சந்தோஷமாயிருங்கள், பொறுமையாய் இருங்கள், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் | Pr. B. E. Samuel

சந்தோஷமாயிருங்கள், பொறுமையாய் இருங்கள், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களைசந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ரோமர் 12:12 வசனத்தை நாம் தியானிக்க போகிறோம்.

“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். – ரோமர் 12:12”

பிரியமான தேவபிள்ளைகளே இதிலே மூன்று வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும்படியாயாய் ஆவியானவர் ஏவினார் அந்த மூன்று காரியங்களும் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.

  1. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்
  2. உபத்திரவத்தில் பொறுமையாய் இருங்கள்
  3. ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்

இந்த மூன்று காரியங்களும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு கர்த்தருடைய ஜனங்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. முதலில் பார்க்கப் போகிற விஷயம் நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்.

இன்றைக்கும் அநேகர் அவரவர்களுடைய வசதியிலே சந்தோஷமாக இருக்கிறார்கள். அவரவர்களின் பெருமையிலே சந்தோஷமாக இருக்கிறார்கள். அவரவர்களின் உயர்விலே சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், எதிலே சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் நம்பிக்கையிலே சந்தோஷமாக இருக்க வேண்டும். வேதம் கூறுகிறது நம்பிக்கை குறித்து மிகவும் தெளிவாய் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் வேதம் சொல்லுகிறது உலகத்தில் மூன்று தான் நிலைத்திருக்கிறது அந்த மூன்றில் ஒன்று நம்பிக்கை.

“இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. – 1கொரிந்தியர் 13:13”

பிரியமானவர்களே இந்த மூன்றுதான் உலகத்தில் நிலைத்திருக்கிறதாயிருக்கிறது இந்த மூன்றும் இல்லாமல் உலகத்தில் வாழவே முடியாது இதிலே அன்பு பெரியது ஆனால் இதில் மூன்றும் உள்ளது இந்த வசனத்தில் முதலில் விசுவாசம் காணப்படுகிறது. விசுவாசம் நமக்குள் இருப்பதினால்தான் சபைக்கு போகிறோம்.

தேவன் பேரில் உங்களுக்கு இருக்கிற விசுவாசம் முக்கியமாய் காணப்படுகிறது இரண்டாவது நம்பிக்கை மூன்றாவது அன்பு இந்த அன்பு இல்லை என்றால் உலகமே இல்லை. கிறிஸ்தவம் என்றால் அன்பு என்று சொல்லலாம் அன்புக்கு மெய்ப்பொருள் தான் இயேசு கிறிஸ்து இப்பொழுது நாம் பார்க்கப்போவது நம்பிக்கை நீங்கள் எப்படி இயேசுவை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் அவர் பேரில் இருக்கிற நம்பிக்கையினால் தான் அவர் என்னை காப்பாற்றுவார் அவர் எனக்கு உதவி செய்வார் அவர் எனக்கு சுகம் தருவார் அவர் என்னை ஆதரிப்பார் என் பிள்ளைகளை ஆதரிப்பார் என் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் நான் கையிட்டு செய்கிற வேலைகளை ஆசீர்வதிப்பார் நான் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார் என்கிற நம்பிக்கையில் தான் தேவனை நாம் ஏற்றுக்கொண்டோம்.

இன்றைக்கு அநேகர் ஆண்டவரிடத்தில் ஆரம்பத்தில் நல்ல நம்பிக்கையோடு இருக்கிறார்கள் பயங்கரமான அசைக்க முடியாத நம்பிக்கையாய் காணப்படுகிறார்கள். கொஞ்சம் சோதனை காலமோ தேவன் உங்களை பரீட்சிக்கிற காலமோ வரும்போதோ பிசாசு பார்த்துக்கொண்டே இருப்பான் இதுதான் சமயம் என்று நமது நம்பிக்கையிலிருந்து நம்மை முற்றிலும் விலக செய்துவிடுவான். ஆனால், நாம் ஒன்றை நன்றாக கவனிக்கவேண்டும் நம்முடைய இயேசுகிறிஸ்துவிற்கு இப்படிப்பட்ட போராட்டமும் வந்தது அதாவது பரீட்சைகளும் சோதனை காலமும் வந்தது.

எப்படி என்றால் இயேசு நாற்பது நாட்கள் உபவாசித்து வனாந்தரத்திலே தண்ணீரும், ஆகாரமும் இல்லாமல் எதுவும் சாப்பிடாமல் ஜெபம் செய்து கொண்டிருந்தார். உபவாசம் முடித்த பின்பு அவருக்கு பசி உண்டாயிற்று இங்கு நன்றாக கவனியுங்கள். எப்பொழுது நமக்கு தேவை இருக்குமோ எப்பொழுது நமக்கு பிரச்சினை வருகிறதோ எப்பொழுது நாம் சோர்ந்து போகிறோமோ அந்த நேரத்திற்காக பிசாசு காத்து கொண்டிருப்பான் எதிர்பார்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவான் எப்பொழுது நாம் ஏமாறுவோம். அப்பொழுது உடனே கவிழ்த்துப் போடலாம் என்று சுற்றிக் கொண்டே இருப்பான்.

இயேசு கிறிஸ்துவோ உபவாசம் முடித்து பசியில் இருக்கிறார் பிசாசு தந்திரமாக நீர் ஏன் பசியாய் இருக்கிறீர்? நீர் தேவனுடைய குமாரன் தானே? நீர் தேவனுடைய குமாரனாய் இருந்தால் இந்த கல்லுகளை அப்பங்களாக்கும்படி செய்து சாப்பிடும் என்கிறான். இங்கு தான் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இயேசு பிசாசுக்கு பிரதியுத்தரமாக மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்கிறார்.

அவருடைய வார்த்தையிலேயே நமக்கு பிழைப்பு உண்டு ஒன்றை கவனியுங்கள் கர்த்தர் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் அவர் எப்படியாவது காப்பாற்ற வல்லவராயிருக்கிறார். அதேநேரத்தில் பிசாசின் வஞ்சக சூழ்ச்சிகளுக்கும் ஆலோசனைக்கும் நாம் விலகி இருக்கவேண்டும். கவனியுங்கள் பின்பு இயேசுவினிடத்தில் பிசாசு பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் தேவாலயத்தின் உப்பரிக்கையின்மேல் நிறுத்தி நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழகுதியும் ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மை குறித்து கட்டளையிடுவார் உமது பாதம் கல்லில் இடறாதராதபடிக்கு அவர்கள் உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

அதற்கு இயேசு சொன்னார் உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். இங்கே ஆண்டவர் பிசாசுக்கு வசனத்தின் மூலமாக பதிலடி கொடுக்கிறார் மூன்றாவது முறை பிசாசானவன் அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால் இவைகளெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 

அன்பான தேவ பிள்ளைகளே கவனியுங்கள் இயேசு கிறிஸ்துவிடம் பிசாசானவன் நீர் ஏன் கல்வாரிக்கு போகவேண்டும் சிலுவையில் ஏன் அடிக்கப்படவேண்டும் என்னைப் பணிந்து கொண்டால் போதும் இவைகளெல்லாம் இப்பொழுதே உமக்குத் தருகிறேன் என்றான். அப்பொழுது இயேசு அவனை பார்த்து அப்பாலே போ சாத்தானே உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். நன்றாக கவனியுங்கள் தேவனுக்கு மட்டும் தான் நம்முடைய ஆராதனையும் துதியும் தோத்திரமும் வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது.

அநேகருடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோதனை காலம் வரும்போது சோதனையில் ஜெயிப்பதற்கு பதிலாய் சோதனையில் விழுந்து தோற்றுப் போகிறார்கள் சோதனைக்காலம் எல்லாருடைய வாழ்க்கையிலும் வரும் எப்படி பிள்ளைகளுக்கு மாத மாதம் பரீட்சை வருகிறதோ அதே போல நம்முடைய வாழ்க்கையிலும் சில பரீட்சைகள் வரும் பிள்ளைகள் அந்த பரீட்சைகளை நன்றாக எழுதும்போது தேர்ச்சி அடைகிறார்கள் அதேபோல நம்முடைய வாழ்க்கையிலும் வரும் சோதனையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வழியை தேவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இந்த தேவன் சதாகாலமும் நம்முடைய தேவனாய் இருக்கிறார் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அநேக ஆபத்துக்கள் சூறாவளி போல் வந்தாலும் அதை தென்றலாய் மாற்றிவிடுகிறவர் ஆபத்துக்காலத்தில் என்னை கவிழ்த்து போடலாம் என்று பிசாசு நினைத்தாலும் அவனை முறியடிக்கிறவர் என்னோடு கூட இருக்கிறார் என்கிற நம்பிக்கை நமக்குள் வளர வேண்டும்.

சிலவேளைகளில் நாம் சோதனையில் தவிக்கும்போது  உலக ஜனங்கள் நம்மைப் பார்த்து நீங்கள் தவறாமல் சபைக்கு போனீர்களே தொடர்ந்து ஜெபம் செய்தீர்களே ஏன் உங்களுக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிறது என்று உங்கள் நம்பிக்கையை கெடுப்பார்கள் நாமும் அதைக் கேட்டு கொஞ்சம் பின்வாங்கிபோவோம். தேவ ஜனமே நம்பிக்கை என்பது ஊட்டுவது அல்ல நமக்குள்ளே ஊறவேண்டும். நானாகவே அவரை நம்ப வேண்டும் நானாகவே அவரை விசுவாசிக்க வேண்டும் நானாகவே தேவன் பேரில் அன்பு கூற வேண்டும் விடாதபடி நம்பிக்கையிலே நிலைத்து இருக்கவேண்டும் என்று சொல்லி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

பரலோகம்போக வேண்டும் என்றால் சோதனையை ஜெயித்து தான் போகவேண்டும் கொரோனா நேரங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கண்டிப்பாக நான் சொல்லுவேன் மதிப்பு இல்லை நாம் பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் நமக்கு மதிப்பு நாம் போராடி வெற்றி பெறவேண்டும். அப்படி நாம் போராட வேண்டும் என்று நினைத்தவுடனே தேவன் உங்களுக்கு தோல் கொடுக்கிறவராகவும் துணை நிற்கிறவராகவும் ஆதரிக்கிறவராகவும் ஆறுதல் செய்கிறவராகவும் இருக்கிறார்.

இன்று அநேகருடைய வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்துபோயிற்று நம்பிக்கை இல்லாமல் போனதினால் தான் சிலர் சபைக்கு வருவதில்லை எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நான்தான் அதற்கு காரணம் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள்தான் அதற்கு காரணமாகிறீர்கள். அநேகர் சொல்லுகிற காரணம் பாஸ்டர் எனக்கு சரியாக ஜெபம் பண்ணவில்லை அதுதான் எனக்கு இன்னும் சுகம் உண்டாகவில்லை என்பார்கள்.

இன்றைய நாட்களில் எதையும் நாம் மற்றவர்களை குறை சொல்லியே பழகிவிட்டோம் ஒரு வீட்டிலே கஷ்டம் அல்லது வியாதி வறுமை இவையெல்லாம் ஏன் வருகிறதென்றால் ஏன் இந்த கஷ்டம் வந்தது என்று கேட்டால் என்னவென்று தெரியவில்லையே நான் எப்பொழுதும் ஜெபம் செய்து கொண்டேதான் இருக்கிறேன் என்பார்கள் இங்கே தான் தவறு உள்ளது.

நம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமானால் நம்முடைய ஜெபம் கேட்கிறவிதமாக இருக்கவேண்டும். நீங்கள் ஆண்டவரே நீர் என்னை மன்னியும் என் குறைகளை எனக்கும் மன்னியும் எனக்கு ஒரு அற்புதம் செய்யும் என்று ஜெபித்தால் ஒரு நிமிஷத்திலே தேவன் மன்னித்து உங்கள் வியாதியில் சுகம் தரவும் உங்கள் பிரச்சனைகளை எல்லாம் உங்களை விட்டுப் போக்கவும் அவர் வல்லமையுள்ளவராய் உங்கள் கஷ்டங்களை நீக்குகிறவராய் விடுவிக்கிறவராய் அவர் இருக்கிறார்.

தவறு நம்மிடம் தான் உள்ளது என்பதை நாம் உணர்வதே இல்லை உணராமலேயே ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே மன்னியும் என்று சொல்லக்கூடாது முதலில் நீங்கள் யார் என்று உணர வேண்டும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அறிந்துக் கொள்ள வேண்டும் பின்பு என்னை மன்னியுங்கள் ஆண்டவரே என்று சொல்லி பாருங்கள் ஒரே நிமிஷத்தில் உங்கள் பாவங்களை மன்னிக்க வல்லவராயிருக்கிறார்.

“நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். – எபிரேயம் 3:14

பிரியமானவர்களே ஆரம்பத்தில் இருக்கிற அந்த நம்பிக்கை சாகிற வரைக்கும் உங்களிடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு கெடுதியும் இந்த உலகத்தில் இருக்கிற யாரானாலும், எப்பேர்ப்பட்ட சக்தியானாலும், பிசாசானாலும், மனுஷனரானாலும் சரி உங்களை ஒன்றுமே செய்யவே முடியாது. ஆகவே ஆரம்பத்தில் இருக்கிற நம்பிக்கை எப்பொழுதும் உங்களுக்குள் இருக்க வேண்டும்.

ஆலயத்திற்கு ஆரம்ப காலத்தில் சீக்கிரமாக போவார்கள் அதன்பின்பு நாட்கள் ஆக ஆக கொஞ்சம் தாமதமாக போவார்கள். ஆனால், ஆலயத்தின் ஆராதனையில் முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை இருக்கவேண்டும் வாரத்தில் ஒரு முறை மூன்று மணி நேரம் ஆண்டவருக்காக கொடுக்க முடியாதா? ஏன் ஆராதனையில் சீக்கிரம் வர முடியவில்லை என்றால் நீங்கள் ஆரம்ப காலத்தில் கொண்டிருந்த அந்த நம்பிக்கை இப்போது உங்களிடம் இல்லை. இதுதான் உண்மையான காரணம் ஏதோ தேவ நம்பிக்கையோடு மனம் திரும்பி வந்து சேர்ந்து விட்டோம் என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் அப்படி சேரவில்லை உங்கள் தேவன் உங்களை உள்ளங்கையில் வரைந்து சேர்த்துக் கொண்டார் இப்பொழுது நீங்கள் இயேசுவின் மடியில் இருக்கிறீர்கள் இயேசுவின் தோள்களிலே இருக்கிறீர்கள் இயேசு தன் கரங்களில் ஏந்தி கொண்டிருக்கிறார். நீங்கள் ஆரம்பகாலத்தில் கொண்டிருந்த நம்பிக்கை முடிவுபரியந்தம் கொண்டிருக்க வேண்டும். 

மரண பரியந்தமும் உங்கள் நம்பிக்கையில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இயேசுவின் வருகைவரைக்கும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கை நிலைத்திருந்தால் தான் இயேசுவின் இடத்தில் நமக்கு பங்கு உண்டு. எப்பொழுது இயேசுவை நம்பி வந்தீர்களோ உங்களுக்கென்று ஒரு பங்கு இயேசுவினிடத்தில் உண்டு மேலே சொல்லப்பட்ட வசனமும் உண்மைதான்.

ஆதலால், உங்களுக்குப் பங்கு இருப்பதும் உண்மைதான் உதாரணமாக எல்.ஐ.சியில் இன்சூரன்ஸ் போடுபவர்கள் பணத்தை மாதம் மாதம் சரியாக கட்டினால் தான் கடைசியில் முழுமையாக அந்த பணம் கைக்கு கிடைக்கும் அப்படி இல்லாமல் இரண்டு மூன்று மாதம் கட்டி பின்பு கட்டாமல் போனால் கட்டிட பணம் எல்.ஐ.சிக் தான் சேரும் அது உங்களுக்கு சேராது அதேபோலதான் முடிவுபரியந்தம் நிலைத்திருந்தால் நிச்சயமாக உங்களுக்கு பங்கு உண்டு.

“நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். - எபிரேயர் - 7:19”

பிரியமான தேவ பிள்ளைகளே அதிக நன்மை நம்பிக்கையினாலே பூரணபடுகிறது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் நம்முடைய நம்பிக்கை தான் நம்மை மனிதனாக மாற்றுகிறது எனக்குள் இருக்கிற நம்பிக்கைதான் என்னை இதுவரைக்கும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க செய்கிறது. எனக்குள் இருக்கிற நம்பிக்கையினால் தான் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன். உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையினால் தான் நீங்கள் சபைக்கு வருகிறீர்கள் சபைக்கு போகவில்லை என்றால் நம்பிக்கை குறைந்து போய்விட்டது என்றுதான் அர்த்தம் சபைக்குப் போகவில்லை என்றால் உங்கள் பங்கை இழந்து போகிறீர்கள்.

உங்களுக்கென்று நியமித்த பங்கு உங்களை விட்டு போகிறது உலகத்தில் எதை வேண்டுமானாலும் இழந்து போகலாம் உங்களுக்கு வரவேண்டிய சொத்து கூட இழந்து விடலாம். ஆனால், இயேசுவின் பங்கை மாத்திரம் நீங்கள் இழந்துவிடாதீர்கள் அதுதான் நம்மை பூரணப்படுத்தும் அது மட்டுமல்லாமல் அந்த நம்பிக்கையினால் தான் நாம் தேவனிடத்தில் சேருகிறோம். இன்றைக்கு நீங்கள் தேவனிடத்தில் இருப்பதற்கு காரணம் உங்கள் நம்பிக்கைதான்.

“இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். – 1 பேதுரு 3:5”

கவனமாய் கவனியுங்கள் உங்களுக்கு தேவனிடத்தில் நம்பிக்கை இருக்குமானால் உங்கள் குடும்பத்தை சரியாக நடத்துவீர்கள் உங்கள் கணவரை எப்படி மதிக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை எப்படி மதிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் உங்கள் குடும்பத்தில் நீங்கள் தாறுமாறாக இருந்தீர்களானால் தேவனிடத்தில் அப்படிதான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

                    உங்களுக்குள் பக்தி அதிகரிக்க அதிகரிக்க குடும்பத்தில் உள்ளவர்களின் பாசம் அன்பு அதிகரிக்கும் குடும்பம் உங்களுடையது அல்ல தேவன் உங்களுக்காக கொடுத்தது உங்கள் கணவர் கர்த்தர் உனக்கு கொடுத்தது உன் மனைவி கர்த்தர் உனக்கு கொடுத்தது உன் பிள்ளைகள் கர்த்தர் உனக்கு கொடுத்தது உலகில் எத்தனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணமாகாமல் இருக்கிறது. ஆனால், உங்களுக்கு திருமணமாகி புருஷனையும் மனைவியையும் கொடுத்திருக்கிறாரே உங்களுக்கு கர்த்தர் பிள்ளைகளை கொடுத்திருக்கிறாரே ஆகவே உங்கள் குடும்பத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் தேவன் இடத்திலும் காணப்படுவீர்கள் கணவரை மதிக்கவில்லையென்றால் தேவனை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம் கொடுத்த குடும்பத்தை மதிக்கவில்லை என்றால் உங்களை இரட்சித்த தேவனை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். 
 
                    கணவனுக்கு மனைவி கீழ்படிதல் அவசியம் அதேபோல் கணவனும் மனைவியிடத்தில் அன்பு கூற வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து புரிந்துகொண்டு வாழ வேண்டும். 

“உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். – 1தீமொத்தேயு 5:5”

பிரியமானவளே நன்றாய் கவனியுங்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தான் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருக்க முடியும் யாரெல்லாம் ஜெபம் செய்யவும் யாரெல்லாம் வேண்டுதல் செய்யவும் முடியுமென்றால் நம்பிக்கை உள்ளவர்களால் மட்டும் தான் செய்ய முடியும். 

அவர்கள் விதவையாக இருந்தாலும் சரி தேவன் பேரில் அவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை காணப்படுகிறதோ அந்த அளவுக்குதான் ஜெபமும் காணப்படும்.

“தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, – 1தெசலோனேக்கியர் 1:2”

சற்று கவனமாய் சிந்திப்பீர்களானால் உங்கள் நம்பிக்கையிலே உங்களுக்கு பொறுமை காணப்படவேண்டும் நாம் ஜெபிக்கிற ஜெபங்கள் சிலவற்றிற்கு பதில் வராமல் இருக்கும் அதற்கு காரணம் என்னவென்றால் அதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை என்பதுதான்.

ஆகவே நம்பிக்கையிலே பொறுமையாக இருக்கவேண்டும் நீங்கள் ஆண்டவரை நம்புவது உண்மையானால் பொறுமையாக இருக்கவேண்டும் எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது நடப்பதற்கு பொறுமையாக காத்திருங்கள். நீங்கள் இயேசுவை நம்புகிறது நீங்கள் இயேசுவை முன்னிட்டு நம்புவது எதுவாயிருந்தாலும் அதிலே சந்தோஷமாயிருங்கள் நிச்சயம் தேவன் அதை கொடுக்க வல்லவராயிருக்கிறார். 

உபத்திரவத்தில் பொறுமையாய் இருங்கள்:

“நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். – வெளிப்படுத்தல் 2:10”

பிரியமானவர்களே உலகத்திலே சாதாரண கஷ்டங்கள் எல்லாம் கஷ்டங்களோ உபத்திரவங்களோ அல்ல நான் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் சிறைச்சாலையில் இருக்கிறேன் என்பதுதான் உபத்திரவம். இப்படிபட்ட உபத்திரவங்களில் பொறுமையாய் இருக்கும்போது நமக்கு வாக்குபண்ணியிருக்கிற ஜீவகிரீடத்தை உனக்குத் தருவார். மேலும்

“கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; – எபிரேயர் 11:37:

பிரியமானவர்களே நாம் எதை உபத்திரவம் என்று நினைக்கிறோம் நேற்று எனக்கு உணவு சரியாக கிடைக்கவில்லை சரியான குழம்பு இல்லை தினமும் கஞ்சிதான் குடிக்கிறேன் என்று இதைத்தான் உபத்திரவம் சோதனையாக நினைக்கிறோம். என்னை சீ என்று ஒருவர் சொல்லிவிட்டார்கள் அவர்கள் என்னை பார்க்கிற பார்வை நக்கலாக இருக்கிறது  இதுவெல்லாம் சோதனை அல்ல இவையெல்லாம் சோதனையாக எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் ஆண்டவரை சரியாக அறியவில்லை அப்போஸ்தலர்கள் சீஷர்களெல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அதுமட்டுமல்லாமல் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்கள்.

ஸ்தேவான் என்கிற ஊழியர் எப்படி மரித்தார் என்றால் அவர்மேல் கல் எறியப்பட்டு மரித்தார்  அதுதான் உண்மையான உபத்திரவம் ஆண்டவரிடம் ஜெபிப்பதை தவிர நான் எந்த ஒரு தவறும் செய்யாமல் இருந்து நம்மை கல்லால் அடித்து கொலை செய்வதும் உயிரோடு துடிக்கத் துடிக்க பட்டயத்தினால் வெட்டுவதும் தான் உண்மையான உபத்திரவம் இந்த உபத்திரவத்தில் நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.

மேலும் சீஷர்கள்போட்டுக்கொண்டிருந்த உடைகளை எல்லாம் கழற்றி நிர்வாணமாக விட்டுவிட்டார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் வெள்ளாட்டு தோல்களையும் செம்மறி ஆட்டு தோள்களையும் போர்த்துக் கொண்டு ஓடினார்கள்.

“நான் கேள்விப்பட்ட (அறிந்த) ஊழியக்காரர் ஒருவர் சாதுசுந்தர்சிங் அவர் தனது 14ம் வயதில் இயேசுவை ஏற்றுக் கொண்டார் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட காரணத்தினாலே அவருடைய தகப்பனார் இவருக்கு ஆகாரத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.  அவருடைய வீட்டில் பத்தாவது மகன் இவர் அந்த ஆகாரத்தை சாப்பிட்டவுடனே தொண்டையில் கரகரப்பு தெரிந்தது உடனே விஷம் கலந்து இருக்கிறார் என்று அறிந்தவுடன் நான் செத்தாலும் இந்த வீட்டில் சாகக்கூடாது நான் ஒரு கிறிஸ்தவ வீட்டில்தான் மரிக்க வேண்டும் என்று சொல்லி ஒரே ஓட்டமாக ஓடி ஒரு கிறிஸ்தவ வீட்டிலே போய் விழுந்துவிட்டார்.

அந்த கிறிஸ்துவர்களும் அவரைப் பார்த்து தூக்கிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார்கள் அப்போது சாதுசுந்தர்சிங் ஒரு பொருத்தனை செய்தாராம் நான் 14ஆம் வயதில் மரித்துப் போய் இருப்பேன். ஆனால், ஆண்டவராகிய நீரே எனக்கு ஜீவன் தந்தீர் ஆகவே மீதியாய் இருக்கிற வாழ்நாட்கள் எல்லாம் நான் திருமணம் செய்யாமல் எனக்கென்று குடும்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இனி வாழப்போகிற வாழ்க்கை எல்லாம் உமக்காகதான் வாழபோகிறேன் என்றார் பிறகு அவர் ஊழியத்திற்கு என்று திபெத்துக்கு போனார்.

ஊழியத்திற்கு போன இடத்தில் இவரை ஒரு எருமை மாட்டுதோலை உரித்து அந்த தோலில் இவரை வைத்து தைத்து  வெயிலில் தூக்கி போட்டுவிட்டார்கள் வெயில் ஏறஏற தோள் காயக்காய உடலெல்லாம் அரிக்க ஆரம்பித்து  வெயிலின் உஷ்ணத்தில் அந்த தோல் சூடேறியது அப்பொழுது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர் கைகளும் கால்களும் கட்டப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். “

பிரியமானவர்களே இப்படிப்பட்ட உபத்திரவத்தை நாம் ஒரு நாளும் படவில்லை சிஷர்களும் இப்படித்தான் தோள்களை போர்த்துக் கொண்டு ஓடினார்கள் அப்போது அந்த உபத்திரவத்தை பொறுமையாக ஆண்டவரே உங்க சித்தம் நிறைவேறட்டும் என்று அவர் சித்தத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர அவர்கள் அவசரப்படவில்லை.

நீங்கள் யார் என்னை சாகடிப்பதற்கு என்று அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை ஆண்டவருக்காக பொறுமையோடு காத்திருந்தார்கள். நாம் ஒவ்வொருவரும் தேவ சித்தத்திற்கு காத்திருக்கவேண்டும் தேவன் எந்த சித்தத்திற்கு உங்களை அழைத்தாலும் அந்த சித்தம் உங்களில் நிறைவேறுவதற்காக உங்களை ஒப்புகொடுக்கவேண்டும்.

“ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. – எபிரேயர் 2:10” 

அன்பான தேவபிள்ளைகளே அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவத்தினாலே பூரணப்படுத்தும்போது பொறுமையாக இருப்போமானால் அந்த இரட்சிப்பு நமக்கு கிடைக்கிறது எப்பொழுது இரட்சிக்கப்பட்டோம் என்றால் உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கும்போதுதான் அப்படி பொறுமையாய் இருக்கும்போது நீங்கள் பூரணமாய் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தம்.

“நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். – 2தெசலோ 1:4“ 

பிரியமானவர்களே நீங்கள் உபத்திரவத்திலே பொறுமையாய் இருந்தால்தான் சபைகளில் மேன்மையானவைகளை அடையமுடியும், சபையிலே எனக்குரிய கனம் இல்லை என்று நீங்கள் நினைப்பவர்களாயிருந்தால் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லுகிறேன் உங்களுக்கு உண்டான இந்த உபத்திரவத்தை சகிக்கிறவர்களாயிருந்தீர்களானால் சபைகளிலே நீங்கள் எதிர்பார்க்கிற கனம் உண்டாகும்.

ஜெபத்திலே உறுதியாய் இருங்கள்: 

பிரியமான தேவ பிள்ளைகளே நாம் நன்றாக ஜெபிப்போம் பாடி துதிப்போம் துதித்து ஜெபிப்போம். ஆனால், சிறியதோர் கஷ்டம் வந்தால் போதும் ஜெபிக்கமாட்டோம், ஜெபிப்பதினால் என்ன பிரயோஜனம் என்று சொல்லுகிறவர்களாய் இருக்கிறோம். அப்படி சொல்லும்போது தான்  நம்முடைய ஜெபத்தின் உறுதியின்மையை காண்பிக்கிறது.  ஜெபத்தில் உறுதியின்மை எப்படி கண்டுக்கொள்வது ஒரு சிலர் நன்றாக ஜெபத்து ஆவியில் நிறைந்து அந்நியபாஷை பேசிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று மொபைலில் பெல் சத்தம் கேட்டவுடன் அவர்கள் ஜெபம் நின்றுவிடும் இப்படித்தான் உறுதியில்லாத ஜெபம் காணப்படுகிறது. நான் ஆலயத்திற்குள் வரும்போது போனை கையில் கொண்டு வரமாட்டேன். ஏனென்றால், எனக்கு இங்கே ஆண்டவர் தான் தேவை வீடியோ, வாட்ஸ்அப் தேவையில்லை இவைகளினால் ஜெபத்தில் இடறல்கள் வருமே தவிர ஜெபத்தில் உறுதியை கொண்டு வராது.

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. – யாக்கோபு 5:16”

பிரியமானவர்களே முதலில் ஜெபம் என்றால் பாவ அறிக்கை செய்து ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணவதுதான் உறுதியான ஜெபம் உங்களுக்கு மாத்திரம் ஜெபம் செய்யாதீர்கள். உங்கள் சபையில் இருக்கும் ஒவ்வொருவரையும் உங்கள் மனதில் நினைத்து நீங்கள் ஜெபிக்கும்போது உங்கள் ஜெபம் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது.

“நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். – அப்போஸ்தலர் 16:25-26”

இறுதியாக ஜெபத்தின் மூலமாக என்ன பிரயோஜனம் என்றால் இங்கே பவுல் என்கிற ஊழியக்காரரும், சீலா என்கிற ஊழியக்காரரும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறார்களென்று அவர்களை பிடித்து சிறைச்சாலையில் வைத்தார்கள். அவர்கள் கால்கள் தொழுவமரத்திலே மாட்டி வைத்திருந்தார்கள்.

கைகளில் விலங்குபோடபட்டிருந்தது அவர்கள் வாய்மாத்திரம் கட்டப்படவில்லை அந்த நிலையில் அவர்களின் ஜெபவேளை வந்தபோது நாம் ஜெபிக்கலாம் என்று இருவரும் பாடி ஜெபிக்க ஆரம்பித்தார்கள் சிறைச்சாலையில் உள்ளவர்கள் அனைவரும் இவர்கள் பாடி ஜெபித்ததை கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடந்தது என்னவென்றால், சிறைச்சாலை அசைய ஆரம்பித்தது சிறைச்சாலையின் கதவுகள் திறவுண்டது சிறைச்சாலையின் அஸ்திபாரமே ஆடினது எல்லோருடைய கட்டுகளும் கழன்று போயிற்று.

ஜெபம் என்று சொன்னால் சிறைச்சாலை அசையவேண்டும் ஜெபம் என்று சொன்னால் சிறைச்சாலை கதவுகள் திறக்கப்படவேண்டும் ஜெபம் என்று சொன்னால் கட்டுகள் உடையவேண்டும் அதுதான் ஜெபம் அப்படி இல்லை என்றால் உங்கள் ஜெபம் சரியில்லை என்று அர்த்தம் நாம் இனிமேலாவது முயற்சி செய்யலாமா முயற்சி நிச்சயமாகவே வெற்றியையும் ஜெயத்தையும் கொண்டுவரும். நமது ஜெபம் எப்படிப்பட்டதென்றால்  கட்டுகளை உடைக்கிற கூடியது நமது ஜெபம் தேவனை தரிசிக்க கூடியது ஜெபம் நோய்களை நீக்கக் கூடியது ஜெபம் அற்புதங்களை செய்யக்கூடியது ஜெபம் ஆண்டவரிடம் பேசக் கூடியது ஆகையினாலே நம்பிக்கையிலே சந்தோஷமாகவும் உபத்திரவத்தில் பொறுமையாகவும் ஜெபத்திலே உறுதியாகவும் தரித்திருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *