கன்மலை |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகிற பகுதி.

சங்கீதம் 18:1.  என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 2. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவபிள்ளைகளே சங்கீதக்காரனாகிய தாவீது இப்படியாய் கூறுகிறார் என்  பெலனாகிய கர்த்தாவே உம்மில் நான் அன்பு கூறுவேன். அப்படியானால் ஏன் அவரில் அன்பு கூற வேண்டும்? அவரில் அன்புகூற காரணம் என்ன? 

நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தை முழுமையாக பெலப்படுத்துகிறவர் கர்த்தர் மாத்திரமே  நாம் எவற்றில் குறைவுபட்டிருந்தாலும் அவற்றில் அவர் நிறைவை தந்து ஆசீர்வதிக்கிறார். நமது சரீரத்தில் குறைவு இருக்குமானால் சரீரத்தில் சுகம் தந்து நிரப்புகிறார் நம்பிக்கையிலே குறைவு இருக்குமானால் அதையும் நிறைவாக்கி நிரப்புகிறார்.

நாம் பெலத்திலும் பாதுகாப்பிலும் குறைவுள்ளவர்களாக இருக்கின்றோம். ஆகவே வேதம் அழகாய் சொல்கிறது. உன் பெலவீனத்திலே என்  பெலன் பூரணமாய் விளங்கும்.

உபாகமம் 32:4. அவர் கன்மலை, அவர் கிரியை உத்தமமானது, அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன், அவர் நீதியும் செம்மையுமானவர். 

கன்மலை என்றால் புகலிடமான்வர்

யாத்திராகமம் 33:21. பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு. நீ அங்கே கன்மலையில் நில்லு. 22. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன். 23. பின்பு, என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது என்றார். 

கன்மலை என்றால் செயல்களில் உண்மையுள்ளவரும் வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும் கொஞ்சமும் நியாய கேடு இல்லாதவருமாய் இருக்கிறார். தேவன் மோசேயை இஸ்ரவேலருக்கு இரட்சகராகவும் ஒரு மீட்பராகவும் ஏற்படுத்தி ஏறக்குறைய ஆறு லட்சம் பேரை எகிப்திலிருந்து வனாந்தரமான வழியாக கானான் தேசத்திற்கு கொண்டு  போகிற ஒரு அற்புதமான ஊழியத்தை பார்க்கிறோம். எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல்கொண்டு இதுவரைக்கும் எத்தனையோ விதமான அற்புத அடையாளங்களின் மூலமாக நம்மை நடத்திக் கொண்டு வந்தார். செங்கடலை பிளந்து வானத்தின் மன்னாவினால் இந்த ஜனங்களை போஷித்து அநேக விதமான ஆச்சரியமான பாதையில் நடத்தி வந்தார்.  இவ்வளவு பிரமிப்பான காரியத்தை செய்த உம்மை காணாமல் இருப்பது எப்படி? உமது மகிமையை எனக்கு காண்பித்தருளும் என்று மோசே கர்த்தரிடத்தில் கேட்டார்.  

கர்த்தர் பிரதியுத்தரமாக என்னிடத்தில் ஒரு இடம் உண்டு அதுதான் கன்மலை அந்த கன்மலையின் வெடிப்பிலேவைத்து உன்னை மறைப்பேன் என்று கரத்தர் சொன்னார்.

அந்தப் பிளவுக்கு பெயர்தான் அடைக்கலம் அந்த அடைக்கலத்திலே (உள்ளங்கையிலே) நம்மை மறைத்துக் கொள்கிறார். கன்மலையாகிய கிறிஸ்துவின் வல்லமையுள்ள கரத்திலே நம்மை மறைத்துக் கொள்ளும் போது  எவ்விதமான சாத்தானின் கிரியைகள் நம்மை பயமுறுத்தினாலும் எந்தவித பொல்லாத ஆவிகள் நம்மை எதிர்த்தாலும் நம்மை நெருங்கவோ மேற்கொள்ளவோ முடியாது. நமது கன்மலையாகிய இயேசுவினிடத்தில் பாதுகாப்பும் புகலிடமும் ஆதரவும் உள்ளது.

கன்மலை என்றால் ஜீவ தண்ணீர்  

எண்ணாகமம் 20:8 கர்த்தர் மோசேயை நோக்கி உன் கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள், அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும், இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி வனாந்திர பாதையில் போகையில்  தண்ணீர் இல்லாததினால் ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டதுபோல நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன? விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? என்று மோசேயிடம் முறுமுறுத்தார்கள் அப்பொழுது மோசேயும் ஆரோனும் கர்த்ருடைய சந்நிதியில் முகங்குப்புற விழுந்தார்கள், கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டு.

நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள், அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும், இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.  அதற்கு மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்து தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான், அப்பொழுது தண்ணீர் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள், அவர்கள் மிருகங்களும் குடித்தது. இந்த சம்பவத்தை நாம் பார்த்தோமென்றால் கன்மலையை பார்த்து பேசு என்ற தேவனுடைய வார்த்தை மீறினதிமித்தம் மோசே கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போய்விட்டது. 

கன்மலை  என்றால் ஜனங்களின் தாகத்தைத் தீர்க்கின்றவர்.   எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு தாகம் உண்டு மற்றும் எதிர்பார்ப்புகள் உண்டு ஆனால் அந்த தாகத்திற்கும், எதர்பார்ப்புக்கும் ஒரே ஒரு முடிவுதான்.   நன்மையான எந்த ஒரு தாகமாய் இருந்தாலும் நீங்கள் கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவிடம் சென்று பேசினாலே போதும் உங்கள் வறட்சியை நீக்கி திருப்தியாக்குவார். 

கர்த்தர் நம் கோட்டை

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி செல்லும்போது எரிகோவின் வழியாக புறப்பட்டு செல்ல வேண்டிய ஒரு நிலை வந்தது. அப்பொழுது அவர்களுக்கு அது தடையாகவும் கடந்து செல்லக் கூடாததுமாய் இருந்தது, அப்பொழுது யோசுவா எரிகோவின் ராஜாவினிடத்தில் நாங்கள் உங்கள் தேசத்தின் வழியாய் கடந்து போக வேண்டும் எங்களுக்கு கொஞ்சம் வழி விடுங்கள் என்று கேட்டபொழுது ராஜா அவர்களுக்கு வழிவிட மறுத்துவிட்டான். எரிகோவின் வெளிப்புறத்தில் ஒரு கோட்டையும் எரிகோவின் உட்புறத்தில் ஒரு கோட்டையுமாக இரண்டு கோட்டைகள் எரிகோவை சூழ்ந்திருந்தது. அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம் நீங்கள் ஆறு நாட்களும் ஒருமுறை சுற்றி வாருங்கள் ஏழாம் நாளோ ஏழு முறை சுற்றி வாருங்கள்  என்று சொன்னார். அப்படியே அவர்கள் ஆறு நாட்களும் சுற்றி ஏழாவது நாள் ஏழு முறை சுற்றி வரும் வேளையில் மிகவும் கெம்பீரமாய் ஆர்ப்பரித்தார்கள். உடனே எரிகோ கோட்டையின் மதில்கள் தரைமட்டமாகி இடிந்து விழுந்தது.

கோட்டை என்பது  மறைவிடத்தை குறிக்கிறது. அதேபோல தேவன் நமக்கு கோட்டையாகவும் பாதுகாப்பவராகவும் இருக்கிறார். எந்த சமயத்தில் பாதுகாக்கிறாரென்றால் நம்முடைய வியாதிலும்  பயத்திலும் ஆபத்துதிலும் நமக்கு பாதுகாப்பவராக இருக்கிறார்.

நம்முடைய ‌ வாழ்க்கை சத்துருவினால் சோதிககப்படும்போது படகு கவிழ்ந்து விடுமோ என்ற பயம் நமக்கு இருந்தாலும் கர்த்தரே பாதுகாப்பவராக இருக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். அவருடைய உள்ளங்கையிலே நாம் வரையப்பட்டிருக்கிறோம். அவர் கரங்களில் இருப்பதினால் ஒருவரும் அசைக்கவே முடியாது.

கர்த்தர் நம் ரட்சகர் 

நெகேமியா 9:27 ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர். அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். 

இஸ்ரேல் ஜனங்கள் பார்வோனிடம் அடிமைதனத்தில்   நானூற்று முப்பது வருஷம் இருந்தார்கள் அவர்கள் ஆண்டவரை நோக்கி நாங்கள் நெருக்கப்பட்டு அடிக்கப்படுகிறோம்  பசியினாலும் உபத்திரவத்தினாலும் வாதிக்கபடுகிறோம் என்று முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயைக்கொண்டு எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்கினார். அதைப்போலவே மோசேக்கு பிறகு  அநேக ரட்சகர்களை தேவன் எழுப்பினார். எகிப்து தேசத்திலிருந்து உபத்திரவம் அடிமைத்தனம் என்கிற பாடுகளிலிருந்து விடுவித்து இரடசித்தது போல தேவன் நம்மையும் ரட்சிக்கிற தேவனாயிருக்கிறார். 

ஏசாயா 60:16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய். 

உலகில்லுள்ள யாராயிருந்தாலும் இயற்கையின் பேராபத்துகள் வரும் போது  அவர்களையும் காப்பாற்றிகொள்ள முடியாது நம்மையும் காப்பாற்ற அவர்களால் கூடாது எந்த சூழ்நிலையானாலும் நம்மை பாதுகாத்து ரட்சிப்பவர் கன்மலையாகிய கிறிஸ்து ஒருவரே.  ஆகவே நம்மை பாதுகாப்பவராகிய கிறிஸ்துவிடம் வந்து சேரக்கடவோம்.

கர்த்தர் பாவமன்னிப்பு அருளுகின்றவர்

அப்போஸ்தலர் 5:31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். 

பாவமன்னிப்பையும் மனந்திரும்புதலை ஒருவராலும் தர இயலாது. அதைக் கொடுக்க கூடியவர் இயேசுகிறிஸ்துவே பாவமன்னிப்பாகிய இரட்சிப்பும் மனந்திரும்புதலும்  நமக்குள் காணப்படுகிறதா என்பதை இன்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் அப்படி இல்லையென்றால் அதை பெற்றுக் கொள்வதற்கு நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும் . 

ஞானஸ்நானம் என்பதை அநேகர் ஒரு சடங்காக நினைத்து பெற்று கொள்வார்கள். ஞானஸ்நானம் என்பது எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு முறை உண்டு மனந்திரும்பி பாவ உணர்வடைந்து பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்றுக்கொண்ட பிறகு தான் ஞானஸ்நானம் கொடுக்கபடவேண்டும்.  ஞானஸ்நானம் பெற்ற பிறகு பரத்திற்க்கும் உலகத்திற்கும் முன்பாக நற்சாட்சி வாழ்க்கை வாழ்ந்து தேவனுக்கு பிரியமாய் ஜீவிக்க வேண்டும். இதுவே சரியான இரட்சிப்பு என்று வேதம் சொல்லுகிறது

யோவான் 14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 

பிரியமானவர்களே உங்களுக்காக ஒரு பரலோகராஜ்ஜியம் ஆயத்தமாகி கொண்டிருக்கிறது.  இயேசுவானவர் பரலோகத்திற்கு செல்லும் போது சொன்னபடி உங்கள் இருதயம் கலங்காமலும் தேவன் மீதுள்ள விசுவாசம் குறையாமலும் நாம் அந்தப் பரம வருகைக்கு ஆயத்தமாகி நம்மைப்போல அநேகரையும் தேவனுடைய  ராஜ்யத்திற்குள் வழிநடத்தி பரலோகத்திற்கு வழிநடத்த வேண்டும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *