ஆவியினால் பிறப்பு | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இம்மாத இதழின் மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நாளிலும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மத்தேயு 1:20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

பிரியமானவர்களே மேற்கண்ட வேதவசனத்தை நாம் வாசித்து தியானிக்கையில் பரிசுத்த ஆவியினாலே குழந்தை உண்டாகுமா? என்ற கேள்வி உங்களுக்கு வரும். நன்றாக கவனியுங்கள் பரிசுத்த ஆவியானவராலே ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை பரிசுத்த ஆவியினாலே எல்லாம் கூடும் பரிசுத்த ஆவியினாலே ஞானத்தை கொடுக்கக் கூடும் பரிசுத்த ஆவியினாலே உனக்கு அறிவையும் புத்தியையும் கொடுக்கக் கூடும் அப்படியானால் பரிசுத்த ஆவியினாலே பிள்ளை உருவாக முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

யாத்திராகமம் 31:5 மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.

பிரியமான தேவ பிள்ளைகளே நமக்கு தேவன் எந்த ஒரு காரியத்தை செய்ய வேண்டுமானாலும் அதற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவசியம் தேவை. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் உங்களாலேயோ அல்லது என்னாலேயோ அல்லது எந்த ஒரு மனுஷனாலேயோ யாராலும் ஒன்றும் செய்ய முடியாது இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மாம்சத்தின்படி வரவேண்டுமானால் புருஷனுடைய சித்தத்தின்படி வரக்கூடாது. அப்படியானால், அவர் பிதாவின் சித்தத்தின்படி தான் வரவேண்டும் அதுவும் பிதாவின் வித்தாக இருக்க வேண்டும்.

லூக்கா 1:34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். 35.தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

பிரியமான தேவ பிள்ளைகளே கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மனுஷனுடைய சித்தத்தினால் வந்தது அல்ல. பரிசுத்த ஆவியின் நிறைவினால் ஏற்பட்ட ஒரு மகிமையான பிறப்புதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாம் இன்று தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிற ஒரே ஒரு காரியம் என்னவென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதே. 

மத்தேயு 1:20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

பிரியமானவர்களே இவ்வசனத்தின் கடைசிப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிற விஷேசித்த காரியம் என்னவென்றால் அவளிடத்தில் உற்பத்தியிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது, சற்று கவனமாக கவனியுங்கள் அருமையான தேவனுடைய பிள்ளைகளே இன்றைக்கு உங்களுக்குள்ளும் உங்கள் இருதயத்திற்குள்ளும் கிறிஸ்து பிறக்கவேண்டுமானால் பரிசுத்த ஆவியானவராலே மாத்திரம்தான் உண்டாக்க முடியும்.

எல்லாவற்றையும் பற்றி யோசிக்கிற யோசனைகளும் எல்லாவற்றையும் பற்றிய ஞானமும் பரிசுத்த ஆவியானவரிடத்தில் மட்டும் தான் உண்டு, நாம் எதைப்பற்றி யோசிப்பதில்லை என்றால் பரிசுத்த ஆவியை பற்றி கொஞ்சம்கூட யோசிப்பதில்லை. அருமையான தேவனுடைய பிள்ளைகளே நீங்கள் ஆராதிக்கின்ற இந்த தேவசபையும்கூட உருவானதே பரிசுத்த ஆவியானவரால் மட்டும் தான்.

அப்போஸ்தலர் 2:2-3 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

இங்கு நன்றாய் கவனியுங்கள் மேற்கண்ட வசனங்களில் நாம் தியானிக்கும் பொழுது பெந்தேகோஸ்தே என்னும் நாள் வந்தது. அப்பொழுது அவர்கள் எல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள் அவரவர் தங்கள் தங்கள் ஜென்ம பாஷையில் பேசினார்கள் ஜென்மம் என்பது இப்பொழுது இருக்கிற ஜென்மம் அல்ல நாம் முன்னே தேவனோடு வாழ்ந்து கொண்டிருந்த ஜென்மம் நாம் தேவனிடத்திலிருந்து வந்தோம். இப்பொழுது நாம் பூமியிலே வாழ்கிறோம் திரும்ப தேவனிடத்தில் போகப்போகிறோம் மீண்டும் திரும்பி வருவோம் ஆயிரம் வருட அரசாட்சி செய்வோம் ஆயிரம் வருட அரசாட்சியில் பிரதமரோ முதலமைச்சரோ தலைவரோ எம்பியோ எம்எல்ஏக்களோ  கவுன்சிலரோ அங்கே இல்லை.

நீங்களும் நானும்தான் இந்த உலகத்தை ஆளுகை செய்யப்போகிறோம், இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரை பெற்ற தேவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிற தேவனுடைய பிள்ளைகள் எல்லோரும் ஆளப் போகிறார்கள் இன்றைய நாட்களில் பரிசுத்த ஆவியை குறித்து எண்ணமோ அதை பற்றி யோசனையோ அநேகருக்கு இல்லை பரிசுத்த ஆவியை பற்றிய புரிந்து கொள்ளுதல் இல்லாமல் பரிசுத்த ஆவியானவரை சிலர் அலட்சியப்படுத்துகிறார்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள விரும்புகிறதும் இல்லை வேகமாக கை தட்டினால் பரிசுத்த ஆவியானவர் இறங்குவார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். விருப்பமில்லாத உங்கள் மேல் தேவன் வந்து இறங்கவேமாட்டார் என்று வேத வசனம் தெளிவாக சொல்லுகிறது.

அப்போஸ்தலர் 2:1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

இதை நன்றாக கவனியுங்கள் அவர்கள் எல்லோரும் ஒரு மனபட்டார்கள் தேவ ஆவியானவர் என்மேல் வந்திறங்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே மனதாக மாறிவிட்டார்கள். பின்பு ஓரிடத்தில் கூடி வந்தார்கள் அந்த சமயத்தில் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு முழக்கம் உண்டாக அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே இயேசுகிறிஸ்து பிறக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் பிறக்க முடியாது இன்றைக்கு அநேகர் செய்கின்ற தவறு என்னவென்றால் புத்தாடை அணிந்துகொண்டால் இயேசு பிறந்து விடுவார் பாரம்பரியமாய் சபைக்கு செல்வதால் இயேசு பிறந்துவிடுவார் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொன்னால் இயேசு பிறந்து விடுவார் என்ற தவறான எண்ணம் அநேகரிடத்திலே ஆழமாக தேங்கிப்போய் இருக்கிறது. அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் பரிசுத்த ஆவியினால் தான் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு நடக்கும் பரிசுத்த ஆவியானவர் இறங்காமல் பரிசுத்த ஆவியின் நிறைவு இல்லாமல் இயேசுவின் பிறப்பு இல்லை மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் இருந்தது யோசேப்புக்கு தெரியவந்தது நாம் திருமணம் செய்யலாம் என்று நினைத்த இந்தப் பெண் ஏற்கனவே கர்ப்பமாக இருக்கிறாளே இவளை எப்படி திருமணம் செய்வது என்று யோசனை வருகிறது. அதே வேளையில் யோசேப்பு நல்லவராக இருந்தபடியினால் யாருக்கும் தெரியாமல் இவளை வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று யோசிக்கிறார் அன்று ராத்திரியிலே தேவதூதன் சொப்பனத்தில் அனுப்பப்படுகிறார் தேவதூதன் யோசேப்பை நோக்கி தாவீதின் குமாரனாகிய யோசேப்பே மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, இவள் விபச்சாரத்தினால் கர்ப்பம் தரிக்க வில்லை பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரித்திருக்ககிறாள் என்று சொன்னார்.

பரிசுத்த ஆவியினாலே இந்த காரியம் உண்டாயிற்று மனுஷனுடைய வேசித்தனத்தினாலல்ல இது பரிசுத்த ஆவியினாலே உண்டாயிற்று. அருமையான தேவனுடைய பிள்ளைகளே இன்றைக்கு அநேக தேவபிள்ளைகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரை காணமுடியவில்லை பரிசுத்த ஆவி இல்லாமல் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளாமல் இயேசுவைப் பெற்றுக்கொள்வது கூடாத காரியம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டால்தான் இயேசுவை பெற்றுக்கொள்ளமுடியும் இயேசுவை பெற்றுக் கொண்டால்தான் அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும் அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தேவநீதியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

முதலாவது சுவிஷேசம் கேட்க வேண்டும் பின்பு விசுவாசிக்க வேண்டும் அதன்பின்பு பின்பற்ற வேண்டும் அப்படி பின்பற்றும் போதுதான் பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்படுகிறார். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்ட பின்புதான் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் ஞானஸ்தானம் எடுக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அநேகர் நினைப்பது முதலில் ஞானஸ்தானம் அதன்பின்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று இல்லவே இல்லை வேதாகமத்தில் பரிசுத்த ஆவியை பெற்ற அநேகர் அதன் பின்பு கூட ஞானஸ்தானம் எடுத்து இருக்கிறார்கள்.

எப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களோ அப்பொழுதே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர்கள் மேல் ஊற்றப்பட்டுவிடுகிறது. பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பிறகுதான் ஞானஸ்தானம் எடுத்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது இயேசு கிறிஸ்துவை பார்த்தால் அவர் ஞானஸ்நானம் எடுத்து கரையேறின உடனே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்.

அநேகர் ஞானஸ்தானம் எடுத்து இத்தனை வருடம் காத்திருந்தால் தான் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் மேல் வரும் என்று சொல்வது சரியான விளக்கம்மல்ல சரியான கருத்தும்மல்ல இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் உண்டானார். இயேசுகிறிஸ்து முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்து அதே நேரத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்.மேலும் 

மத்தேயு 3:13-16 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

அருமையான தேவபிள்ளைகளே புறா வடிவத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் வந்து அமர்ந்தார் என்று வாசிக்கிறோம். இன்றைய நாட்களில் புறாவைப் பறக்க விட்டு பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்துவிட்டார் என்று நினைக்கிறார்கள் அது தவறானது கவனியுங்கள் பரிசுத்த ஆவியானவர் எப்படி இருந்தார் என்றால் புறா ரூபத்தில் இருந்தார் புறா பறந்து வந்து அமர்வது போல் இருந்தது என்பதுதான் அர்த்தம்.

அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது அந்த ரூபம் எப்படி இருந்ததென்றால் புறா பறந்து வந்து அமர்வது போல் இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது அருமையான தேவனுடைய பிள்ளைகளே இயேசு தான் நமக்கு முன்மாதிரி இயேசு கிறிஸ்துவை தான் பின்பற்றவேண்டும் இந்த இயேசுகிறிஸ்து உங்களுக்குள்ளே பிறக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் அவசியம் தேவையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியினால் நிரம்பி விடும்போது இயேசுகிறிஸ்து உங்களோடுகூட இருக்கிறார். இந்த இயேசுகிறிஸ்து உங்களுக்குள்ளே வந்துவிட்டால் விடுதலை கிடைக்கிறது சமாதானம் கிடைக்கிறது சுகம் கிடைக்கிறது அற்புதம் நடக்கிறது அதிசயம் நடக்கிறது நீங்கள் எதிர்பாராத காரியம் எல்லாம் நடக்கிறது மேலும்,

மத்தேயு 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

பிரியமானவர்களே நன்றாய் கவனியுங்கள் இங்கே தமது ஜனம் என்று சொல்லப்பட்டுள்ளது தமது ஜனம் யாரென்றால் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட அனைவரும் தேவனுடைய ஜனங்கள் ஆகமாறி விடுகிறார்கள். அனேகர் மரிக்கிற வரைக்கும் பரிசுத்த ஆவி என்றால் என்னவென்று தெரியாமல் மரிக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் கட்டாயம் பரலோகம் போகவே முடியாது. வேதம் சொல்லுகிறது

யோவான் 3:1-5 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

கவனமாக கவனியுங்கள் இயேசு கிறிஸ்து நிக்கொதேமுவிடம் சொல்லுகிறார் மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்றார் யார் தேவராஜ்ஜியத்தில் போகமாட்டான் என்று சொன்னால் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாதவர்கள் கட்டாயம் போகமாட்டார்கள்.

ஞானஸ்நானம் எடுத்தால் மட்டும்போதும் பரலோகம் சென்றுவிடலாம் என்று இன்றைக்கும் அநேகர் அநேக கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஞானஸ்நானம் என்பது ஒரு வழி மட்டும்தான் ஆனால் பரிசுத்த ஆவிதான் மிகவும் முக்கியமானது பரிசுத்தஆவியைப் பெறாமல் இயேசு கிறிஸ்துவை பெற்றுக்கொள்ளமுடியாது இயேசு கிறிஸ்துவை பெற்றுக்கொள்ளாமல் நீங்கள் எந்த ஒரு விடுதலையும் சுகமும் பெற்றுக்கொள்ள முடியாது. நன்றாக கவனியுங்கள் வேதம் கூறுகிறது. ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி நம்மை இரட்சிப்பார் என்று பாவங்கள் நீக்கப்பட வேண்டும்.

ஆனால், இயேசுகிறிஸ்து உங்களுக்குள்ளே வரவேண்டும் இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வராமல் பாவம் ஒழிந்துபோயிற்று என்று சொன்னாள் அது போகவேபோகாது பாவம் போனதுபோல நடிக்கலாமே தவிர பாவம் போகாது அதேபோலதான் அநேக கிறிஸ்தவர்கள் விசுவாசிகள் தேவபிள்ளைகள் நடிப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களுக்கு சொல்கிறேன் இந்த நடிப்பு மனுஷரிடத்தில் மட்டும்தான் செல்லுமே தவிர தேவனிடத்தில் செல்லவே செல்லாது. ஏன் தெரியுமா அவருக்கு மாத்திரம்தான் நம்முடைய உள்ளம் தெரியும் அவருக்கு மறைவாக நம்மிடத்தில் எதுவுமில்லை.

மத்தேயு 1:22-23 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.

அருமையானவர்களே இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றி அவர் எப்படி பிறக்கப்போகிறார் என்பதையும் கன்னிகையின் வயிற்றில்தான் பிறக்கப்போகிறார் என்பதையும் புருஷனையும் அறியாமல் பிறக்கப்போகிறார் என்பதையும் ஒரு தீட்டும் படாமல் பிறக்கப்போகிறார் என்பதையும் பரிசுத்த ஆவியினால் தான் பிறக்கப்போகிறார் என்பதையும் இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறக்கும் முன்னமே சுமார் 700 வருடத்திற்கு முன்பே வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி மூலமாக சொல்லிவிட்டார்.

ஏசாயா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

இங்கு சொல்லப்பட்டதை கவனமாக கவனிப்பீர்களென்றால் இது எப்பொழுது சொல்லப்பட்டதென்றால் சுமார் 700 வருடத்திற்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் உரைக்கப்பட்டது 700 வருஷத்திற்கு பின்பு யோசேப்பின் வம்சத்தில் இயேசு கிறிஸ்து வந்து பிறந்தார்.

ஏற்கனவே இயேசுகிறிஸ்து எந்த வம்சத்தில் பிறப்பார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசி முன்பே சொல்லி இருக்கிறார் அந்தப் பிரகாரமாகவே இயேசுகிறிஸ்து சுமார் 700 வருடங்களுக்குப் பின்பு தீர்க்கதரிசி சொன்னபடியே இயேசு கிறிஸ்து வந்து பிறந்தார் அப்படியானால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது உங்களுக்குள்ளே எப்பொழுது ஞானஸ்தானம் எடுத்தீர்களோ அப்பொழுதே பரிசுத்த ஆவியானவரின் முத்திரையும் போடப்பட்டாயிற்று.

எபேசியர் 1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

பிரியமானவர்களே நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் முத்திரை போடப்பட்டு இருக்கிறீர்கள் ஆனால் அந்த முத்திரை இன்னும் பயன்படுத்தப்படவில்லை அப்படியானால் தேவனுடைய பிள்ளைகளே உங்களுக்குள்ளே அடையாளமாக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே பயன்படுத்த வேண்டும். எங்கே போனாலும் பரிசுத்த ஆவியை பெற்றவர்களாக காண்பித்து கொள்ளுங்கள் அந்நிய பாஷை என்பது ஒரு பாஷை அது மனுஷனுக்கு புரியாது தேவனோடு பேசும் பாஷை அதைத்தான் 1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அது தேவனோடு கூட பேசுகிற பாஷை ஆகையினாலே நீங்கள் அதை கண்ட இடத்தில் பேசாமல் தேவனோடு கூட மாத்திரம் பேச பயன்படுத்துங்கள் நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் முத்திரையை பயன்படுத்த வேண்டும் நீங்கள் சாதாரண மனுஷனாக காட்டாதீர்கள் நாங்களும் பல வேலைக்காக பல இடங்களுக்கு போகும் போது எங்களுக்குள்ளே இருக்கிற அந்த அபிஷேகத்தை காண்கிறவர்கள். அதினாலே அதற்குரிய மரியாதையை எங்களுக்கு கொடுக்கிறார்கள் ஒரு வருடத்திற்கு முன்பு நான் கலெக்டர் அலுவலகத்திற்கு போயிருந்தேன் அப்போது கலெக்டர் என்னை உட்கார வைத்து நன்றாக பேசினார் பக்கத்திலே ஒரு கட்சித்தலைவர் நின்று கொண்டு இருக்கிறார்.

ஆனால், கலெக்டர் என்னை விசாரித்து உட்காரவைத்து மரியாதையாக பேசி முடித்து அனுப்பினார் கட்சிகாரரை காட்டிலும் நான் பெரியவரா என்று பார்த்தால் எதிலுமே நான் பெரியவன் அல்ல. ஆனால், இது எப்படியென்றால் அதுதான் பரிசுத்த ஆவியானவரின் அடையாளம் அருமையான தேவனுடைய பிள்ளைகளே பரிசுத்த ஆவியானவரை நீங்களும் பயன்படுத்த வேண்டும்.

நெகேமியா 9:30 நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.

நன்றாக கவனியுங்கள் அன்றைக்கு தீர்க்கதரிசனம் சொன்னவர்களெல்லாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து சொன்னார்கள் இன்றைக்கு அநேகர் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் அதெல்லாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படாத தீர்க்கதரிசனமாக காணப்படுகிறது. ஆகையினால் அது பொய் தீர்க்கதரிசனம் ஆகிவிடுகிறது தீர்க்கதரிசன வரம் பெற்றவராக இருந்தாலும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர் தான் சரியான தீர்க்கதரிசனம் சொல்ல முடியும்.

மாற்கு 1:8 நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.

இறுதியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை இயேசு கிறிஸ்துவால் மாத்திரமே கொடுக்கமுடியும். ஆகவே ஞானஸ்தானமும் முக்கியம் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் முக்கியம் கர்த்தருடைய வேதவசனமும் முக்கியம் ஆகையால் நாம் தேவனுடைய பிள்ளை என்று சொல்லிக்கொள்வதோ தீர்க்கதரிசனம் சொல்லுவதோ பெரிதல்ல பரிசுத்த ஞானஸ்தானம் பெற்றுவிட்டதும் பெரிய காரியமல்ல எல்லாவற்றுக்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரை பெற்று கொண்டு அபிஷேகம்பண்ணபட்டு இயேசு கிறிஸ்துவுக்குள்ளே வாழ்ந்து நிலைத்திருப்பது தான் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் மிக முக்கியம் என்பதை இந்த கிறிஸ்மஸ் நன்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசீர்வதிக்கிறேன் கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *