உன் நடையைக் காத்துக்கொள்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சாரோனின் ரோஜா ஊழியத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு தியானிக்க போகின்ற   வேதப்பகுதி பிரசங்கி 5:1-2 வரை

1. நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள். 2 . தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இப்பொழுது வாசித்த இந்த இரண்டு வசனங்களிலிருந்து தான் நாம் தியானிக்க போகிறோம். இந்த இரண்டு வசனங்களையும் முழுவதுமாய் தியானித்து முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவைகளை கூடுமானவரை தெளிவாய் நாம் பார்க்கலாம். அதிலே ஏழு காரியங்களை நாம் இப்பொழுது தியானிப்போம்.

1.            நீ தேவாலயத்திற்கு போகும்போது உன் நடையை காத்துக்கொள்.

2.            மூடர் பலியிடுவதுபோல பலியிடுவதைப் பார்க்கிலும் செவிக்கொடுக்க சேர்வதே நலம்.

3.            தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.

4.            தேவ சமூகத்தில் நீ உன் வாயினால் துணிகரமாக பேசாமலும்.

5.            மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் இரு.

6.            தேவன் வானத்தில் இருக்கிறார் நீ பூமியில் இருக்கிறாய்.

7.            உன் வார்த்தைகள் சுருக்கமாய் இருப்பதாக.

இப்பொழுதும் நாம் தியானிக்க போகிற இந்த ஏழுவிதமான காரியங்களில் முதலாவதாக நீ தேவாலயத்திற்கு போகும்போது உன் நடையை காத்துக்கொள். நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்று சொன்னால், தேவாலயத்திற்கு போகும்போது நம் நடையை காத்துக்கொள்ளவேண்டும். அப்படியானால் நாம் சொல்லுவோம் நான் என்ன விம்பி விம்பியா நடக்கிறேன், இழுத்து இழுத்தா நடக்கிறேன். ஏன் என் நடையை காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி எழும்பினாலும் எழும்பலாம். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். அப்படி கவனித்தால் நன்றாக தெரியும் கர்த்தருடைய வார்த்தைகள் எப்பொழுதும் ஆழமானவைகள் அதை ஒரே கவனத்தோடு கவனித்தால்தான் முடியும் நன்றாக புரியும்.

நாம் அங்கே கொஞ்சம் இங்கு கொஞ்சமாய் மனதை செலுத்தினோமானால் நாம் கேட்கிற வார்த்தை கேட்போம். ஆனால், அது சரியாக நமது மனதில் பதியாது எவ்வளவுக்கு எவ்வளவு அதை கவனித்து உள்வாங்குகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு பிரயோஜனமாக இருக்கும். இப்பொழுது இந்த வார்த்தை நீ தேவாலயத்திற்கு போகும்போது உங்கள் நடையை காத்துக் கொள்ள வேண்டும். நடை என்கிறதற்கு அநேக காரணங்கள் அநேக விளக்கங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், நான் சாதாரணமாகத்தான் சொல்லப்போகிறேன். என்னவென்றால், இரண்டு தேவனுடைய பிள்ளைகள் ஆலயத்திற்கு போனார்கள். இந்த இருவரும் இரட்சிக்கப்பட்ட விசுவாச பிள்ளைகள் வீட்டிற்கும் அவர்களுடைய ஆலயத்திற்கும் போகிற வழியிலே ஒரு ஏரி ஒன்று உள்ளது.

அந்த ஏரியை கடந்து தான் அவர்கள் ஆலயத்திற்கு போக வேண்டும் ஒருநாள் இவர்கள் ஆலயத்திற்கு போக மிகவும் ஆயத்தமாக சுத்தமாகக் குளித்து உடையணிந்து மிகுந்த பரிசுத்ததோடு பைபிளை கையில் எடுத்துக்கொண்டு ஆலயத்திற்கு வந்துகொண்டிருந்தார்கள். அப்படி வந்துக்கொண்டிருந்தபோது போகும் வழியிலேயே ஏரியிலிருந்த தண்ணீரெல்லாம் வற்றிபோனபடியினால் அந்த ஊர் மக்கள் அநேகர் ஏரியிலே  இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள் துணியை வைத்து மீன்பிடிப்பவர்கள் துணியை வைத்து பிடித்தார்கள், வலையை வைத்து மீன் பிடித்தவர்கள் வலையில் மீன் பிடித்தார்கள். இதை பார்த்தபடி போய்க் கொண்டிருந்த அந்த இரண்டு பேரில் ஒருவன் தன் நண்பனைப் பார்த்து நண்பா இன்றைக்கு நாம் இந்த சமயத்தை விட்டுவிட்டால் நாளைக்கு நமக்கு மீன் கிடைக்காது என்று புரியாமல் சபைக்கு போவதா? அல்லது மீன் பிடிப்பதா? என்ற குழப்பம் வந்துவிட்டது.

ஒருவன் நண்பனை பார்த்து நாம் இன்றைக்கு மீன் பிடிக்கலாம் வாடா  மீன் பிறகு நமக்கு கிடைக்காது என்றான் அதற்கு மற்றொருவன் இல்லை இல்லை  அப்படி எல்லாம் என்னால் உன்னோடு வர முடியாது நான் சபைக்கு தான் போவேன் என்று சொல்லிவிட்டு சபைக்கு போய்விட்டான். ஆனால், ஒருவன் இறங்கினான் மீன் பிடித்துக் கொண்டே இருந்தான் அதன் பிறகு அவன் நினைத்தான் அடடா இன்றைக்கு ஆண்டவருடைய நாளாயிற்றே நாம் ஏதோ தவறு செய்கிறோம் நாம் செய்வது தவறு என்று உணர்ந்து  மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆனால், ஆலயத்திற்கு சென்றவன் அடடா இன்றைக்கு நாம் ஆலயத்துக்கு வந்து விட்டோமே ஆலயத்திற்கு உள்ளே சென்றவன் ஆராதனை செய்யாமல் நண்பனை விட்டு வந்து விட்டோமே மீன் பிடிக்கத் தவறி விட்டோமே என்று சொல்லி மிகவும் வேதனைப்பட்டு  நமக்கு ஒரு நல்ல யோசனை இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்துக் கொண்டு சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

அவன்கூட நானும் சேர்ந்து மீன் பிடித்திருந்தால் இரண்டு பேரும் சேர்ந்து  போதகரை பார்க்கும் போது ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பி இருக்கலாமே. அடடா தவறு செய்து விட்டோமே என்று இவன் ஆலயத்தில் உட்கார்ந்துகொண்டு மீன்பிடித்துகொண்டிருக்கிறவனை நினைத்துக் கொண்டிருக்கிறான்.  அவன் மீன்பிடிக்கிற இடத்திலிருந்து அங்கே இருந்து தேவாலயத்தை குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த இரண்டு பேருடைய நினைவுகளை நன்றாய் பாருங்கள் இரண்டு பேரும் ஆலயத்திற்கு தான் வந்தார்கள் இப்பொழுது ஒருவன் ஆலயத்திற்குள் இருக்கிறான் மற்றொருவன் ஏரிக்குள் இருக்கிறான் இவர்கள் இரண்டு பேருடைய நினைவுகள் எப்படி உள்ளது ஒருவனுடைய நினைவு ஏறிக்குள்ளே இருக்கிறது ஒருவனுடைய நினைவு ஆலயத்திற்குள்ளே இருக்கிறது. அதுதான் நடை இப்பொழுது நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் நாம் எங்கே இருக்கிறோமோ அங்கே நம்முடைய நினைவுகள்  இருக்க வேண்டும்.

இன்றைக்கு நீங்கள் ஆலயத்திற்குப் வரும்போது தேவனை ஆராதிக்கிற நினைவோடு வருகிறீர்களா? இல்லை ஏதோ கடமைக்காக வருகிறீர்களா? இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை நாம் போகவில்லை என்றால் பாஸ்டர் கேட்பாரே என யோசிப்பதுண்டு நன்றாக ஒரு காரியத்தைக் கவனிக்க வேண்டும். பாஸ்டர் கவனிப்பது அல்ல பாஸ்டர் கேட்பதல்ல  நான் கட்டாயம் கேட்க மாட்டேன். ஏனென்றால், உங்களுக்கும் ஆண்டவருக்கும் இருக்கிறதான ஒரு புனிதமான உறவு அதில் கட்டாயம் நான் தலையிடமாட்டேன் ஏனென்றால் அது உங்களுக்கும் ஆண்டவருக்கும் உரிய உறவு சம்பந்தப்பட்டது,  கட்டாயம் நாம் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நடை என்றால் நாம் எங்கே நிற்கிறோம் எங்கே நடக்கிறோம் என்ன செய்கிறோம் நம்முடைய ஜெபமும் நம்முடைய சிந்தனையும் ஜெபத்தில் இருக்கிறதா என்று கட்டாயமாக தேவன் எதிர்பார்ப்பார் நம்முடைய ஆர்வம் எங்கே இருக்கிறது.

ஒரு போதகர் சபையில் இப்பொழுது எல்லோரும் சேர்ந்து ஒரு அல்லேலுயா சொல்லுங்கள் என்றார் அதிலே நாலு பேர் மட்டும் சொல்லாமல் இருந்தார்கள். ஆகவே போதகர் தூங்குபவர்கள் எல்லாம் ஒரு அல்லேலூயா சொல்லுங்கள் என்றார் இதிலே இன்னொரு கொடுமை என்னவென்றால் தூங்குபவர்கள் அல்லேலூயா சொல்லவில்லை விழித்துக் கொண்டிருப்பவர்கள் அதற்கு அல்லேலுயா என்று சொன்னார்கள். அப்படியானால் இவர்கள் நினைவுகளை நன்றாக கவனியுங்கள் தூங்குபவர்களுக்கு அந்த வார்த்தையை கேட்கவில்லை அதனால் அவர்கள் சொல்லவில்லை ஆனால் விழித்துக் கொண்டிருக்கிறவர்களும் எதற்காக  சொல்லசொல்கிறார்கள் என்று கவனிக்காமல்கூட  அல்லேலுயா சொல்லுகிறார்கள் அப்படியானால் அவர்கள் நினைவுகள் அங்கே சொல்லப்படுகிற வார்த்தையின்மேல்  இல்லை. 

உங்களது கவனம் எங்கே இருக்க வேண்டுமானால் நீங்கள் ஆலயத்தில் இருந்தால் உங்கள் கவனம் ஆலயத்தில் தான் இருக்க வேண்டும் ஒரு நாள் ஒரு பள்ளியில் வாத்தியார் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம் அப்பொழுதெல்லாம்  பள்ளிக்கூடம் கூரையாக இருக்கும் அப்பொழுது வாத்தியார் பாடத்தை நடத்தி கொண்டிருந்த வேளையில் ஒரு மாணவன் மாத்திரம் மேலேயே பார்த்துக்கொண்டிருந்தான் எல்லா மாணவர்களும் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்  இவன் மாத்திரம் மேலேயே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது வாத்தியார் சாக்பீஸினால் தலையில் கொட்டி ஏதாவது உன் தலையில் நுழைஞ்சதா இவ்வளவு நேரம் கற்றுத்தருகிறேனே என்று கேட்டார். அதற்கு அவன் ஐயா இன்னும் வால் மட்டும்தான் நுழையல மற்றதெல்லாம் நுழைந்து விட்டது என்றான்.

அப்படி என்றால் நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு தெரியாது ஆனால் நான் பார்த்த வரைக்கும் மேலே பல்லி ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறேன் வால் மட்டும் தான் வெளியே போகவில்லை மற்றதெல்லாம் போய்விட்டது என்றான். அப்படி தான் இன்றைக்கு அநேகருடைய நினைவுகள் என்னவென்றால் எல்லாரும் இங்கதான் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் நினைவுகளோ எங்கேயோ சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் நீ தேவனுடைய ஆலயத்திற்குப் போகும்போது உன் நடையை காத்துக்கொள்,

என்னுடைய ஊழிய அனுபவத்தில் இப்பொழுது இருக்கிற இந்த பகுதியில் நான் சபை ஆரம்பிக்கவில்லை குப்பை நல்லூர் பகுதியிலும் ஆர் என் கண்டிகை பகுதியிலும் மல்லிகாபுரம் பகுதியிலும் ஆலஞ்சேரி என்கிற பகுதியிலும் மொத்தம் நான்கு பகுதிகளில் நான் ஊழியம் செய்து கொண்டிருந்தேன். செவ்வாய்க்கிழமை குப்பையநல்லூர் புதன்கிழமை ஆர் என் கண்டிகை வியாழக்கிழமை மல்லிகாபுரம் வெள்ளிக்கிழமை ஆலஞ்சேரி ஆக நான்கு நாட்கள் கட்டாயம் சாயங்காலத்தில் ஊழியத்திற்கு போய்விடுவோம். போகிற இடத்தில் திரளாய் ஜனங்கள் வந்து கலந்து கொள்வார்கள்குறைந்தது 50 பேராவது கூடுவார்கள் அந்த வீட்டில் இடம் கொள்ளாமல் போகும் அளவிற்கு கூடுவார்கள் அப்போதெல்லாம் கூறைவீடாக தான் இருக்கும் முதலாவது ஜனங்கள் எல்லாம் வெளியே உட்கார வைத்து சில ஜனங்களை திண்ணையில்  அமர வைத்துவிட்டு நாங்கள் உள்ளே நின்று கொண்டு இப்படிதான் ஜெபம் தொடங்குவேன். அப்போது அநேகர் சுகத்திற்காக வருவார்கள் ஜெபித்துக் கொள்வார்கள் பிசாசு பிடியிலிருந்து விடுதலைக்காக ஜெபித்துக் கொள்வார்கள். அப்படியாக ஒருநாள்  குப்பை நல்லூர் பகுதியில் ஜெபித்துக் கொண்டிருந்த போது ஒரு சகோதரிக்கு பிசாசு பிடித்திருக்கிறது என்று சொல்லி அழைத்து வந்தார்கள். பிசாசு ஓட்டுவதற்காக மற்ற எல்லா உலகப்பிரகாரமான மந்திர இடங்களுக்கும் சூனிய இடங்களுக்கும் கொண்டுபோய் அநேக இடங்களில் காண்பித்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்தபாடில்லை.

அதன் பிறகு உத்திரமேரூரில் உள்ள எல்லா ஊழியர்களிடத்திலும் ஜெபித்து இருக்கிறார்கள்  விடுதலை இல்லை  அன்றைக்கு என்னிடம் அழைத்துக் கொண்டு வந்தார்கள் ஆனால் அப்பொழுது நான் ஒரு பாஸ்டராக இல்லை பாஸ்டருக்கடுத்த உதயாளராக (நுடனநச) இருந்தேன். அப்போது நான் நினைத்தேன் அநேக பாஸ்டர்கள் ஜெபித்து இருக்கிறார்களே நான் இன்னும் பாஸ்டராகவே ஆகவில்லை. ஆனால், இன்றைக்கு என்னிடத்தில் வந்திருக்கிறார்கள் அப்படி என்று என் மனதில் நான் நினைத்தேன். அப்பொழுது ஆண்டவர் சொல்கிறார் இதுவரைக்கும் நடந்தது எல்லாம் நீ தான் செய்கிறாயா என்பது போல் இருந்தது உடனே நான் இல்லை ஆண்டவரே, என்னை மன்னித்துவிடுங்கள் என்று ஜெபித்தேன். ஏனென்றால், எதுவும் நாம் செய்வதில்லை நாம் கைகளை நீட்டுவோம் அவ்வளவுதான் விடுதலையும் ஜெயமும் தருவது அவர் மாத்திரமே. சும்மா கைகளை நீட்டுவதுதான் என்னுடைய வேலையே தவிர சுகமும் விடுதலையும் தருவது ஆண்டவர்மட்டுமே

நீங்கள் ஒன்றும் பெரிதாக என்னை நினைத்து விட வேண்டாம் உங்களைப்போல உங்களில் ஒருவன்தான். ஆனால், கைகளை நீட்டும் போது அற்புதம் நடைபெறுகிறது என்றால். அது என்னுடைய கரத்திலிருந்து வருகிறது அல்ல அது தேவனுடைய கரத்தில் இருந்து வருகிறது அதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். என்னிடத்தில் ஜெபிக்க அழைத்துவந்த அந்த சகோதரியை குறித்து இவ்வளவு தூரம் பிரயாசப்பட்டு விடுதலை இல்லாமல் இருக்கிறார்களே இவர்களிடத்தில் எங்கேயோ ஒரு குறை இருக்கிறது என்று மனதில் நினைத்து கொண்டிருந்தேன். சரி என்று எல்லாரையும் கைகளை நீட்டச் சொல்லி ஸ்தோத்திரிக்க செய்தேன் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் இருக்கிறவர்களுக்கு எப்படி ஜெபிப்பேன் என்றால் தேவ பிள்ளைகளை குழுவாக நிற்கவைத்து எல்லோரையும் கைகளை தட்டி பாடல் பாட சொல்லுவேன். வல்லமை உண்டு வல்லமை உண்டு என்ற பாடலை பாடி அதன்பிறகு ஜெபிக்க ஆரம்பிப்பேன் அப்படி ஜெபித்துக் கொண்டிருக்கும்போது அந்த சகோதரி வழக்கம்போல ஆட ஆரம்பித்து எல்லா இடத்திலும் ஆடினது போல இங்கேயும் ஆடிக்கொண்டிருந்தாள்.

அந்த ஆட்டம் ஆடுவதையும் பார்த்த வேளையிலே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது இவர்கள் உண்மையாக பிசாசு பிடித்து ஆடுபவர்களாக தெரியவில்லையே என்று சொல்லி மனதில் தோன்றியது அதை உற்று கவனித்த போது அந்தப்பெண் வேண்டுமென்றே நடிப்பாக இத்தனை இடங்களிலும் ஏமாற்றி விட்டு வந்து என்னிடத்திலும் ஏமாற்றலாம் என்று நினைத்தது நான் நேரடியாக அதன்மேல் கை வைத்து இப்படிகேட்டேன் நீ வேண்டுமென்றே நடித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது.

நீ செய்கிற வித்தையை எல்லாரும் கேட்கும் வண்ணமாய் நான் சொல்லட்டுமா இல்லை என்றால் நான் பிசாசு ஓட்டுகிறது போல ஓட்டுவேன் நீயும் ஓடுவது போல போய் விடுவாயா என்று இரகசியமாய் கேட்டேன். சரி என்று ஒத்துக் கொண்டது நான் கேட்டேன் ஏன் இப்படி செய்தாய் என்றதற்கு  என்னை வீட்டில் யாரும் மதிக்கிறதேயில்லை என்றது எங்க வீட்டில என்னுடைய சொந்தபந்தங்கள் மதிக்கிறதில்லை என் கணவரும் என்னை மதிப்பதில்லை. ஆனால், இப்பொழுதோ எனக்காக எவ்வளவோ செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் இந்த வேலையை நான் செய்கிறேன் என்றது சரி என்று உண்மையாகவே பிசாசை துரத்துவது போல துரத்தி அவர்களோடு செய்த ஒப்பந்தத்தின்படி அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களுக்காக ஜெபித்து எழுப்பினேன். அப்பொழுது அவர்கள் சந்தோஷமாக உண்மையாக விடுதலை பெற்றது போல குடும்பமாக சேர்ந்து வீட்டிற்கு போனார்கள். அதற்கு பின்பு அந்த சகோதரி ஒரு நாள் தனியாக ஜெபம் பண்ணும் படி வந்தார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன் என்னதான் நடந்தாலும் பிசாசு பிடித்த மாதிரி நடிக்க கூடாது இதை அவன் சாதகமாக பயன்படுத்தி அழிவுக்கு கொண்டு போய்விடுவான் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஆலோசனை சொல்லி அனுப்பினேன். ஆகவே நீங்கள் ஆலயத்திற்கு செல்லும் போது யாரை பார்க்க வேண்டுமென்றால் இயேசுவை மட்டும் தான் பார்க்கவேண்டும் இயேசுவை நாம் ஒரு முறையாவது காண வேண்டும்.

எது மிக முக்கியம் என்றால் தேவனுடைய ஆலயத்திற்கு போகிறது தான் வசனத்தை பாருங்கள் தாவீது ஒரு அரசர் ஒரு நாட்டையே ஆளுகை செய்கிற ராஜா என்ன சொல்லுகிறார். ஆயிரம் நாட்கள் என் வாழ்க்கையில் வரலாம். ஆனால், ஆண்டவருடைய ஓய்வு நாள் தான் எனக்கு மேலானது என்கிறார். நான் மிகப்பெரிய ஆசீர்வாதமான மாளிகையில் வாசமாய் இருப்பதைக் காட்டிலும் அதைவிட என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் தங்குவதே எனக்கு சிறந்தது என்று தாவீது சொல்கிறார். நன்றாக கவனித்தால் தாவீது மிகப்பெரிய அரசன் அவர் நினைத்தால் அவருடைய மாளிகைக்கே ஊழியர்களை வரவழைத்து ஜெபம் செய்திருக்கலாம். ஆனால், அவர் சொல்கிறார் ஆயிரம் நாட்கள் என் வாழ்க்கையில் வரலாம் வராமல் கூட போகலாம் எல்லாவற்றையும்விட தேவனுடைய ஆலயத்திற்கு போவது தான் சிறந்தது என்கிறார். மேலும் நான் செழிப்பான இடத்தில் இருப்பதைக் காட்டிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியையே தெரிந்துகொள்வேன் என்கிறார்.

நன்றாக சிந்தித்து பாருங்கள் நமக்கு எது முக்கியமானது  ஆலயத்திற்கு போவதைவிட வேலையை முக்கிய படுத்துகிறார்கள். நான் இயேசுவை ஏற்றுக்கொண்ட ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய சைக்கிள் கடை வைத்திருந்தேன் அதில் 10 லிருந்து 15 சைக்கிள் வரை இருக்கும் அதை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்துதான் பிழைத்துக் கொண்டிருந்தேன். அந்த காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு சைக்கிளின் வாடகை 25 பைசா இப்படியாக கடையை நடத்தி கொண்டு இருந்தேன் அந்த நேரத்தில் தான் இயேசுவை அறிந்து கொண்டேன் ஞாயிற்றுக்கிழமை வந்தால் சபைக்கு போகவேண்டும் அன்று ஆலயத்திற்குச் சென்றால் வருமானம் தடையாகி விடும் எப்படி எனில் சனிக்கிழமையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தான் கொண்டு வந்து விடுவார்கள் அதை யோசித்து கொஞ்சநாள் ஆலயத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன். அப்பொழுது ஆண்டவர் என்னோடு பேசினார் நான் உனக்கு முக்கியமா? இந்த கடை உனக்கு முக்கியமா? என்று கேட்டார்.

அதற்கு சிறிது நேரம் யோசித்து சொன்னேன் கடை வருமானத்திற்கும் நீர் என் பக்திவிருத்திக்கும் இரண்டுமே தேவைதான் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் என் மனம் மீறி சொன்னேன் நீங்கள்தான் ஆண்டவரே முக்கியம் என்றேன் அப்படியானால் ஞாயிற்றுக்கிழமை கடையை மூடிவிடு என் சமூகத்தில் வா என்றார். அதற்குக் கீழ்ப்படிந்து சென்றேன் கர்த்தர் அந்த நாளுக்கு பதிலாக மறுநாள் இரட்டிப்பான வருமானம் கொடுத்தார் ஞாயிற்றுக்கிழமை வந்த வருமானத்தை காட்டிலும் ஆலயத்திற்கு போன உடனே எனக்கு மூன்று மடங்கு வருமானம் கொடுத்ததை நான் உணர ஆரம்பித்தேன். அதன் பின்பு தினமும் மாலை 5 மணிக்கு மேல் ஊழியத்திற்கு என் கடையில் உள்ள சைக்கிளை எடுத்துக்கொண்டு மூன்று பேர் நான்கு பேராக புறப்பட ஆரம்பித்தோம் இப்படியாக ஆசீர்வதித்து உயர்த்தினார். ஆகவே நீங்கள் ஆலயத்திற்குப் போவதற்கு ஏன் யோசிக்கிறீர்கள்? ஏன் குடும்பமாக ஆலயத்திற்கு செல்லமாட்டீர்கள்? ஏன் தேவனுடைய சமூகத்தில் வந்து நிற்க முடியவில்லை? அங்கே நம்முடைய நடையை சரி செய்து கொள்ள வேண்டும். ஒரு காரியத்தையும் உங்களுக்கு சொல்கிறேன்.

இந்த வருடம் முழுவதும் ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட தவறாமல் நீங்களும் உங்கள் வீட்டாரும் ஆலயத்திற்கு வந்து பாருங்கள் இத்தனை நாட்கள் வந்தது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் இதை இன்னும் தொடர்ந்து கடைபிடியுங்கள் எல்லாவற்றை காட்டிலும் தேவனை தேடும்போது அவருக்காக எதையெல்லாம் நீங்கள் விட்டு வந்தீர்களோ அதையெல்லாம் சேர்த்து தர தேவன் வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

சங்கீதம் 37:23 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும் அப்படி என்றால் நீங்கள் எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும் ஆண்டவருடைய ஆலயத்தை தேடவேண்டிய இடத்தில் தேடும்போது. பல வருடங்களுக்கு முன்பாக நம்முடைய இந்தியா இங்கிலாந்து தேசத்தின் மகாராணியான விக்டோரியா அவர்களுடைய ஆளுகையின் கீழ் இருந்தது பல நாடுகளை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார்கள். அதில் இந்தியாவும் ஒன்று இவர்கள் நல்ல உத்தமமான தரமான கிறிஸ்துவர் இவர்களுக்கு ஓய்வே இல்லை ஓய்வில்லாமல் உழைத்தார்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வந்தால் எல்லாவற்றையும் தூரமாக வைத்துவிட்டு ஆலயத்திற்கு கடந்து செல்வார்கள் இப்படியாக ஒரு நாள் அவர்கள் ஆலயத்திற்கு புறப்பட்டு தனது இரதத்தில் ஏறுவதற்கு சென்றுகொண்டிருந்தபோது பக்கத்து நாட்டு மன்னன் திடீரென்று வந்து அவர்களிடத்தில் மகாராணி நான் உங்களிடத்தில் பேச வேண்டும் என்றார்.

அதற்கு அவர்கள் நான் இப்போது ஆலயத்திற்கு செல்கிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்கூட ஆலயத்திற்கு வாருங்கள் இல்லையென்றால் நான் வரும்வரை விருந்தினர் மாளிகையில் காத்திருங்கள் எது உங்களுக்கு விருப்பமோ அதை செய்யுங்கள் என்றார். உடனே அந்த பக்கத்து நாட்டு மன்னன் அவர்களுடைய ஆலயத்திற்கு அவர்களோடு சென்றார் நீங்களும் அவ்வாறு இயேசுவைப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் தேடாத ஆசிர்வாதங்கள் அனைத்தையும் அவர் உங்களுக்கு கொடுக்க வல்லவராக இருக்கிறார். எங்களை போஷிக்கிற ஆண்டவர் உங்களையும் போஷிப்பார் உண்மையாக கர்த்தரை தேடுகிறவர்களுக்கு அவர் சமீபமாய் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் ஒன்பது மணிக்குள்ளாக வரும் இல்லையென்றால் ஒரு மணிக்கு மேல் தான் வரும் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நேரங்களில் ஐயாவுக்கு போன் செய்தாலும் எடுக்க மாட்டார் என்று தெரியும் சில பேர் செல்போனை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பார்கள் போனில் ஏதாவது செய்தியோ அழைப்போ வருகிறதா என்று அதை பார்த்து கொண்டே இருப்பார்கள்.

எனக்கு ஒரு சகோதரியை தெரியும் நன்றாக ஜெபம் செய்து கொண்டே இருப்பார்கள் திடீரென்று செல்போன் அடித்தது என்றால் உடனே போனை எடுத்து பேசுவார்கள் அப்படியானால் அவர்கள் எண்ணம் முழுவதும் செல்போனில் தான் இருக்கிறது. நீங்கள் அப்படி இருக்கக் கூடாது உண்மையாக கர்த்தரை தேடிப்பாருங்கள் இந்த உலகத்திலேயே உயர்ந்த இடத்தில் கர்த்தர் உங்களை கொண்டுபோய் வைப்பார். அதுதான் கவனித்து பார்க்க வேண்டிய காரியம் உங்கள் நடைகளை சரி பார்த்து கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் வீட்டிலேயே இருந்தீர்களானால் உங்களை பார்க்கிறவர்கள் இவர்கள் என்ன கிறிஸ்துவர்கள் என்றுதான் சொல்லுவார்கள். சபைக்கு செல்வதில்லை என்று நினைத்து நகைப்பார்கள் உங்கள் நடைகளை அவர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருக்க மாட்டார்கள் சபையில் தான் இருப்பார்கள் என்று உலகத்தாருக்கு தெரியும் தேவனைத் தேடுகிற உங்களுக்கு தான் தெரியவில்லை ஆண்டவரை மறந்துவிட்டீர்கள் உங்கள் நடைகள் விலகி விலகி போய்க்கொண்டிருக்கிறது. 

நீதிமொழிகள் 5:6 நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்: அவைகளை அறியமுடியாது.

ஜீவ மார்க்கம் என்றால் சபைக்கு போவது ஜீவ வழியை தேடி போகிறோம் என்பதைக் குறிக்கிறது இயேசுவின் பாதத்தில் நமக்குரியது எல்லாம் உண்டு. சிலபேர் அந்த ஜீவ வழியில் போகாதபடிக்கு அவர்கள் நடைகள் மாறி மாறி விகாரப்படும் ஒரு வாரம் வருவார்கள் ஒருவாரம் நின்று விடுவார்கள் மறுபடியும் ஒரு வாரம் வருவார்கள் அவர்களை புரிந்து கொள்ளவே முடியாது. ஒருவர் எனக்குச் ஒரு சம்பவத்தை சொன்னார் இவர் தனது தகப்பனுடைய நண்பரை பார்க்கும்படி போனார். அவர் ஒரு கிறிஸ்தவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குப் போனார் அங்கே இரண்டே தெருதான் காணப்பட்டது. அந்த தெருவில் இருந்த அனைவரும் கிறிஸ்தவர்கள் அப்பொழுது அவர் தன் தகப்பனுடைய நண்பனின் பெயரை சொல்லி ஒருவரிடத்தில் விலாசம் கேட்டார் அதற்கு அவர் சொல்கிறார் அவர் நாடாரா இல்லை பிள்ளைமாரா என்று கேட்டார் அதற்கு இவர் அவர் ஒரு கிறிஸ்தவர்தான் என்றார்.

அவர் சொல்லுகிற காரியம் என்னவென்றால் நான் ஜாதியை பார்க்கவரவில்லை கிறிஸ்துவரான என் நண்பரை பார்க்கவந்தேன் ஜாதியை பாரக்கிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது கிறிஸ்தவர்கள் ஜாதியை பார்க்க மாட்டார்கள் என்றார் அவர், அநேகர் இன்றைய நாட்களில் ஜாதியை பிடித்துக்கொண்டு நான் யார் தெரியுமா என்று பெருமையாக பேசுகிறார்கள் நாம் ஒன்றுமே இல்லை இயேசுதான் ஹீரோவாக இருக்கிறார். நாம் எல்லோரும் ஜீரோ தான் இயேசுவை முன்பாக நிறுத்துங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் ஆசீர்வாதமாக நடக்கும். நீங்கள் நினைக்கிறது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் இயேசுவை முன்பாக நிறுத்துங்கள் உங்கள் நடைகளை சீர்தூக்கிப் பாருங்கள் நாம் நினைக்கிறோம் என்னை யாரும் பார்க்கவில்லை என்று நம் இரண்டு கண்களால் தான் உலகத்தை பார்க்கிறோம். ஆனால், உலகத்திலே இருக்கிற அனைத்து கண்களும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது நீங்கள் எப்பொழுது விழுவீர்கள் நாம் எப்பொழுது பார்த்து சிரிக்கலாம் என்று உங்களை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், நீங்கள் ஆராதிக்கிற தேவன் உங்களை கீழே விடமாட்டார் நாம் எங்கே இருந்தாலும் அவருடைய கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. பிசாசு எங்கேயாவது நீ இடறுவாயா விழுவாயா என்று பார்ப்பான். ஆனால், உன்னை உறங்காமல் காக்கிறவர் உன்னை கைவிடவே மாட்டார் இரவும் பகலும் உறங்காமல் காத்துக் கொண்டிருப்பவர் அவர் உன்னைக் கைவிடுவதில்லை எப்பொழுதும் எதிரிக்கு இடம் கொடுக்காமல் உன்னை காத்துக் கொண்டே இருக்கிறார். இன்றைக்கு எத்தனையோ பேர் உங்களுக்கு விரோதமாய் எப்பொழுது சாவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக உங்களை அவர் காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே நீங்கள் ஆலயத்திற்கு போகும் ஒவ்வொரு முறையும் உங்கள் நடைகளை கவனித்துப் பாருங்கள் ஆலயத்திற்கு உள்ளே இருக்கிறீர்களா அல்லது ஆலயத்திற்கு வெளியே இருக்கிறீர்களா ஆண்டவரோடு இருக்கிறீர்களா அல்லது ஆண்டவரை விட்டு தூரமாய் இருக்கிறீர்களா என்பதை மிகவும் கவனமாய் அறிந்து கொள்ள வேண்டும்.

                ஒரு போதகர் சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த வேளையில் ஒரு சகோதரி மட்டும் நடுவிலே உச் உச் என்று  சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார்கள் போதகருக்கோ ஒன்றும் புரியவில்லை நான் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறேன் இவர்கள் உச் உச் என்று சொல்லுகிறார்களே நாம் பேசுவது இவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ என்று நினைத்து இன்னும் உற்சாகமாக பேசினார் மெதுவாகப் பேசினாலும் உச் உச் என்று சொல்கிறார்கள். வேகமாக பேசினாலும் உச் உச் என்று சொல்லுகிறார்கள் போதகருக்கு ஒன்றுமே புரியவில்லை சபை முடிந்தவுடன் அந்தத் தாயாரை அழைத்து நீங்கள் ஏன் பிரசங்க வேளையில் உச் உச் என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் பிரசங்கம் உங்களை தொட்டதாக இருந்ததா பிரசங்கம் உங்களுக்கு பிடித்து இருந்ததா என்று கேட்டார். அதற்கு அந்தத் தாயார் இல்லை ஐயா ஆலயத்திற்கு வருகிற அவசரத்தில் சாப்பாடு எடுத்து உள்ளே வைக்காமல் மறந்து வந்துவிட்டேன். அதனால், நாயை கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன் என்றார்கள் அப்பொழுது பாருங்கள் அவர்களுடைய நினைவெல்லாம் எங்கே இருந்தது நாய் மேல்தான் இருந்தது.

எப்படி ஆண்டவர் அவர்களை ஆசீர்வதிக்க முடியும்  நீங்கள் ஆண்டவருடைய சமூகத்தில் வந்தால் ஆண்டவரே நீங்களே எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜெபித்தால் கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார் அவருடைய வார்த்தை நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டும்

மூடர் பலியிடுவதுபோல பலியிடுவதைப் பார்க்கிலும் செவிக்கொடுக்க சேர்வதே நலம்:

மூடர் பலியிடுவதை போல பலியிடுவதை பார்க்கிலும் செவிகொடுக்க சேர்வதே நலம் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பலியிடுவதை பார்க்கிலும் செவி கொடுப்பதையே கர்த்தர் மிகவும் எதிர்பார்க்கிறார். நாம் செலுத்துகிற பலியைவிட கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதுதான் நல்லது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அநேகர் ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் சொல்லுவார்கள் ஒரு சிலர் ஆசிர்வாதம் தொலைக்காட்சியில் ஸ்தோத்திர பலிகளை போட்டுவிட்டு அதைக் கேட்டுக்கொண்டே வேலை செய்வார்கள். அப்படியானால் அவர்கள் மனதிலிருந்து சொன்னார்களா சிந்தனையிலிருந்து சொன்னார்களா என்று பார்த்தால் எதுவும் இல்லை உங்கள் கஷ்டம் கண்ணீர் கவலை ஏன் இன்னும் மாறவில்லை என்றால் அவருடைய வார்த்தைக்கு செவி கொடுக்கவில்லை இன்னும் கீழ்ப்படிய வில்லை அவருடைய வார்த்தையை ஒருபோதும் உங்கள் காதில் வாங்கிக் கொள்வதேயில்லை நீங்கள் அநேக ஸ்தோத்திர பலிகள் செலுத்துவதை விட ஆண்டவரே நீங்கள் சொன்னதை நான் கேட்கிறேன் என்று சொல்வது தான் சரியானது விசுவாசிகளில் 90மூ சதவீதம் பேர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மட்டும் ஆண்டவரிடத்தில் பேசிக் கொண்டு இருப்பார்கள் ஆண்டவர் சொல்வதையோ கேட்பது இல்லை எப்படி ஆண்டவர் உங்களிடத்தில் பேசுவார் நீங்கள் பலியிடுவதை பார்க்கிலும் கர்த்தர் சொல்லுவதை கேட்க உங்கள் சேவியை சாய்க்க வேண்டும் ஒரு காரியத்தை உங்களுக்கு சொல்கிறேன். சாமுவேல் என்னும்  ஐந்து வயதுள்ள ஒரு சிறுவன் அவனை பால் மறந்த உடனே அவன் தாய் ஆலயத்தில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள். ஏனென்றால், ஏற்கனவே அவன் தாய் பொருத்தனை செய்து இருந்தால் எனக்கு ஒரு ஆண் பிள்ளையை தருவீரானால் எனக்கு மலடி என்கிற பெயர் நீங்கும் அந்தப் பிள்ளையை உமக்கே தருகிறேன் என்று ஜெபம் செய்தார்கள் அதின்படி ஆண்டவர் அவளுக்கு ஒரு ஆண் பிள்ளையை தந்தார்.

அந்தப் பிள்ளைக்கு சாமுவேல் என்று பெயர் வைத்தார்கள் சாமுவேலுக்கு இப்பொழுது ஐந்துவயது  அவனை கொண்டுவந்து ஆலயத்தில் விட்டு செல்கிறார்கள் அதன்பின்பு அந்த தாயாருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தது சாமுவேலை ஆலயத்தில் விட்டதினால்தான் அவர்கள் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றினதினால்தான் பெரிய நிந்தை நீங்கி பெரிய அற்புதத்தை செய்தார் ஒரு காரியத்தை நன்றாய் அறிந்து கொள்ளுங்கள் பொருத்தனை செய்தால் அதிலே சாக்கு போக்கு சொல்லாமல் பொருத்தனை நிறைவேற்றுங்கள் அது எதுவாயிருந்தாலும் அது எவ்வளவாக இருந்தாலும் அது ஆண்டவருக்கு சொந்தம் காணிக்கை தசமபாகம் கர்த்தருக்கு தான் சொந்தம் அதைக் கொடுக்காமல் இருந்தீர்களானால் அதை யாராவது உங்கள் இடத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

நன்றாக கவனியுங்கள் சாமுவேலை ஒருநாள் ஆண்டவர் கூப்பிடுகிறார் அவன் ஆலயத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தான் ஆலயத்தில் போதகர் இருந்தார் அவர் பெயர் ஏலி அந்த சமயத்தில் ஆண்டவர் சாமுவேலை கூப்பிடுகிறார் இவன் எழுந்து சுற்றிப் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று ஓடிப்போய் ஏலி தாத்தா ஏலி தாத்தா என்னை கூப்பிட்டீர்களா என்று கேட்டான் அதற்கு அவர் இல்லை நான் கூப்பிடவில்லை நீ போய் படுத்துக்கொள் என்றார் இப்படியாகக மூன்று முறை ஆண்டவர் கூப்பிடுகிறார் மூன்று முறையும் சாமுவேல் ஏலியினிடத்தில் போய் கேட்க்கிறார் அப்பொழுது ஏலி  கர்த்தர் இவனிடத்தில் பேசப் போகிறாரோ என்று நினைத்து  சாமுவேலுக்கு இந்த முறை கூப்பிட்டால் கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று சொல்லிக் கொடுத்தார் மறுபடியும் போய் படுத்துக் கொண்டான் ஆண்டவர் அவனை சாமுவேலே என்று அழைத்தார் சாமுவேல் எழுந்து சொல்லும் ஆண்டவரே அடியேன் கேட்கிறேன் என்றார். இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா எப்பொழுதாவது ஆண்டவர் உங்களோடு பேசியிருக்கிறாரா பேசவில்லை என்றால் தயவுசெய்து சீக்கிரமாக பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள் நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை  ஆண்டவரிடத்தில் பேசிப்பாருங்கள். உங்கள் வாழ்க்கை முறையே மாறிவிடும் உங்களை பார்க்கிறவர்கள் வித்தியாசமாக பார்ப்பார்கள் மற்றவர்களின் பார்வைக்கு தேவன் உங்களை உயர்த்தி வைத்திருப்பார் மற்றவர்களைப் போல் சாதாரணமாக இருக்க மாட்டீர்கள்.

சாமுவேல் சிறுவனாக இருந்தான் கர்த்தரிடத்தில் பேசின பின்பு போதகரான ஏலி அவனை அழைத்து ஆண்டவர் உன்னிடத்தில் பேசினார் என்று தெரியும் அவர் என்ன பேசினார் என்று எனக்கு சொல் என்று ஏலியே சாமுவேலிடம் கேட்டு தெரிந்து கொள்ள வைத்தார் சிறுவனாகிய சாமுவேல் சொல்லி போதகர் தெரிந்துகொள்ள கூடிய அளவில் தேவன் மாற்றும் வல்லமையுள்ளவராக இருக்கிறார் ஒரு சில வசனங்களை வாசித்து பாருங்கள்

உபாகமம் 28:1-2 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

எப்பொழுது தேவன் நம்மை மேன்மையாக வைப்பார் என்றால் கர்த்தருடைய சத்தத்திற்கு உண்மையாக செவி கொடுக்கும்போதுதான் அவர் உன்னை மேன்மையாக வைப்பார்,  தேவன் வாக்குத்தத்தங்களெல்லாம் நமக்காக கொடுத்திருக்கிறார், அது எப்பொழுது பலிக்கும் என்றால் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கும் போது தான் சகல ஜாதிகளிலும் உங்களை மேன்மையாக வைப்பார் இரண்டாவது வசனத்தில் கவனியுங்கள் நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்கள் எல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும் செவிக் கொடுக்கவில்லை என்றால் அவைகள் பலிக்காது வாக்குதத்தங்களில் சொல்லப்பட்டுள்ளது.

உன்னை ஆசீர்வதிப்பேன் கீழாகாமல் மேலாக்குவேன் வாலாக்காமல் தலையாக்குவேன் என்று ஆனால் நாம் ஆசிர்வாதம் இல்லாமல் கீழாகவும் வாலாகவும் இருக்கிறோம் இந்த வாக்குதத்தம் பலிக்கவேண்டும் என்றால் மேலும் சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாம் நிறைவேறவேண்டும் என்றால் அவருடைய வார்த்தைக்கு நாம் சரியாய் செவிகொடுக்க வேண்டும் பலநாளாய் பலியிட்டதெல்லாம் போதும் பலியிடுவதை நிறுத்திவிட்டு பேசும் ஆண்டவரே நான் கேட்கிறேன் என்று சிறுவன் சாமுவேலை போல கேட்கவேண்டும் இதுவரைக்கும் ஏன் உங்களுக்கு ஆசீர்வாதம் இல்லை என்று யோசித்துப் பாருங்கள் உண்மையாய் செவிகொடுக்கிறவனை அவர் மேன்மையாக வைப்பார், அதன் பின்பு இந்த வாக்குதத்தங்கள் எல்லாம் உங்களுக்கு பலிக்க வேண்டும் என்றால் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும் அப்படி செவி கொடுக்கும் போது எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு பலிக்கும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமேன். அல்லேலூயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *