அழைப்பு
இவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார். அவருடைய தந்தை இதை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறுவதற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது. சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கோ உணவோ, தங்குவதற்கு உறைவிடமோ இல்லை. ஒரு மரத்தின் அடியில் தங்கினார். பிறகு மீண்டும் அவர் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வீட்டுக்கு வெளியில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வேலை ஆட்களோடு அவர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். என்றாலும் மனதிலே பரிபூரண மகிழ்ச்சியோடு இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். கடைசியாக நஞ்சு கொடுக்கப்பட்டு வீடடிலிருந்தே துரத்தப்பட்டு நோய்வாய்ப்பட்டார். இறக்கும் நிலையையும் அடைந்தார். என்றாலும் அவரிடம் அன்புகொண்ட ஆண்டவர் தம் சித்தத்தைச் சுந்தரிலே நிறைவேற்ற மரணப் பிடியிலிருந்து விடுவித்தார்.
லூதியானாவில் இருந்த மிசனறிகளிடத்தில் சென்று அவர்களோடு தங்கினார். வேதவசனங்களைக் கற்க ஆரம்பித்தார். சுந்தர் தம் 16ம் பிறந்த தினத்தன்று சிம்லா நகரத்தில் ஞானஸ்நானம் பெற்றார். ஆழமான சிந்தனைக்கும் உறுதியான ஜெபத்திற்கும் பின்னர் சாது சுந்தர் சிங் தன்னைப் பரிபூரணமாக கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ சாதுவாக மாறினார். வெறும் கால்களோடும் கையில் ஏந்திய வேதபுத்தகத்தின் பகுதியான புதிய ஏற்பாட்டோடும் எந்தவிதமான மனிதரின் உதவியும் இல்லாத நிலைமையில் தன்னை ஆட்கொண்ட கிறிஸ்துவுக்கா அவர் புறப்பட்டுச் சென்றார். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையப் பட்டிருக்கிறேன் (கலா.6:14) என்ற வசனத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோளாக அவர் ஏற்றுக்கொண்டார். என்மீது உள்ள அன்பினால் இயேசு கிறிஸ்து தம்மைத் தியாகம் பண்ணினார். அதைப் போலவே நானும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள என்னுடைய அன்பினால் என்னைத் தியாகம் செய்யவேண்டும் என்று அடிக்கடி கூறுவது உண்டு.