உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக.  தேவனுடைய கிருபையினாலே மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க்கபோகும் வேதபகுதி ஆகாய் 1:1-14 வரையுள்ள வசனங்கள்.

பிரியமானவர்களே, நாம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை பெற்று எப்பொழுதும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

தேவன் எந்த ஒரு மனுஷனையும் உபத்திரவங்களினாலும் வியாதிகளினாலும் சோதிக்க ஆண்டவர் விரும்புவதுயில்லை. மாறாக சோதனைகள் வரும் ஆனால் அதை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் என்றும், சோதிக்கப்பட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவான் என்றும் வேதம் சொல்கிறது.  ஒருமுறை தேவன் நம்மை சிட்சிக்கும்போது நாம் சுத்த பொன்னாக மாறிவிட்டோம். ஏனென்றால் சுத்த பொன்னை சோதித்துபார்க்கும்போது அது புடமிடபட்டுள்ளதா இல்லையா, என்பது தெரிந்துவிடும். தேவன் நம்மை ஆசீர்வதிக்க நினைக்கும்போது நம்மை புடமிட்டு பரிசோதிப்பார். அந்த சோதனையில் நாம் சுத்தபொன்னாக மாறிவிட வேண்டும்.

நீங்கள் உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் என்று  வேதம் சொல்லுகிறது. இவைகளெல்லாம் வேறே யாருக்கோ எழுதப்பட்டது என்று நாம் நினையாமல்,  கர்த்தர் நமக்காக கொடுத்த வேத வசனம் என்று இதை மனதில் ஏற்றுக் கொண்டோமென்றால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக நாம் மாறிவிடுவோம்.

(ஆகாய் 1:5,7) இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். 

ஆலயம் கட்டப்படுவதற்கு சுவிஷேச பணியே அடித்தளம்:

(ஆகாய் 1:2) இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

பிரியமானவர்களே சபை கட்டுதலில் சுவிஷேச ஊழியமானது முதற்படியாக அமைந்துள்ளது. இன்று  சுவிசேஷம் சொல்லபடவில்லை என்றால் தேவனுடைய சபையானது ஒருபோதும் வளராது. சபை வளர்ச்சிக்கு சுவிஷேச ஊழியமே முதல்படி.

1:4  இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?

இதை நாம் சிந்திப்போமென்றால்  ஆசீர்வாதமாயிருக்கும். என் வீடு பாழாய்  கிடக்கும் போது என்ற வாக்கியம் எழுத்தின்படி ஆலயம் பாழாய் கிடக்கிறது என்று அர்த்தமல்ல‌.  அதற்கு மாறாக தேவனுடைய ஆலயத்தில் அவரை துதிப்பதற்கும், ஆராதிப்பதற்கும், சபையில் ஆத்துமாக்கள் இல்லையே‌, என்கிற அந்த ஒரு பாழடைந்த நிலையை தான் இங்கு சொல்கிறார்.

நம்முடைய ஆத்துமாக்கள் மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, அல்லது இன்னும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று தன் மனம்போன போக்கிலே ஆலயத்திற்கு வருகிறார்கள். இதைத்தான் ஆண்டவர் என் ஆலயம் பாழாய் கிடைக்கிறது என்று சொல்கிறார்.

1. சபை கூடி வருதல்:

பிரியமானவர்களே, ஒரு வருஷத்தில் ஐம்பத்திரண்டு வாரம் உள்ளது. அந்த ஐம்பத்திரண்டு வாரத்தில் நடைபெறும் ஆராதனையிலும் , உபவாச கூட்டங்களிலும் இரவு ஆராதனையிலும் நேரம் தவறாமல் யார் கலந்து கொள்கிறார்களோ, அவர்கள் அவ்வாண்டு முழுதும்  நிறைவான ஆசீர்வாதங்களை பெற்று தேவனுக்காக நிறைவுள்ள வாழ்க்கை வாழ முடியும்.

நமது நினைவு என்னவென்றால் ஏதோ  சபைக்கு செல்ல வேண்டும், ஒரு கடமைக்காக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும், என்று எண்ணுகிறோம். இதுதான் நமது தவறு. இயேசுவுக்கு நமது அசைவும் ஆவிக்குரிய வாழ்வில் உள்ள நடத்தையும்  விசுவாசமும் நன்றாக தெரியும்.

நம்முடைய முற்பிதாக்களின் நாட்களில் அவர்கள் செய்த பாவத்திற்கு  உடனே தண்டிக்கிறவராக இருந்தார். இயேசு கிறிஸ்துவின் நாட்களில் மன்னித்து ஏற்றுக்கொள்கிறாய்  இருந்தார். பரிசுத்த ஆவியானவரின் நாட்களில் அவர் நம்மை தேற்றுகிறவராய் இருக்கிறார். நாமும் பரிசுத்த ஆவியானவரின் நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இனிமேல்  வரப்போகும் நாட்கள் நியாயத்தீர்ப்பின் நாட்கள். அப்பொழுது மன்னிப்பவராக அல்ல, மிகவும் கண்டிக்கிறவராக நியாயந்தீர்க்கவருவார். 

2. சபை ஐக்கியம்:

நாம் ஞானஸ்நானம் எடுத்தவர்களாய் இருந்தாலும் ஜெபிக்கிறவர்களாய் இருந்தாலும், சபைக்குரிய விஷயத்தில்  வாரம்தோறும் சரியான நேரத்தில் ஆராதனையில் கலந்து கொள்வதிலும் ஆண்டவரை ஆராதிப்பதிலும் நாம் அசட்டையாகவும்  தேவனை தேடுகிற நாட்களில் நாம் உலக காரியத்திற்கு 

 இடம் கொடுப்போமென்றால் நம்மை கொண்டு தேவன் எப்படி சபையை கட்ட முடியும்.

வேதத்தில் தேவன் சொன்ன ஒர் உவமையை பார்க்கிறோம். பத்து கன்னிகைகளில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர் புத்தி இல்லாதவர்கள். இவர்கள் அனைவரும் தீவட்டிகளை எடுத்து கொண்டு போனார்கள் புத்தியுள்ளவர்கள் தீவட்டியோடு கூட எண்ணெயும் கொண்டு போனார்கள் புத்தியில்லாதவர்கள் கூட எண்ணெய்யை கொண்டு போகவில்லை மணவாளன் வர காலம் தாமதித்த போது புத்தியில்லாதவர்களின் தீவட்டிகளில் எண்ணெய் தீர்ந்துபோனது புத்தியில்லாதவர்கள் எண்ணெயை வாங்கி கொண்டு வரப் போன பொழுது மணவாளன் வந்துவிட்டார் புத்தியுள்ள ஐந்துபேர் மணவாளனுடைய கல்யாண வீட்டில் பிரவேசித்தார்கள் நாம் அறிந்துகொள்ள வேண்டியது நமக்கு அளிக்கப்பட்ட காலங்களை நாம் புரிந்து கொண்டு  நாட்களை உணர்ந்து சபையோடுகூட உடன்பட்டு ஆராதனையில் கலந்து கொள்ளும்போது. பரலோக ஆசீர்வாதத்தை தேவன் நமக்கு அளிப்பார்.

ஆகாய் 1:4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? 

தாவீது கூறும்போது ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருக்கிற ஆயிரம் நாளை பார்க்கிலும் தேவ சமூகத்தில் தங்கி இருப்பதையே தெரிந்து கொள்வேன். ஆகாமியம் என்றால் அழகும்  வசதி மற்றும் மகிழ்ச்சியளிக்கும் சிற்றின்பங்களினால் நிறைந்த அந்த கூடாரங்களை பார்க்கிலும் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆலயத்தில் அவருடைய பாதத்தில் அமர்ந்திருப்பதையே நான்  நாடுவேன்.

3. ஆலயத்தை மறப்பதினால் ஆசிர்வாதம் தடைபடும்:

ஆகாய் 1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை. நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையில் போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். 

இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளை இந்த வசனத்தின் மூலமாக கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். நாம் என்னதான் சம்பாதித்தாலும் சரீரத்தில் கடினமாய் உழைத்து இரத்த வேர்வை சிந்தினாலும் அந்த சம்பாத்தியம் (பணம்) பொத்தலான பையிலே போய் சேருகிறது.  நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். முப்பது மூட்டையாவது விளையும் என்று எதிர்பார்த்தீர்கள் ஆனால் பத்து மூட்டை தான் விளைகிறது. நாம் என்ன நினைப்போம் ஆண்டவர் என்னை ஆசிர்வதிக்கவில்லை எல்லாம் நஷ்டமாய் போய்விட்டது என்று ஆண்டவர் மேல் குற்றம் சாட்டுகிறோம். நம்மை நஷ்டப்படுத்துவது ஆண்டவர் அல்ல  நம்முடைய ஆலயத்தை நாம் பாழாக விட்டதினால்தான். நம்முடைய ஆராதனையிலும் ஆலயத்திலும் பங்கில்லை கர்த்தராகிய இயேசுவோடு ஐக்கியம் என்பதே இல்லை சபைக்கும் போவதில்லை. அப்படியிருக்கும்போது நீ எதிர்பார்த்த முப்பது மூட்டை விளைச்சல் எப்படி கிடைக்கும். நமது உழைப்பும் லாபமும் என்ன ஆனதென்று சிந்திக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. அன்றைக்கு ஈசாக்கு விதை விதைத்தான் கர்த்தர் நூறு மடங்கு அறுவடை செய்ய உதவி செய்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. காற்றையும் காணமாட்டீர்கள் மழையையும் காணமாட்டீர்கள் ஆனால் வாய்க்கால்கள் நிரப்பப்படும் அவர் ஆசீர்வதித்தால் அது நமக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் திரளாய் விதைத்தும் பலன் இல்லையென்றால் அதற்கு நாம் தான்  காரணம். தேவனுடைய ஆலயத்தை அசட்டை செய்து அதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. ஆகவே  தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியவில்லை. நாம் சரியில்லாத காரணத்தினாலேயே சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பணமும் பொத்தலான பையிலே போகிறதையும் அறியாமல் நஷ்டம் அடைந்கிறோம்.

4. சபையோடு எப்படிப்பட்ட ஐக்கியம் வேண்டும்:

ஆகாய் 1:8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள். அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன். அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

நம்முடைய வாழ்க்கையில் நன்றாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் வேதம் சொல்லுகிறது ஆலயத்தை கட்டுங்கள்.

  1. உங்கள் இருதயமாகிய ஆலயத்தை கட்டுங்கள். 
  2. ஆராதனையில் பங்குபெறுங்கள் 
  3. ஆண்டவரோடு ஐக்கியத்தை செலவிடுங்கள். 
  4. கர்த்தர் மேல் வைத்துள்ள அந்த நம்பிக்கையை பெருகப்பண்ணுங்கள்.

நாம் அவருடைய மாளிகையில் இசைவாய் இணைத்து ஆலயமாய்  கட்டப்பட்டு இருக்கிறோம். ஆகவே நாம் ஒவ்வொருவரும் அதை அவயவங்களாய் இருக்கிறபடியினால் அந்த அவயவங்கள் கர்த்தருக்கு என்று செயல்பட வேண்டும். அப்போதுதான் ஆலயம் கட்டப்படும். நாம் பிரகாசிக்க கூடியவர்களாய் இருக்கவேண்டுமென்றால் கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் கட்டபடவேண்டும். ஆலயத்திலே நாம் ஒவ்வொருவரும் கற்களாகவும், சிமெண்டாகவும், மணலாகவும், தண்ணியாகவும் கம்பியாகவும் நாம் இருக்க வேண்டும். 

நாம் தொடர்ந்து ஆலயத்தில் ஆண்டவரை  தொழுதுகொண்டு துதிப்போமென்றால் அதுவே ஆலயத்தை கட்டுவதற்கு சமம். நாம் சபைக்கு உதவி செய்கிறோமோ இல்லையோ ஆலயத்தில் தவறாமல் கலந்து கொண்டோம் என்றால் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். அன்று இயேசுவின் நாட்களில் சுவிசேஷ ஊழியத்திற்கு அடையாளமாக சாமாரிய பெண் ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிறிஸ்துதானா என்றாள் அதை கேட்ட திரளான ஜனங்கள்  இயேசுவிடம் வந்து விசுவாசம் வைத்தார்கள். அதேபோலத்தான் யாரோ ஒருவர் நம்மை கர்த்தரிடத்தில் வழிநடத்த காரணமாய் இருந்தார்கள். ஆனால் நம்மை இரட்சிப்பவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே அதேபோல சமாரியா பெண்ணும் அந்த கிராம ஜனங்களை இயேசுவிடம் வழிநடத்துவதற்கு காரணமாயிருந்தாள் ஆனால் அந்த ஜனங்களை இரட்சித்தது இயேசுகிறிஸ்துவே.

இன்றைக்கும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்தபடி நம்மை நாமே ஆராயந்து ஒப்புக் கொடுத்து. சரீரமாகிய நம்முடைய ஆலயத்தையும் ஆண்டவருடைய ஆலயத்தில் ஒப்புக்கொடுத்து, கன்மலையாகிய இயேசுகிறிஸ்துவில் கட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகி காத்திருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக  ஆமேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *