உலர்ந்த எலும்புகள் |Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின்  நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் உலர்ந்த எலும்புகளை  பற்றி தியானிக்க  போகிறோம். வேதபகுதி எசேக்கியேல் 27:1-10-வரை

பிரியமான தேவ பிள்ளைகளே இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனத்தில் முக்கியமான வார்த்தை என்னவென்றால் தீர்க்கதரிசனம். இங்கே வாசிக்கப்பட்ட ஒரு சம்பவம் என்னவென்றால் உலர்ந்த எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை எசேக்கியாவுக்கு கர்த்தர் காண்பிக்கிறார். அங்கே உலர்ந்த அநேக எலும்புகள் காணப்படுகிறது. அது முழுவதும் மனுஷனுடைய எலும்புகளாயிருந்தது.  அந்த எலும்புகள் மேல் நரம்புகளோ தசைகளோ தோலோ அதற்குள் உயிரோ இல்லை அந்நிலையில்தான் ஆண்டவர் எசேக்கியாவைபார்த்து கேட்கிறார். இந்த எலும்புகள் உயிரடையுமா? என்றார். அதற்கு எசேக்கியா ஆண்டவரே அது உமக்கே தெரியும் என்று சொல்கிறார்.

கர்த்தர் கரம் நம்மேல் அமருதல்:

எசேக்கியேல் 37:1 கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, 

அந்நாட்களில் தீர்க்கதரிசனம் உரைப்பதனாலே அவருக்கு தீர்க்கதரிசி என்று அநேகர் அழைத்தார்கள். ஊழியங்களில் பல வகை உண்டு. அவைகளில் தீர்க்கதரிசனம் உரைக்கிறவர்கள் தீர்க்கதரிசி என்றும் போதிக்கிறவர்களை போதகர் என்றும் சபைகளை நிறுவுவோரை அப்போஸ்தலர் என்றும் சபை நடத்துகிறவர்கள் மேய்ப்பர்கள் என்றும் தேவன் அங்கீகரித்து ஊழியத்தில் வைத்திருக்கிறார். அதைப் போல எசேக்கியாவையும் தீர்க்கதரிசனம் சொல்ல கர்த்தர்  ஏற்படுத்தினார். இந்த தீர்க்கதரிசி சொல்கிறார் கர்த்தருடைய கரம் என் மேல் வந்து அமர்ந்தது. கர்த்தருடைய கரமானது எப்பொழுதும் நம்மிடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் கர்த்தருடைய கரம் நம்மேல் அமருமானால் இந்த உலகமே நம்மை எதிர்த்து நின்றாலும் ஒருவரும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

இன்றைய நாட்களில் தேவ பிள்ளைகளைப் பார்த்து நீங்கள் ஏன் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டால் அதைக்குறித்து அவர்களுக்கு சரியான பதிலை சொல்லதெரியாது.  அவர்களுக்குள்ளே தேவனைப்பற்றிய சரியான தெளிவின்மையே காரணம்.

நாம் ஒவ்வொரு நாளும் நல்ல வாழ்க்கை வாழவும், அனைவருக்கும் நன்மை செய்யவும், தேவன் நம்மோடு இருக்கவும்,  கர்த்தருடைய கரம் நம்மில் தங்கி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கர்த்தர் நம்மை எடுத்து பயன்படுத்த முடியும்.

மெய்யாகவே ஆண்டவருடைய கரம் ஒருவரோடு இல்லையென்றால் அவர்களை கர்த்தர் பயன்படுத்தவே முடியாது. கர்த்தர் கரம் நம் மேல் அமர்ந்தால் தான் அநேகருக்கு நாம் பிரயோஜனமாகவும்  நன்மையாகவும் ஆசீர்வாதமாகவும் வாழமுடியும். நமது வாழ்க்கையில் “ஏதோ இருக்கின்ற வரை வாழ்வோம் வெந்ததை சாப்பிட்டு விதி வந்தால் சாவோம்” என்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதுவல்ல கிறிஸ்தவ வாழ்க்கை.  

வாழ்ந்தாலும் மரித்தாலும் நாம் இயேசுவுக்காக என்ற வைராக்கியம் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும். அப்படிபட்ட நம்பிக்கை நமக்குள் வருமானால் அதுவே  தேவபிள்ளைக்கு அடையாளம். கர்த்தர் எசேக்கியாவை எலும்புக்கூடுகள் நிறைந்த பள்ளத்தாக்கின் நடுவில் ஏன் கொண்டு போய் நிறுத்தினார் என்றால் அந்த எலும்புகளுக்கு மறுவாழ்வை தரும்படியாகவே 

தீர்க்கதரிசனம் உரைத்தல்:

எசேக்கியேல் 37:10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன், அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். 

எசேக்கியா தீர்க்கதரிசியின் மேல் கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்ததவுடன் கர்த்தர் அவரை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே உலர்ந்த எலும்புகளை  பார்த்து தீர்க்கதரிசனம் உரைத்த போது எலும்புகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து. ஆவி அவர்களுக்குள் பிரவேசித்து எலும்புகள் உயிர் அடைந்து எழும்பி மகா சேனையாய் நின்றார்கள். 

 நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் அநேக விதமான  போராட்டங்களை சந்தித்து வருகிறோம். என் வாழ்வில் ஆண்டவரை  ஏற்றுக் கொண்டேன் அவரையே நம்பியுள்ளேன் ஆனால் ஏன் எனக்கு இவ்வளவு நஷ்டங்கள் கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் என்று புலம்புகிறோம். பார்வைக்கு  உயிர் உள்ளவர்களாக காணப்படுகிறோமே தவிர ஆவிக்குரிய வாழ்வில் மற்றும் தேவனுடைய பார்வையில் உலர்ந்து போன நிலையில் நமது சதைகள் தசைகள் எல்லாம் வெறும் உலர்ந்த எலும்புகளாக காணப்படுகிறது. 

நாம் சரியான ஆவிக்குரிய வாழ்வில் உயிர் மீட்சி அடையாமல் இருக்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய நிலையானது வெட்டாந்தரையிலே மகா திரளாய் உலர்ந்து போயிருந்த எலும்புகளைப் போல, நம்முடைய விசுவாசமும் பரிசுத்தமும் ஜெப ஆவியும் இல்லாமல் வெதுவெதுப்பான நிலைமையில் மாண்டு போயுள்ளது ஆகவேதான் தேவன் எப்படியாகிலும் தமது தீர்க்கதரிசனத்தின் மூலமாய் நம் ஒவ்வொருவரையும் மீண்டுமாய் உயிர்ப்பிக்க வாஞ்சிக்கின்றார்.

 உலர்ந்த போன  ஜனங்கள் யார்? 

எசேக்கியேல் 37:11 அப்பொழுது அவர் என்னைநோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று, நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். 

இந்த எலும்புகள் யார் என்றால் இஸ்ரவேல் வம்சத்தாரே, அவர்கள் சொல்வது என்ன? எங்கள் நம்பிக்கை அற்றுப் போயிற்று, நாங்கள் அறுப்புண்டு போகிறோம் என்றார்கள். இஸ்ரவேலர் என்றால் யார்? இன்று  இரட்சிக்கப்பட்டு தேவனை ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளையாய் இருக்கின்ற நீங்களும் நானுமே. இன்றைக்கு இஸ்ரவேலராகிய நாம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அற்றுப்போய் நம்முடைய எலும்புகள் நாளுக்கு நாள் உலர்ந்து கொண்டிருக்கிறது.

எப்பொழுது நமது நம்பிக்கை நம்மை விட்டு போகிறதோ அப்பொழுதே நாம் அனைவரும் உலர்ந்தபோன எலும்புகளாகிறோம்.  ஏனென்றால் அநேக நேரங்களில் நம்முடைய பக்தியும், வெளி தோற்றமும், வெறும் வேஷமாகவே காணப்படுகிறது. நன்றாய் ஜெபிக்கிறோம், அதிகமாய் வேதத்தை வாசித்து,  பார்வைக்கு பக்தியுள்ளவர்போல வேஷம் தரித்துக் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உள்ளே ஒன்றும் வெளியில் ஒன்றுமாக இரட்டை வேஷம் தரித்துக் கொண்டு வருகிறோம்.  ஆனால் உண்மையான தெய்வ பக்தியில்லை. நம்து வாயினாலே ஜெபிக்கும் ஜெபங்களெல்லாம் சிந்தை அளவிலேயே நின்று விடுகிறது. அவைகள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து முழு இருதயத்தோடு செயல்படவில்லை.

நம்பிக்கை உள்ள வரைக்கும் இஸ்ரவேலராகிய தேவபிள்ளைகள் ஆவிக்குரியவர்களாக காணப்படுகிறார்கள் ஆனால் நம்பிக்கை அற்ற நிலையில் இருக்கும்போது நடை பிணங்களுக்கு சமமாய் உயிரற்ற இஸ்ரவேலராக பார்வைக்கு உயிருள்ளவர்களை போல காணப்படுகிறார்கள். 

தேவபிள்ளைகளே, நமது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர வேண்டுமே தவிர,  ஒரு நாளும் அவநம்பிக்கை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து அவ நம்பிக்கையுள்ளவர்களாகவே நாம் இருப்போம் என்றால் ஆண்டவரின் தண்டிப்புக்கும் சிட்சிப்புக்கும் ஏதுவானவர்களாகவே இருப்போம். 

1) கர்த்தருடைய வார்த்தையை கேளுங்கள்

எசேக்கியேல் 37:4 அப்பொழுது அவர் நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப்பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 

நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டுமென்றால் கர்த்தருடைய வார்த்தையை அறியவேண்டி விதத்தில் அறிய வேண்டும். நாம் எதை செய்தாலும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்யும் போது  நாம் உயிரடைய முடியும். ஆதலால் வார்த்தையில்தான் ஜீவன் உண்டு. அந்த வசனத்திற்கு நாம் முக்கித்துவம் கொடுப்போம். நாம் வேதத்தை அதிகமாய் வாசிக்க வாசிக்கத்தான் தேவனுடைய ஜீவ சுவாசம் நமக்குள் பெருகி கிரியை நடபிக்கும்.

நம்முடைய எலும்புகள் என்பது என்னவென்றால் ஆவிக்குரிய உறுதியான விசுவாசம். இந்த உறுதியான விசுவாசம் உலர்ந்து போகாமல் இருக்க வேண்டுமென்றால், கர்த்தருடைய வார்த்தையை வாசிக்க வேண்டும். வாசித்து அவைகளின்படி கேட்டு செயல்பட வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எவ்வளவு வேதத்தை வாசிக்க முடியுமோ, அவ்வளவாக நாம் வேதத்தை வாசிக்க வேண்டும். அதுவே மிக நன்மையானதும்   அவசியமானதாகவுமாயிருக்கிறது. கர்த்தருடைய வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

2) பரிசுத்த ஆவி:

எசேக்கியேல் 37:5 கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். 

1 கொரிந்தியர் 3:16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். 

நாம் ஆவிக்குரிய வாழ்வில் உயிர் மீட்சி பெற வேண்டும் என்றால் பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுக்க வேண்டும். ஆரம்ப நாட்களிலே பரிசுத்த ஆவியானவருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்களாக இருப்போம்.  ஆனால் நாளடைவில் அந்த அனுபவம் முற்றிலும் குறைந்து போய்விடுகிறது. இன்றைக்கு ஊழியம் செய்கிறார்கள் ஆராதனை கூட்டங்களில் நின்று மிகவும் அருவருப்பான முறையில் நடனங்களும் சினிமா இசைகளும், மெட்டுகளும், இன்றைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இவைகளினிமித்தம் பரிசுத்த ஆவியானவர் ஊழிர்களிடத்திலும் சபை மக்களிடத்திலும் காணப்படாமல் இருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர்:

எப்பொழுது நம்மில் அல்லது நமது சபையில் பிரவேசிப்பார் என்றால் ஊழியர்களின் வார்த்தைகளினாலேயோ  மாம்ச பெலத்த்தினாலேயோ இசைகளின் இரைச்சலினாலேயோ நடத்தப்படாமல் முழு இருதயத்தோடு அவரை நோக்கி அழைக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் வந்து அசைவாடுவார்.

வேதம் சொல்லுகிறது மத்தேயு 12:32 “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை”

எசேக்கியேல் 37:6 நான் உங்கள்மேல் நரம்புகளைச்சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன், அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். 

பிரியமானவர்களே  நாம் யார் என்று அடையாளம் காண்பிப்பதும் நமக்கு அழகை ஏற்படுத்துவதும்  சதையும் தோலும் தான். நாம் கருமையானவர்களா அல்லது சிகப்பு நிறமுள்ளவர்களா என்பதை வெளிப்படுத்த உதவுகிறது.  நாம் கருப்பாய் இருந்தாலும் அழகற்று இருந்தாலும் அதைக் குறித்து கவலை படதேவையில்லை ஏனென்றால் “நான் கருப்பாயிருந்தாலும் அழகாய் இருக்கிறேன்” என்று வேதம் சொல்கிறது நாம் சிகப்பாக இருந்தாலும் அழகற்று போவதில்லை நாம் கருப்பாய் இருந்தாலும்  அவமானமடைந்து போவதில்லை. நம்மைப் படைத்ததவர் தேவாதி தேவனே ஆகவே நம்முடைய சரிர தோற்றத்தைப் பார்த்து நாம் கலங்கத் தேவையில்லை. நாம் தேவனுடைய பார்வையில் எப்போதும் அழகானவர்களாகவே இருக்கிறோம். நாம் எப்பொழுது அழகுள்ளவர்களாக காணப்படுவோமென்றால், கர்த்தருடைய வசனத்தைக் கேட்கும்போது, அவரது ஆவி நமக்குள் பிரவேசித்து,  நரம்பு சதை மற்றும் தோலினால் மூடப்பட்டு, தேவ ஆவியினால் நிரப்பப்படும் போது உலர்ந்து போய் உள்ள எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று எழும்பி முழுமையான ஒரு அடையாளத்தை நமக்கு தரும். அப்போதுதான் நாம் யாரென்று மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

 அந்த எலும்புகள் யார் என்றால்  இஸ்ரேல் ஜனமாகிய நாம்தான் ஏன் உலர்ந்துபோனதென்றால் நமது வாழ்வில் நம்பிக்கை அற்றுப் போனதினால் உலர்ந்து போனோம்.  எப்பொழுது நாம் உயிர்ப்பிக்கப்படுவோமென்றால் கர்த்தருடைய வார்த்தையை நாம் கேட்கும்போது பரிசுத்த ஆவி நமக்குள் பிரவேசிப்பார்.  

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்: வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.  நமது வாழ்வில் தீர்க்கதரிசனம் முக்கியமானது.  ஒவ்வொருவருக்குள்ளும் இந்த தீர்க்கதரிசன ஆவி முக்கியம்.  இன்றைக்கும் அநேகர் எழும்பி உண்மையான தீர்க்கதரிசனத்தை அவமதிக்கும்வகையில் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து வருகின்றனர். யார் ஒருவர் இந்த தீர்க்கதரிசன வரத்தை பெற தகுதி உடையவர்களாய் இருக்கிறார்களோ அவர்களை பரிசுத்த ஆவியானவர் தமது தீர்க்கதரிசன வல்லமையை அளித்து வல்லமையாய் எடுத்து பயன்படுத்த முடியும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *