கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவனுடைய பிள்ளைகளுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் டிசம்பர் மாதம் என்றாலே எப்பொழுதும் கிறிஸ்மஸ் செய்தியை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது இந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத செய்தியாக இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்தில் இருந்து புறப்பட்டு என்னிடத்திற்கு வருவார் என்ற செய்தியை வாசிக்கப் போகிறீர்கள்.
இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களில் சாலமோன் ராஜாவை பற்றி ஒரு சில காரியங்களை நாம் வாசிக்க போகிறோம். என்னவென்றால், சாலமோன் ராஜா ராஜாவாகிற போது சிறு பையனாக இருந்தான். அவன் இராஜ்யபாரம் ஏற்றதிலிருந்து 40 ஆண்டுகள் தேசத்திலே யுத்தம் இல்லை எங்கும் சமாதானம் உண்டாயிற்று தேசத்து மக்கள் சமாதானத்தோடு வாழ்ந்து வந்தார்கள். மற்ற தேசத்து மக்களும் சாலமொனின் ஞானத்தை அறிய பொன்னாடும் பொருளோடும் பரிவாரங்களோடும் சாலமோனை காண வந்தார்கள்.
சாலமோன் ராஜா காலத்தில் பொன் ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை. ஏன்னென்றால், அவ்வளவு மிகுதியான பொன்னையும் வெள்ளியையும் கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் அவன் திரளாய் சேகரித்தார் 40 ஆண்டுகள் யுத்தம் இல்லாததினால் மக்கள் எங்கும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அருமையான தேவனுடைய பிள்ளையே சாலமோன் ராஜா காலத்தில் ஜனங்கள் அவன் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் சண்டை இல்லாமல் யுத்தம் இல்லாமல் சமாதானமாகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள்.
சாலமோனிலும் பெரியவர் இயேசு ராஜா சாலமன் காலத்தில் யுத்தம் இல்லை இயேசு ராஜா காலத்தில் யுத்தமே வருவதில்லை இயேசு ராஜா சமாதானத்தின் காரணர் சர்வ வல்லவர் இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணுகிறவர் அவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் அவர் ஆற்றுவதில் ஏற்றுவதில் பாதுகாப்பதில் சுகம் தருவதில் கண்ணீர் துடைப்பதில் அவரை போல ஒரு நல்ல ராஜா எங்கேயும் எப்பொழுதும் காண முடியாது இயேசு ராஜா பாவங்களை தீர்த்தவர் பாவ தோஷத்தை மன்னிக்கிறவர் குற்றங்களை குறைகளை தீர்க்கிறவர்.
உன்னதமானவர் வியாதியிலிருந்து துக்கத்திலிருந்து அவமானத்திலிருந்து வேதனையிலிருந்து நம்மை மீட்டெடுக்கிற மீட்பராகவும் கர்த்தராகவும் இருக்கிறபடியால் அவர் ஆட்சி காலத்தில் எங்கும் சமாதானமும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும் இயேசு ராஜா சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கன்னி மரியாள்யிடத்தில் குழந்தையாக வந்துதித்தார் அவர் வருவதை தீர்க்கதரிசிகள் வேதாகமம் இன்னும் அநேக வான சாஸ்திரம் போன்ற எல்லாவற்றின் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும்,
இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்;
அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. இந்த வேத பகுதியில் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்தலகேமில் இருந்து வருவார் உன்னிடத்தில் இருந்து என்னிடத்திற்கு வருவார் என்று வாசிக்கிறோம்.
எனவே நாம் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் யூதாவில் உள்ள பெத்லகேமில் இருந்து வருவார் என்பதாக இந்தச் செய்தி மூலமாக நாம் வாசிக்க போகிறோம் இஸ்ரவேலை ஆளுகிறவர், ஆளுகிறவர் என்றாலே ராஜா தானே இஸ்ரவேலை ஆளுகிற ராஜா யூதாவில் உள்ள பெத்லகேமில் இருந்து வருவார் என்று மீகா தீர்க்கதரிசி மிக அழகாக எழுதியிருக்கிறார். இஸ்ரவேலை ஆளுகிறவர் வந்தாரா? இல்லையா? என்பது இன்றைக்கு உலகே அறிந்த ஒரு செய்தி சுமார் 2022 ஆண்டுகளுக்கு முன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூதயாவில் உள்ள பெத்தலகேமில் ஒரு சத்திரத்தின் முன்னணியில் ஒரு தொழுவத்தில் பிறந்தார் என்று வேதத்தில் அநேக சான்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த இயேசு கிறிஸ்து ராஜாவாக மீட்பராக கர்த்தாவாக இஸ்ரவேலின் மக்களை மட்டும் அல்லாது உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஆளுகிறவராக ஆளுகை செய்கிறவராக பிறந்தார் அவர் இன்றைக்கும் அனேக ஊர்களிலே தேசங்களிலே நாடுகளிலே அநேக மக்களுடைய இருதய சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளுகை செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆட்சியில் உட்பட்ட மக்கள் சுகத்தோடும் பலத்தோடும் சமாதானத்தோடும் பாதுகாப்போடும் பிசாசுக்கு பயமின்றி வாழ்கின்ற நல்ல ஒரு வாழ்க்கையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிசாசின் கிரியைகளை அழிக்கும் படியாகவே தேவகுமாரனாக இயேசு ராஜா இந்த உலகத்திற்கு வந்தார் பிசாசு ஆதி முதலாய் மக்களை கெடுப்பவனாய் அழிப்பவனாய் மக்களுக்கு சேதத்தை விளைவிக்கிறவனாய் மக்கள் யாவரையும் வருத்தத்திலும் துக்கத்திலும் அவமானத்திலும் கேடான நிலையிலும் தள்ளுகிறவனாக மக்களுடைய சுகத்தை கெடுக்கிறவனாக மக்களுடைய வாழ்வை பாழாக்கிரவனாக இருந்தான் அவனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருந்தபடியால் மக்களுக்கு சுகமான பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும் படியாக பிசாசின் கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவகுமாரனாம் இயேசு ராஜா இந்த உலகத்தில் அவதரித்தார்.
அவர் அன்று மாத்திரம் அல்ல இன்றும் அன்பால் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அவருடைய ஆட்சி அன்பின் ஆட்சி அன்பை மையப்படுத்தம் ஆட்சி அன்பை உறுதிப்படுத்தம் ஆட்சி தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று நம்முடைய வேதம் சொல்லுகிறது.
மத்தேயு 1:21இல் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவார் அவருக்கு இயேசு என்று பெயர் இடுங்கள் ஏனென்றால் அவர் தனது ஜனங்கள் பாவத்தை நீக்கி இரட்சிப்பார் இந்த வசனத்தின் மூலமாக அவர் இரட்சகராக ராஜாவாக ஆளுகிறவராக அதிகாரம் செய்கிறவராக நம் மத்தியிலே வந்தார்.
அவருக்கு எல்லா மகிமையும் உண்டாவதாக இன்னும் மத்தேயு 28 ஆம் அதிகாரத்தில் கடைசி வசனத்தில் வானத்திலும் பூமியிலும் எனக்கு சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிற வேத வசனத்தை கவனித்து வாசித்துப் பாருங்கள் ராஜாக்கள் எங்கேயாகிலும் ஒரு தேசத்தை ஒரு பட்டணத்தை ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வார்கள் என் இயேசு ராஜாவோ வானத்திலும் பூமியிலும் அதிகாரம் செய்கிற ஆட்சி செய்கிற அதிகாரம் பெற்றவராய் காணப்படுகிறார் அவருடைய ஆட்சி பூமிக்கு மாத்திரமல்ல வானத்துக்கும் மேலான ஆட்சியாய் இருக்கிறது.
மேலும் ரோமர் 15:12 மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
இங்கே இந்த வேத பகுதியை கவனித்து வாசியுங்கள் ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படியாக ஒருவர் எழும்புவார் அவரிடத்தில் அவர்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசையா தீர்க்கதரிசி முன்னமே சொல்லியபடி கர்த்தராகிய இயேசு தாவீதின் ஊரிலே பிறந்தார் அவர் இஸ்ரவேலை மாத்திரம் அல்ல புறஜாதியாரையும் ஆளும்படியாக இந்த உலகத்தில் வந்து பிறந்து விட்டார் புறஜாதி என்றால் யூதர் அல்லாத மற்ற எல்லாரையும் குறிக்கிற வார்த்தை புற ஜாதி மக்கள் யூதரை அல்லாத மக்களையும் ஆளுகிற ஒரே தெய்வம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.
யூதர்கள் என்றால் இஸ்ரவேலிலே ஆட்சி செய்பவர்கள் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆனால் இயேசு இஸ்ரவேலை மட்டுமல்ல உலகத்தில் சகல நாடுகளும் அவர் இல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அகில உலகத்தையும் ஆட்சி செய்கிறவராக புறஜாதி மக்கள் அவர் மேல் நம்பிக்கை வைக்கத் தக்க நம்பிக்கையின் நாயகனாக இயேசு ராஜா இந்த உலகத்தில் ஆட்சி செய்யும்படியாக வந்து பிறந்தார்.
ஆதியாகமம் 49:10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
தொடக்கப் புத்தகம் அதாவது முதல் புத்தகமான ஆதியாகம புத்தகத்திலேயே இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி சொல்லி இருக்கிறது. அவர் சமாதான கர்த்தர் என்று சொல்லுகிறது நாம் வாசிக்கிறோம் இதில் சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை நியாயப்பிரமாணிக்கம் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
உலகத்தின் மத்தியிலே பிறந்த இயேசு இன்றைக்கு உலகத்தில் அவர் இல்லாத அவர் அறியாத நாடும் ஊரும் கிராமமும் பட்டணமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவர் அகில உலகத்தையும் ஆண்டு கொண்டு இருக்கிறார் ஆள வந்தார் ஆண்டு கொண்டு இருக்கிறார் அவருக்கே மகிமை உண்டாவதாக.
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை யூதார் ஆட்சி இயேசு கிறிஸ்து வரும் வரை யூதாவின் ஆட்சி இயேசு கிறிஸ்து வந்த உடனே ராஜாவாக செங்கோல் இயேசு ராஜாவின் கைக்கு வந்துவிட்டது இயேசு ராஜாவே இஸ்ரவேலை மாத்திரமல்ல அகில உலகத்தையும் ஆளும்படியான செங்கோல் இயேசு ராஜாவின் கையில் கொடுக்கப்பட்டு விட்டது.
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை,
சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும் வாசிக்கப்பட்ட ஏசையா ஒன்பதாம் அதிகாரம் 6, 7 வசனங்களை நாம் பார்க்கிறோம் அதிலே கர்த்தர் யார் என்றும் இயேசு எப்படிப்பட்டவர் என்றும் ஆறாவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது வசனத்திலே தாவீது உடைய சிங்காசனத்தையும் ராஜ்யத்தையும் திடப்படுத்தி நியாயத்திலும் நீதியிலும் திடப்படுத்தி ஆளுகை செய்வார் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது நாம் வாசிக்கிறோம்.
அவருடைய ஆளுகை அவருடைய ராஜ்ஜியம் நியாயத்திலும் நீதியிலும் நிறைந்த ஆளுகையாய் இருக்கும் அருமையான நீங்களும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவர்களாயிருந்தாள் நீங்களும் நீதியிலும் நியாத்திலும் நடத்தபடுவீர்கள் சற்று நீங்கள் கவனமாய் வாசிப்பீர்கள் ஆனால் இந்த ஏழாவது வசனத்தில் தாவீதின் சிங்காசனத்தை திடப்படுத்தவும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
தாவீது ராஜா சாதாரணமாக ஒரு ஆடு மேய்க்கிற சிறுவனாக வாழ்ந்து கொண்டிருந்தான் அப்படிப்பட்ட அந்த காலத்தில் தன் ஆடுகளை மேய்க்கும் போது அவன் கர்த்தரிடத்தில் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாய் கொண்டிருந்தான். எப்பொழுதும் தேவனைக் குறித்து பாடல் ஏற்றுவதும் பாடுவதும் தேவனை துதிப்பதும் மகிமைப்படுத்துவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
இந்த ஆடு மேய்க்கிற தாவீதை தேவன் அரசனாக்கிப் பார்த்தார் ஆட்சிக்கு வந்த தாவீது இன்னும் கர்த்தருக்கு பயந்து வாழ்கின்றவனாக கர்த்தரை நம்பி வாழ்கிறவனாக கர்த்தருக்காக வாழ்க காணப்பட்டான். ஆனபடியால், இயேசுவும் தாவீதின் வம்சத்திலே யோசேப்புக்கும் கன்னி மரியாளுக்கும் மகனாக வந்து உதித்தார் அவர் தாவீதின் சிங்காசனத்தை மாத்திரமல்ல உலகத்தின் முழு ஆட்சியையும் தாவீதை போல பக்தியாகவும் தேவன் மேல் உள்ள நம்பிக்கையாகவும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
சகரியா 9:9 சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
இதில் சீயோன் குமாரத்தியே களிகூறு எருசலேமின் குமாரித்தியே கெம்பீரி என்று வாசிக்கிறோம். ஏன் சீயோன் குமாரத்தி களிகூற வேண்டும்? ஏன் எருசலேம் குமாரத்தி கெம்பீரிக்க வேண்டும்? உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் என்று வேத வசனத்தில் வாசிக்கிறோம். உன் ராஜா உன்னை ஆளுகிறவர் இந்த கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் நாளிலே கிறிஸ்துராஜா உன்னிடத்தில் வருவார் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா வேதத்தில் அந்த அடுத்த பகுதியை வாசிக்கும் போது அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிரவரும் தாழ்மையுள்ளவருமாய் உன்னிடத்தில் வருவார் என்று எழுதி இருக்கிறது.
அவர் இன்று நீதி உள்ளவராகவும் இரட்சகராகவும் தாழ்மையுள்ளராகவும் இன்றைக்கு உன்னிடத்தில் வந்திருக்கிறார் இந்த கிறிஸ்மஸ் நாளிலே அருமையான தேவப்பிள்ளையே அவர் ஆட்சி நீதி உள்ளதாகவும் இரட்சிக்கிறதாகவும் அதாவது பாதுகாப்பதாகவும் தாழ்மையானதாகவும் பார்க்கிறோம். இயேசுவின் பிறப்பிலே கவனித்து பார்ப்பீர்களானால் அவர் அரசர் மாளிகையில் பிறக்கவில்லை பெரிய மாளிகை போன்ற வீடுகளில் பிறக்கவில்லை தாழ்மையில் பிறந்தார் மாட்டுத் தொழுவோம் தெரிந்து கொண்டார் மேல்போர்க்க கந்தை துணியை ஏற்றார் ஏழ்மையின் கோலம் தரித்தார்.
உலகத்தை ஆள வந்த வேந்தன் செல்வ செழிப்பு நிறைந்த ஆண்டவர் உலகத்தை ஆள வந்த ராஜா ஏழ்மையின் ரூபம் எடுத்தார் தன்னை இந்த அளவுக்கு தாழ்த்தி இந்த உலகத்தில் வந்து இரட்சகராகவும் நீதியை நிறைவேற்றுகிறவராகவும் காணப்பட்டார்.
யோவான் ஸ்தானகன் ஞானஸ்தானம் கொடுக்கின்ற காலத்திலே இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்தானம் எடுக்க சென்றிருந்தார் அப்பொழுது யோவான் ஸ்தானகன் ஆண்ட வரை பார்த்து நான் உம்மாலே ஸ்தானம் பெற வேண்டி இருக்க நீ என்னிடத்தில் வரலாமா? என்று கேட்டான் அதற்கு இயேசு இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்று சொல்லி தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிறவராக இரட்சகராக இரட்சிக்கிறவராக சுகம் அளிக்கிறவராக பாதுகாப்பவராக உயிர்ப்பிக்கிறவராக இன்னும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் போதாத படிக்கு அவர் இஸ்ரவேலை ஆளுகை செய்ய வந்தார் என்பதை இந்த நாளிலே உங்களுக்கு உறுதிப்படுத்த தேவன் எனக்கு கிருபை செய்தபடியால் அவரை நன்றியோடு கூட துதிக்கிறேன்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக கிறிஸ்து பிறந்த மாதத்தில் இயேசு ராஜாவே என்னிடத்தில் வாரும் என்று உள்ளத்தில் ஆழத்திலிருந்து நீ கூப்பிடுவீர்களானால் இன்றைக்கே உன்னை ஆளும் ராஜா உன் இருதயத்தில் வந்து உன்னை ஆளுகை செய்வார் அவருக்கே எல்லா மகிமையும் எல்லா கனமும் எல்லா துதியும் உண்டாவதாக ஆமென்.