சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 3

சுந்தர் தனது இயேசு கிறிஸ்துவுக்காகப் பல வேளைகளில் பகை, எதிர்ப்பு இவற்றைச் சந்தித்ததுண்டு. பசியோடு விரட்டப்பட்ட நிலமையில் அவர் காடுகளுக்கு உள்ளாகச் சென்று அங்கே தங்குவர் உண்டு. குளிர்ந்த காற்றிற்கும் மழைக்கும் தன்னைத் தப்பவிப்பதற்காகக் காடுகளிலே உள்ள குகைகளில் அவர் தங்குவது உண்டு. ஒருநாள் காலையில் ஒரு சிறுத்தை தான் தங்கியிருந்த குகையில் தனக்குச் சமீபத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மற்றொரு முறை ஒரு வேங்கைப்புலியோடுகூட அவர் படுத்து உறங்கியதையும் அறிந்தார். ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய போர்வையின் கீழே ஏதோ ஒன்று இருப்பதுபோல, உணர்ந்த அவர் அது என்ன என்று பார்த்தபோது, குளிரால் பாதிக்கப்பட்ட ஒரு பெரிய நல்ல பாம்பு அனல் பெறுவதற்காக அவரோடுகூடப் படுத்திருந்ததையும் அறிந்தார். இமயமலைப் பகுதிகளில் உள்ள கணவாய் வழியாகப் பிரயாணம்பண்ணுவது என்றாலும் அவர் எப்போதுமே வெறுங்கால்களோடுதான் தன் பிரயாணத்தை மேற்கொண்டார். அனபடியினால், கற்கள், பனிக்கட்டிகள் போன்றவற்றினால் அவர் கால்கள் கிழிக்கப்பட்டு அவர் கால்களில் இரந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும்.

பல வேளைகளில் பலவிதமான முறைகளில் அவர் துன்பப்படுத்தப்படும்போதும், அவர் மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் இருப்பதைக் கண்ட அநேகர் அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். ஒரு சமயம் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பாடல்கள் பாட ஆரம்பித்தார். அதி சீக்கிரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அங்கு பேசுவதைக் கேட்ட உடனே அந்தக் கூட்டம் அவர்மேல் கோபம் கொண்டது. அக்கூட்டத்தில் குரூப்பராம் என்ற ஒருவன் மிகவும் மூர்க்கம்கொண்டு, சாதுவைப் பலமாகத் தாக்கினபடியினால் அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்தார். அவர் கைகளும், முகமும் , கன்னங்களும் கீழே கிடந்த பாறைகளினால் காயப்பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. என்றாலும் மிகவும் சாந்தமாக அவர் எழுந்து அந்த மக்களின் மன்னிப்புக்கா  ஜெபம்செய்து விட்டு, மறுபடியும் ஆண்டவரின் அன்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். இவரது சாந்தம் குரூப்பராம் என்பவனை ஆழமாகத் தொட்டது. பின்பு அவன் ஒரு விசுவாசியாக மாறினான்.

கொள்ளைக்காரனின் உறைவிடமான ஒரு காட்டினை ஒருமுறை சுந்தர் சிங் கடந்து செல்ல நேரிட்டது. தீடிரென்று அவரை நோக்கி திருடர் நால்வர் பாய்ந்து வந்தனர். ஒருவன் கையிலே கூர்மையான கத்தியை வைத்திருந்தான். தனக்கு முடிவு வந்துவிட்டது என்று எண்ணிய சுந்தர் மௌனமாக ஜெபிக்க ஆரம்பித்தார். இவ்விதமாக அவர் ஜெபிப்பதைக் கண்ட அவன் அச்சரியப்பட்டு அவர் யார் என்று விசாரித்தான். தான் ஒரு கிறிஸ்தவ சாது என்றார். அத்துடன் தன்னுடைய கையில் உள்ள புதிய ஏற்பாட்டைத் திறந்து ஐசுவரியவான், லாசரு பற்றி எழுதியிருக்கிற பகுதியை வாசித்து விளக்கினார். கத்தியோடு அவரை நெருங்கிய அந்த மனிதனில் ஆழமான பாவ உணர்வு ஏற்பட்டது. அவன் சுந்தரைத் தனது குகைக்கு அழைத்துச் சென்று அங்கு அவன் கொன்று குவித்திருந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளை அவருக்குக் காண்பித்து, இத்தனை கொலைகளுக்கும் தான்தான் பொறுப்பு என்று துக்கத்தோடு கூறினான். சுந்தர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மன்னிப்பினை ஏற்றுக்கொள்ளும்படியாகக் கூறி அவனை இரட்சிப்பிற்குள் நடத்தினார்.

சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *