அணிவகுத்து இருக்கிறோம் ஆனால் யுத்தம் நாம்  செய்யப்போவதில்லை. அதனால், யுத்த வீரருக்கு முன்பாக துதிக்கிறவர்களையும் பாடுகிறவர்களையும் முன்பு நிறுத்தலாம் என்றார். துதிக்கிறவர்கள் பட்டயத்தை வைத்திருக்கிறவர்களைவிட பலம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் ஏனென்றால் யுத்தம் செய்யப்போவது கர்த்தர் ஜெயம் எடுக்கப் போவது கர்த்தர். அதனால் பரிசுத்தமுள்ள மகத்துவத்தை துதிக்கவும் ஆயுதம் அனிந்தவர்களுக்கு முன்பாக நடந்து போய் கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது என்று கர்த்தரை பாடவும் பாடகரை நிறுத்தினார் முன்னே பாடகர் போகிறார்கள்  வீரர்கள் அவர்கள் பின்பாக போகிறார்கள்.

II நாளாகமம் 20:22 அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

அருமையானவர்களே இவர்கள் எப்பொழுது பாடித் துதிக்க ஆரம்பித்தார்களோ அவர்களுக்கு விரோதமாய் பதிவிருந்தவர்கள் எல்லோரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவரை தேவன் எழுப்பி  அவர்களே வெட்டுண்டு விழும்படி செய்தார்.

II நாளாகமம் 20:23 எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.

சற்று கவனமாய் கவனியுங்கள் முதலில் மோவாபியரும் அம்மொனியரும் சேர்ந்து சேயீர் மலை தேசத்தாரை சங்கரித்தார்கள் மோவாபியரும் அம்மொனியரும் சகோதரர்கள் மோவாபியர் ஒரு தேசம் அம்மோனியம்  ஒரு தேசம் இவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் வெட்டுண்டு மடிந்தார்கள்.

II நாளாகமம் 20:24 யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.

பிரியமானவர்களே உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் உலகத்தில் ஒருவர் கூட மீந்து இருக்க மாட்டார்கள் தேவனை நம்பினீர்கள் என்றால் உங்களுக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். 

II நாளாகமம் 20:25 யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.

நிறைவாக யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்களுக்கு விரோதமாய் போய் மூன்று நாட்களாக  கொள்ளையிட்டார்கள் அது அவர்களுக்கு மிகவும் அதிகமாக காணப்பட்டது அருமையான தேவனுடைய பிள்ளைகளே சகோதரனே சகோதரியே உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வராமல் இருக்காது பிரச்சினை ஒரு வகையில் வரும் போதெல்லாம் இவ்வளவு தான் என் வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்று முடிவு செய்யாதீர்கள் உடனே உபவாசம் எடுங்கள் தேவ சமூகத்தில் போய் அழுது ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் இறங்கும் வரை விடாதீர்கள் ஜெபம் செய்யுங்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பினவர்களோடு கர்த்தரே யுத்தம் செய்வார் நீங்கள் யுத்தம் செய்ய தேவையில்லை கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *