இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் – வாழ்க்கை வரலாறு
சாது சுந்தர் சிங் என்று அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் தேதி பஞ்சாப் மாசிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார். அவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சோந்தவர்களாய் இருந்தனர். அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார். தன் மகனை மிகவும் அதிகமாக நேசித்ததினால் தன்னுடைய மகனும் தங்களுடைய மார்க்கத்தை அதிகமாக நேசித்து அதிலே ஒரு பக்தி நிறைந்த சாதுவாக மாறவேண்டும் என்று விரும்பினார். இளமைப் பருவத்திலிருந்தே சுந்தர் இந்து மார்க்கத்தின் புனித நூல்களை, குறிப்பாக பகவத் கீதையை ஆழ்ந்து படித்தார். அவர் ஏழு வயதாக இருக்கும்போது அதை மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தார். அநேக சமயங்களில் வீட்டில் அனைவரும் நித்திரைக்குச் சென்றபின்பு சீக்கியர்களின் புனித புத்தகமாகிய கிரந்தத்தையோ, அல்லது இந்து மத நூல்களையோ அல்லது முஸ்லீம்களுடைய குரானையோ அவர் நுட்பமாகப் படிப்பார். ஆவிக்குரிய வாழ்க்கையில் திருப்தி காணவேண்டும் என்னும் வாஞ்சை சுந்தரை பற்றிக்கொண்டது.
கிறிஸ்துவைச் சந்தித்தல்:
சுந்தர் படித்துக் கொண்டிருந்த கிராமத்து மிசன் பள்ளிக்கூடத்தில்தான் முதன் முதலாக அவருக்குக் கிறிஸ்துவ மார்க்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. வேதபுத்தகத்திலிருந்து வசனத்தை வாசிக்கச்சொன்னபோது அதை பகிரங்கமாக் கிழித்து எறிந்ததின்மூலம் கிறிஸ்து மார்க்கத்தினை எதிர்க்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் தலைவரானார். விரைவில் அவர் அந்த மிசன் பள்ளிக்கூடத்தை விட்டு அரசு பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்தார். பல சமயங்களில் தெருவில் அல்லது திறந்த வெளியில் நின்று பிரசங்கிக்கும் மிசனறிமார்கள் மீது கற்களையோ அல்லது சேற்றையோ எடுத்து வீசும்படியாக முரடர்களை அவா தூண்டிவிடுவதும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவர் புதிய ஏற்பாட்டை பகிரங்கமாகப் பலா முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தியதும் உண்டு.
ஒருகட்டத்தில் அவர் மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டார். உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது தன் வீட்டின் பக்கத்தில் கடந்து செல்லும் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்று உறுதிபூண்டார். ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர் எழுந்தார். குளித்து விட்டு கடவுளே, உண்மையான கடவள் ஒருவர் உண்டு என்றால் உம்மை எனக்குக் காண்பியும், இரட்சிப்பிற்கு உரிய வழியையும் சமாதானத்தையும் நீர் எனக்குத் தரவேண்டும் என்று சொல்லி அவர் வேண்ட ஆரம்பித்தார். உடனே அந்த அறையில் ஒரு பேரொளி வீசியது. அதில் அவர் மிகவும் வெறுத்து வந்த இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கண்டார். அவர் தமது ஆணிகள் பாய்ந்த கரத்தைச் சுந்தருக்குக் காண்பித்து நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? நான் உன்னுடைய இரட்சகர் என்று சொன்னார். இப்பொழுதே சுந்தரின் இதயம் மாபெரும் மகிழ்ச்சியினால் நிரம்பியது. அதுவரையில் தன் வாழ்க்கையில் நாடி தவித்துக் கொண்டிருந்த ஆவிக்குரிய தாகமும் தணிந்ததை அவர் உணர்ந்தார். அவர் வாழ்க்கை முழுவதும் மாறியது. அவர் அடைந்த இந்த மகத்தான பரவசமான அனுபவத்திலிருந்து அவரைச் சந்தேகப்பட வைக்கவோ அல்லது மாற்றவோ யாராலும் முடியவில்லை.