ஞானம் உள்ளவனாக இரு |Bro. S.D.Sam Solomon Prabu

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நாம் தியானிக்கபோகிற வேத வார்த்தை என்னவென்றால், (எபேசியர் 5:15) ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,

பிரியமானவர்களே, இந்த வசனம் ஆங்கில வேதாகமத்தில் “BE VERY CAREFUL” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே தமிழில் அர்த்தம் கொள்வோம் என்றால் “மிகவும் கவனமாய் இரு”, அல்லது “மிகவும் ஜாக்கிரதையுள்ளவனாயிரு” அல்லது “அதிக ஜாக்கிரதை உள்ளவனாய் இரு” என்பதாய் புரிந்து கொள்ள முடியும்.  

             எவற்றில் ஜாக்கிரதையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென்றால். நாம் ஞானமாய் நடந்துகொள்வதிலேயே, யாராவது ஒருவர் உங்களை பார்த்து நீங்கள் செய்கிற, பேசுகிற, நடந்து கொள்கிற எந்தவொருகாரியமும்,   புத்தியாய் காணப்படவில்லையே என்று சொல்வார்களானால், உங்களுக்கு எப்படி இருக்கும். மிகுந்த கோபத்தோடு யாரைப் பார்த்து என்ன சொன்னீர்கள் என்பீர்களல்லவா? அதேபோலதான் ஆண்டவரும் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்!  ஞான மற்றவர்களைப் போலல்ல! ஞானம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.  

ஞானம் என்பது என்ன?

திருவள்ளுவர் இப்படியாய் கூறுகிறார்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு 

உதாரணத்திற்கு

ஒரு சம்பவத்தை கூறி இக்காரியத்தை புரிந்து கொள்ள  உதவி செய்கிறேன். ஒருவர் வந்து உன்னுடைய மகன் இங்கே நின்றுகொண்டு பெண்களோடு பேசி அரட்டை அடித்துக்கொண்டு இருக்கின்றான்.  அது மற்றவர் பார்வைக்கு தவறாக அல்லவா தோன்றுகிறது. ஆகவே உம் பிள்ளையை கண்டித்து ஒழுங்கு செய்யும் என்று உம்மிடத்தில் வந்து சொல்வாரென்றால், உடனடியாக அந்தப் பிள்ளையை விசாரியாமல் அது உண்மையா! பொய்யா! என்றுகூட அலசி பார்க்காமல், ஒரு தவறும் செய்யாத பட்சத்தில் தன் மகனை அடித்து அவனை  புண்படுத்தும் போது, செய்யாத காரியத்திற்கு தண்டனை பெற்றது நிமித்தம் பெற்றோர் மீது வெறுப்பும் கசப்பும் உண்டாகுமே தவிர பெற்றோர் மீது அன்பு பக்தியும் கீழ்ப்படிதல் உண்டாகாது ஆகையால் எது உண்மை என்பது அலசி ஆராய்வதே ஞானம் என்பது குறிக்கும்

ஆகவே பெற்றோர்களாகிய நாம் தான் பிள்ளைகளிடம் ஞானமாய் நடந்துகொண்டு   விசாரித்து அது உண்மையானால் அதன் பிறகு சரி செய்யலாம். இதுதான் மிகவும் முக்கியமானது. யாரோ ஒருவர் வந்தார் இப்படி சொன்னார் என்று, உடனடியாக நிதானமற்ற செயல்களை செய்துவிடக் கூடாது. அது  உண்மையா, பொய்யா, என ஆராயாமல், தவறாக புரிந்து ஏற்றுக்கொள்வது ஞானமில்லாத செயலாகும். அதைதான் கர்த்தர் சொல்கிறார் நீங்கள் மதியற்றவர்களைப் போல நடவாமல் ஞானம் உள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள் ஆங்கில வேதத்தில் மிக அழகாக  வெளிப்படையாய் எழுதப்பட்டுள்ளது மதியற்றவனாய், (முட்டாளாய்) இராதே என்று யார் எதை சொன்னாலும் அதை நம்பி அப்படியே ஏற்றுக் கொள்வது இது மிகவும் பெரிய தவறான காரியம்.

நமது ஞானம் எதிலே விளங்கும் என்றால், சொல்லுகிற காரியங்களை கேட்டு, அப்படியே கொண்டு போய் ஒப்புவிப்பதில் அல்ல. அதில் இருக்கிறதான “உண்மை தன்மைகளை” அறிந்து கொண்டு செயல்படும்போதுதான், நாம் ஞானவான்களாய் விளங்குவோம்.

அதைபோல வேத வசனத்தை நாம் வாசிப்பதோடு விட்டுவிடாமல், அதின் உண்மைத் தன்மைகள் என்ன என்பதை ஆராய்ந்து, அறிந்து கொள்ளும்போது  கர்த்தருக்காக ஆழமாக செயல்பட முடியும்.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுதல்:

எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

(OPPORCHUNITY) கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு வாலிபன் பயிர்செய்யும் விவசாயினுடைய மகளை திருமணம்  செய்ய விரும்பி, அந்த விவசாயினிடத்தில் போய் முறைப்படி பெண் கேட்டான்.  அப்பொழுது சரி என் மகளை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், எங்களுக்கு ஒரு முறையுண்டு. அந்த முறைப்படி இப்பொழுது நான் சொல்கிறேன். அதை நீ செய் என்றான். என்னுடைய தொழுவத்திலே மூன்று காளை  உண்டு அவைகளில் ஒவ்வொன்றாக நான் வெளியே அனுப்புவேன். அப்பொழுது அவற்றில் ஒரு மாட்டின் வாலை நீ பிடித்து வெற்றி பெற்றால் உடனே என் மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்றான்.

அந்த வாலிபனும் சரி என்று  ஒப்புகொண்டான். இவ்வாக்குறுதியின்படி முதல் காளையை திறந்து விட்டான். அந்த காளையை பார்ப்பதற்கே பயங்கரமாகவும் தோற்றத்தில் ஒரு காட்டு எருமையைப்போல மிகவும் பருமனாக இருந்தபடியினால், அவன் அதை பார்த்த உடனே பயந்து போய் சரி இன்னும் இரண்டு மாடுகள் உள்ளது பார்த்துக் கொள்ளலாம் அதை விட்டுவிட்டான். விவசாயி இரண்டாவது காளையை  வெளியே விட்டார். அதை பார்த்தபோது முதலாவது வந்த அந்த காளையை விட இருமடங்கு பலமுள்ளதாகவும் பார்ப்பதற்கே பயங்கரமான காண்டாமிருகம்போலவும் இருந்தது. இதைக்கண்ட வாலிபன், தான் எண்ணிக்கொண்டிருந்த திருமண எதிர்கால எண்ணத்தையே மறந்துவிட்டு மதில் சுவற்றில் ஏறி உட்கார்ந்து விட்டான். அந்த காளையும் போய்விட்டது.

அதற்குப் பிறகு விவசாயி மூன்றாம் காளையை வெளியே விட்டார். இதைக் கண்டவுடன் வாலிபன் மதில் சுவரில் இருந்து இறங்கி, அந்த  காளை மிக பலவீனமானதாகவும் இளைத்து போனதாகவும் கண்டான். உடனே வாலிபனுக்கு ஒரே சந்தோஷம், பெரிய பூரிப்பு, நான் இதற்காக அல்லவா காத்திருந்தேன் என்று துள்ளி குதித்து அந்த காளையை மடக்கி ஏறி உட்கார்ந்தான். உட்கார்ந்து விட்டு வால் இருக்கும் இடத்தை தடவி பார்க்கிறார், தேடி பார்க்கிறார் வால் கிடைத்தபாடே இல்லை. ஏனென்றால் அந்த மாட்டிற்க்கு வாலே இல்லை. அப்படி தான் இன்றைக்கு அநேகர் வருகிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் சொல்லுகிறார், “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்”.  ஆங்கிலத்தில் சொல்வோமானால் “making the most of every opportunity, because the days are evil.”

நாமும் தேவனை அறிந்து கொள்வதற்கு  கிடைக்கிற வாய்ப்புகளெல்லாம் உடனடியாக    எவ்வளவு தூரம் அறிந்துகொள்ளமுடியுமோ ஐக்கியப்பட முடியுமோ  அவ்வளவாய் நாம் தேவனோடு ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதுதான் தேவனுடைய விருப்பம் .

லூக்கா 10:42-ல் “தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்”  என்று வாசிக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவானவர் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் அவர் பிரயாணமாய்ப் போகும்போது ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே  மார்த்தாளும் மரியாளும் அவரை வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ, பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவைலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் மரியாளோ தேவனுடைய பாதபடியில் உட்கார்ந்து கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு  வாரத்தையையும் பிரசங்கத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் 

பிரியமானவர்களே தேவையானது எதுவென்றால் தேவனுடைய பாதத்தில் அமர்ந்து காத்திருப்பது அவர் சத்தத்தை கேட்டுக் அவர் சமுகத்தில் ஜெபம் செய்துகொண்டிருப்பது தான் தேவையானது.

தேவ சித்தம் புரிந்துகொள்ளுதல்:

எபேசியர் 5:17-ல் “ஆகையால், நீங்கள்  மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” 

கர்த்தருடைய சித்தம் இன்னதென்று நாம் அறிந்து  புரிந்து கொண்டோமென்றால் அதன் பிறகு அவரைப் பிரியப்படுத்துவதில் முதல் நபராக  மாறிவிடுவோம். இன்றைக்கும் தேவ பிள்ளைகள் ஒவ்வொருவரும் அனுதினமும் அவருடைய பாதத்தில் அமர்ந்து காத்திருக்கும்போது தேவனின் இருதய விருப்பத்தை மிகவும் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்வில் அவரது விருப்பம் நன்மையாகவே இருக்கும் அது நம்மேல் வைத்த அவருடைய விருப்பம் நீங்கள் எடுத்த முடிவல்ல அது தேவனுடைய முடிவு தேவன் நம்மை அவருடைய சமூகத்தில் அமர வைக்க வேண்டும் என்று ஏற்படுத்துகிற திட்டம் 

கர்த்தர் என் வாழ்க்கையிலும் ஒரு திட்டத்தை வைத்திருந்தார், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில்  என் பெற்றோரைப் பார்த்து எனக்கு பிடித்த பள்ளியின் பெயரை சொல்லி என்னை இந்த பள்ளியில்தான் சேர்க்க வேண்டும், இப்பொழுது இருக்கின்ற பள்ளி எனக்கு வேண்டாம் என்று போராடினேன். இருப்பினும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இயலவில்லை. ஆனால், அப்பொழுது எனக்கு விளங்கவில்லை, நான் அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்தும் பயனில்லை. அதுமட்டுமல்லாமல், அந்த வருடம் +2 தேர்வில் தோல்வியும் அடைந்தேன். நான் அடுத்த ஒருவருடம் வீட்டிலேயே  கழிக்க வேண்டியதாயிருந்தது, அந்த ஒரு வருடத்தில் அநேக காரியங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அதிக நேரங்கள் உட்கார்ந்து துக்கப்பட்டுள்ளேன், அநேகருடைய அவமான பேச்சால் சோர்ந்து போயுள்ளேன். ஒரு சிலர் இப்படியும் கேட்க நேர்ந்தது, “காப்பி அடித்தாவது தேர்ச்சி பெறக்கூடாதா” என்று. மிக ஏளனமாக எந்த அளவுக்கு அற்பமாய் பேச முடியுமோ நினைக்க முடியுமோ அவமதிக்க முடியுமோ அந்த அளவுக்கு பேசி அவமதித்தார்கள். அந்நாட்களில் கர்த்தரே இவைகளை எல்லாம் அனுமதித்தார் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். எனக்கு தெரிந்தது எல்லா அனுபவங்களையும் எனக்கு கற்றுக்கொடுத்தார்   அதன் பிறகு வந்த ஒவ்வொரு வருடங்களும் எனக்கு மிகுந்த உயர்வையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்தது. 

அடுத்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தேன் ஒவ்வொரு வருடங்களும் எனக்கு ஆசீர்வாதமாக மாறினது எனது   பட்டப்படிப்பின் முடிவில் கர்த்தர் (GOLD MEDAL) தங்க பதக்கம் வாங்கி உதவி செய்தார்.

எந்தெந்த வாயெல்லாம் என்னை அவமானப்படுத்தி ஏளனமாகப் பேசி அற்பமாய் எண்ணினதோ, அந்த  வாய்களெல்லாம் என்னை புகழ்ந்து பேசவும் மேன்மையாக எண்ணவும் ஆண்டவர் என்னை அவர்களுக்கு முன்பாக உயர்த்தினார். காரணம் ஆண்டவருடைய சித்தத்திற்கும் அவரது விருப்பத்திற்கும் எல்லா  பாடுகளுக்கும் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். ஒருவேளை நான் நினைத்த பள்ளியில் சேர்த்திருந்தால் நான் எப்படியாகிலும் தேர்ச்சி அடைந்திருப்பேன் ஆனால் இப்பொழுது இருக்கின்ற இந்த நிலையிலே உயர்த்தப்பட்டு இருப்பேனா என்பது எனக்கு தெரியாது. 

வாழ்க்கையில் சிறிய கஷ்டங்கள் ஏற்பட்டாலும், நாம் ஏதோ இழந்துவிட்டோம்  பெரிய தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நம் வாழ்க்கையில்  வெற்றியானாலும் சரி, தோல்வியானாலும் சரி அதை தேவன் தான் அனுமதிக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆண்டவர் அதில் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார் என்பதை ஆராய்ந்து, தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே, நாம் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்கிற அறிவு. 

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே, நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற தோல்விகளை கண்டு துவளாமல் அவற்றில் தேவன் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முயல வேண்டும். நீங்களும் கர்த்தரின் சித்தத்தை உணர்ந்துகொண்டு    வாழ்வீர்களென்றால் உங்களைக் கொண்டு கொண்டு தேவனுடைய நாமம் மகிமைப்படும். தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *