அடையாளங்கள் | Rev. B.E. Samuel

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே சாரோனின் ரோஜா ஊழியத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் உலகில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்ட பிறகு அவர்களுக்குள் இருக்கவேண்டிய இரட்சிப்பின் அடையாளங்களை குறித்து இந்த நாளில் நாம் பார்க்கப் போகிறோம்.

மத்தேயு 12:43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44. நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, 45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும், அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும், அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்

                 ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் பிறக்கும்பொழுதே பொறாமைக் கேடுபாடு அசுத்தம் போன்றவைகளால் நிறைந்து பிறப்பதில்லை வளர வளரத்தான் அசுத்தங்களும் கேடுகளும் கோபங்களும்  பொறாமைகளும் வருகின்றன ஏனென்றால் அவர்களை ஆளுகை செய்வது பிசாசானவனாயிருக்கிறான் அநேகர் நினைப்பது பிசாசு பிடித்தால் தலையை ஆட்டி ஆட்டி ஆட்டம் காட்டினால்தான் பிசாசு உள்ளே இருக்கிறான் என்று நம்புகிறார்கள் இது சரியான அர்த்தமல்ல  மனுஷனுடைய இருதயத்திலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்று வேதம் சொல்கிறது அவைகள் இருதயத்திற்குள் காணப்படுகிறது.

சிலருக்கு அது வெளிப்படையாக வெளிப்பட்டு அலைகழிக்கும் சிலருக்கு அது வெளிப்படாமல் மறைவாக காணப்படும் அந்த  இருதயத்தில் இயேசுகிறிஸ்து உள்ளே வரும்போது பிசாசின் கிரியைகள் எல்லாம் வெளியேறிப் போய் விடுகிறது பிசாசின் கிரியைகள் வெளியேறினவுடனே நாம் என்ன செய்கிறோம் என்றால் இயேசுவையும் கூட வெளியே அனுப்பிவிடுகிறோம் நன்றாக அறிந்து கொள்ளுங்கள் அசுத்தம் நிறைந்த ஓர் இருதயத்திற்குள் இயேசுவை அழைத்து இயேசுவே என்னை சுத்தமாக்கும் என்று சொல்கிறீர்கள். உடனே அவரும் உள்ளே வந்து சுத்தமாக்குகிறார்,

எப்படியென்றால் பிசாசின் கிரியைகளை அழிக்க வேண்டியவைகளை அழித்து துரத்த வேண்டியவைகளை துரத்தி விரட்ட வேண்டியவைகளை விரட்டி வெட்ட வேண்டியவைகள் எல்லாம் வெட்டி எல்லாவற்றையும் சீர்படுத்துகிறார் அப்படியாக இருதயத்தை சுத்தமாக்கி அலங்கரிக்கின்றார் அலங்காரம் செய்த உடனே நாம் என்ன செய்கிறோம் ஆண்டவரே நீங்களும் என்னை விட்டு போய் விடுங்கள் இப்பொழுது நீங்கள் எனக்கு அவசியபடவில்லை எங்களால் உங்களை வைத்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறோம்.

ஆண்டவரை இருதயத்திலிருந்து வெளியே அனுப்பி விடுகிறோம் நன்றாக கவனியுங்கள் இயேசு எப்பொழுது வெளியேறிபோகிறாரோ அப்பொழுது முதலாவது நம்மை விட்டுப் போன பிசாசு பாவம் சாபம் மந்திரம் சூனியம் தரித்திரம் வறுமை எல்லாம்  சுற்றி சுற்றி அலைந்து திரிந்து பார்த்துவிட்டு எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை இடமில்லாததால் திரும்பியும் முன்பு நாம் இருந்த அந்த இடத்திற்கே போய் பார்த்துவிட்டு வருவோம் என்று வருகிறது வந்து பார்த்தால் இருதயமாகிய வீடு வெறுமையாக காணப்படுகிறது அதுவும் பெறுக்கி ஜோடிக்கப்பட்டு அழகாக காணப்படுகிறதே  இனிமேல் நான் மட்டும் இருந்தால் அது நன்றாக இருக்காது என்று போய் தன்னிலும் ஏழு மடங்கு வலிமையான பொல்லாத ஆவிகளை கூட்டிக்கொண்டு வந்து உட்புகுந்து அந்த இருதயத்தை சிறையாக்கி முன்பு இருந்த நிலைமையிலும் மிகுந்த கேடான நிலைக்கு கொண்டுபோய்விடும்.

பிசாசை பொருத்தவரையில் அவனை உள்ளே வா என்று அழைக்க வேண்டிய அவசியமே இல்லை அவன் திறந்த வீட்டில்  நுழைகிற பிராணியை போல தானாகவே அனுமதி கேட்காமல் உள்ளே வருவான் இருதயம் வெறுமையாக இருந்தால் மாத்திரம் போதும் தானாக பிசாசு புகுந்து கொள்ளும் அதுமட்டுமல்லாமல் தன்னைவிட ஏழு மடங்கு பொல்லாத ஆவிகளை சேர்த்துக்கொண்டு குடியேறும் அப்படி குடியேறும் போது என்ன நடக்கும் என்றால் அவர்கள் முன்பு இருந்ததைவிட இப்பொழுது மிகவும் அதிகமாக அலைகழிக்கப்படுவார்கள் முன்பு அவனுக்குள் இருந்த ஒரு ஆவியை காட்டிலும் இப்போது எட்டு ஆவிகள் அவனுக்குள் நுழைவதினால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

               அப்படியானால் உங்கள் இருதயம் இரட்சிக்கப்பட்டதற்கான அடையாளங்களை பெற்றிருக்க வேண்டும் என்ன அடையாளங்கள் என்று இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். நீங்கள் இரட்சிக்கபட்டிருக்கிறீர்களா அப்படியில்லை என்றால் நீங்களே உங்களை மதிப்பிட்டு பாருங்கள் நான் ஒரு பத்து காரியங்களை சொல்லப்போகிறேன் அதற்கு யார் யார் பத்துக்கு பத்து மதிப்பெண் எடுக்கிறீர்களோ அவர்கள் தான் உண்மையாய் இரட்சிக்கப்பட்டவர்கள்.

ஏதாவது ஒன்றில் குறைந்தால் கூட அதை சரி செய்ய கூடிய கட்டாயம் உங்களுக்கு உண்டு என்று அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக நான் உங்களை குற்றவாளியாக தீர்க்கப் போவதில்லை எல்லாரும் குறையுள்ளவர்கள் தான் கர்த்தர் ஒருவர்தான் நீதிபதி இந்த பத்து காரியங்களும் இரட்சிக்கப்பட்டதற்கான அடையாளம் தான் உங்களிடம் முதலில் சொன்னது போல பிசாசானது ஒருவருக்குள்ளே இருந்துகொண்டு வெளிப்படும் ஒரு சிலருக்கு வெளிப்படையாக தெரியாது உள்ளேயே இருந்து கொண்டு வியாதியைக் கொடுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கும் தரித்திரத்தை கொடுக்கும் அவமானத்தை கொடுக்கும் சண்டையை கொண்டுவரும் கொலை செய்கிற ஆவி சபிக்கிற ஆவி தர்மஅடி வாங்கவைக்கும் ஆவி இவையெல்லாம் தான் பிசாசு செய்கிற வேலை.  

இப்படியாக காணப்படும் சிலர் எப்போது பார்த்தாலும் யாரையாவது சபித்துக் கொண்டே இருப்பார்கள் அதேபோல அங்கலாய்க்கிற ஆவி இப்படி ஏதாவது உங்களுக்குள் இருக்குமென்றால் அதை விட்டு நீங்கள் வெளியே வந்துவிடுங்கள் இன்றைக்கு நான் சொல்ல போகிற காரியம் என்னவென்றால்? நீங்கள் இரட்சிக்கப்பட்டதற்கான அடையாளம் நான் உங்களுக்குச் சொன்னது போல ஒருவருக்குள் அசுத்த ஆவி  இருக்கும் போது இயேசுநாதரை உள்ளே அழைக்கும் போது அவர் வந்து பிசாசை வெளியே விரட்டிவிடுகிறார். உடனே நாம் என்ன செய்கிறோம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் முழுகி கழுவப்பட்டு ஞானஸ்நானம் எடுத்து சுத்தம் ஆகிவிடுகிறோம். அதற்கு அடுத்தது என்ன செய்ய வேண்டும் தூய்மை ஆக்கப்பட்ட இருதயமாகி அந்த வீட்டில் வேறு ஒருவரை குடியேறச்செய்ய வேண்டும் அவர் யார் என்றால் அவர்தான் பரிசுத்த ஆவியானவர் அவரை குடியேற செய்ய வேண்டும் அதைத்தான் வேதாகமத்தில்

அப்போஸ்தலர் 19:2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 

               நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் விசுவாசிகளான உடனே பரிசுத்த ஆவியை அழைத்து உங்கள் வீடாகிய இருதயத்தில் குடியிருக்க செய்ய வேண்டும் உங்கள் இருதயத்தை ஆளுகிறவர் யாராக இருக்க வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியானவராகத்தான் இருக்கவேண்டும் பரிசுத்த ஆவியானவர் இருந்தாரானால் உங்கள் வாழ்க்கையிலே சோர்வுகள் காணப்படாது உங்கள் வாழ்க்கையில் வியாதிகள் வரும் அதை தாங்கக்கூடிய பெலனும் அவர் தருவார் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் திடமாய் இருப்பீர்கள் உங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்கிற ஒரு வைராக்கியம் உங்களுக்கு உண்டாகும் ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் வந்தால் மட்டும்தான் இதை செய்யமுடியும்

யோவான் 16:7:8

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்

              இந்த வசனத்தை நாம் வாசிக்கும்போது இப்போது பரிசுத்த ஆவியானவர் வந்தால்தான் நியாயத்தீர்ப்பு காணப்படும்.  பரிசுத்த ஆவியானவர் வந்தால் தான் பாவம் நமக்குள் வராது பரிசுத்த ஆவியானவர் வந்தால்தான் நாம் பரிசுத்தமாய் காணப்படுவோம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதினால் நம்முடைய பாவங்கள் எல்லாம் சுத்தமாகிவிட்டன இப்பொழுது பரிசுத்த ஆவியை நமக்குள் பெற்று அவரைப் பற்றிக் கொண்டுடிருக்கிறோம். நன்றாக கவனியுங்கள் பரிசுத்த ஆவி தான் நமக்குள் பிடித்திருக்கிறது அசுத்த ஆவி அல்ல பரிசுத்த ஆவி எனக்குள் பிடித்திருக்கிறது எனக்கு அவரை பிடித்ததினாலும் அவருக்கு என்னை பிடித்ததினாலும் இருவருக்கும் பிடித்திருக்கிறதின் அடையாளமாக தான் அன்னிய பாஷைகொடுத்திருக்கிறார்.

அவர் எனக்குள் இருக்கும் போது நான் அந்நிய பாஷைகளைப் பேசுவேன் ஆனால் விசுவாசிகள் சிலர் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் தொடர்ந்து சபையை ஏமாற்றுகிறார்கள் பரிசுத்த ஆவியானவரை ஏமாற்றுகிறார்கள் இயேசுநாதரையும் ஏமாற்றுகிறார்கள், பரிசுத்த ஆவியானவர் வரும்போது தான் அந்நிய பாஷை பேச வேண்டும் ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் அந்நிய பாஷை பேசுவார்கள் எப்பொழுது பேச வேண்டும் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்நிய பாஷை பேச வேண்டும் அபிஷேகம் இறங்கினால் மட்டும்தான் அந்நியபாஷை பேச வேண்டும் பரிசுத்த ஆவியானவர் இறங்காமல் பேசினாள் அது அந்நியபாஷையல்ல நீங்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்றால் மனுஷரையல்ல பரிசுத்த ஆவியை தந்த ஆண்டவரையே ஏமாற்றுகிறரீர்கள்.

ஒருநாள் பரலோகத்திற்கு போனீர்களானால் ஆண்டவர் அவர்களை பார்த்து நீ தானே அபிஷேகம் பெறாமலேயே அந்நியபாஷை பேசினவன் என்று சொல்லி கழுத்தை பிடித்து ஏறி நரகத்தில் தள்ளி விடுவார். ஆகையால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒருவரை பிசாசு பிடித்தால் அவர்கள் ஒரு மாதிரியாக பேசுவார்கள் அதைத்தான் சிலர் லாடபாஷை என்பார்கள்.  ஆனால், பரிசுத்த ஆவியானவர் நிரப்பினால் அந்நியபாஷை வரும் இதை நாம் பரியாசத்திற்காகவோ வேடிக்கைக்காகவோ பயன்படுத்தக்கூடாது மாறாக வாழ்க்கையில் பரிசுத்த ஜீவியத்திலே உங்களை முன்னேற செய்வதற்காகத்தான் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் இருக்க வேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் இல்லை என்றால் அது பெருக்கி ஜோடிக்கப்பட்டு அலங்காரமாக காணப்படும் அப்பொழுது ஏற்கனவே நம்மை விட்டுப் போன அந்த அசுத்த ஆவிகள் சுற்றித்திரிந்து பார்த்து எங்கேயும் இடமில்லாமல் மறுபடியும் அதே இருதயமாகிய வீட்டைப் பார்வையிட வரும் போது அது மிகவும் அலங்காரமாக காணப்படுமானால் உடனடியாக அதிலே குடியேறுவதற்கு நான் மாத்திரமல்ல தன்னிலும் ஏழு மடங்கு பொல்லாத ஆவிகளை கூட்டிக்கொண்டு வந்து அவர்களுடைய வாழ்க்கையில் இறங்கி அவர்களை நாசமாக்கி போடும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ எப்படியெல்லாம் அவர்களை அழிக்க முடியுமோ நாசப்படுத்தமுடியுமோ அப்படியெல்லாம் செய்யும் ஊர் ஊராக சபை சபையாக சுற்றித் திரிவார்கள் அப்படி சுற்றித்திரிந்தும் விடுதலையாக மாட்டார்கள் விடுதலை ஆகாமல் இருப்பதற்கு காரணம் இயேசுநாதரோ சபை போதகரோ சபையோ இல்லை அவர்கள் தான் காரணம் ஏனென்றால் வீடு சுத்தமாக்கி பெருக்கி ஜோடிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் வெறுமையாக அந்த வீட்டை விட்டு விட்டார்கள். அதனால் அந்த பொல்லாத ஆவி குடியேறிவிட்டான் இப்பொழுது ஒன்றாக வரவில்லை தன்னை விட மோசமான ஏழு மடங்கு பொல்லாத ஆவிகளை அவனுக்குள் நுழைந்து முன்பைவிட அவர்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக கேடுள்ளதாக மாற்றிவிட்டது. அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்? வீடாகிய இருதயத்தை இயேசு சுத்தம் செய்த உடனே பரிசுத்த ஆவியை உங்களுக்குள் அனுப்புகிறார். அப்பொழுது உங்களுக்குள் யார் இருக்க வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியானவர் இருக்க வேண்டும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்தால் அசுத்தங்கள் உங்களை விட்டு நீங்கிவிடும் இப்பொழுது பத்து அடையாளங்களை நான் உங்களுக்கு எழுதப் போகிறேன் எவ்வளவு சுருக்கமாக எழுத முடியுமோ அவ்வளவு சுருக்கமாக எழுதிமுடிக்க விரும்புகிறேன் 

முதலாவது அடையாளம் தேவ அன்பினால் நிரப்பப்படும்

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாதுரோமர் 5:5

       இரட்சிக்கப்பட்ட இருதயம் எப்படி இருக்குமென்றால் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்திற்குள் வந்து அதை தேவ அன்பினால் நிரப்புகிறார். அது என்ன அன்பு என்றால் லௌகீக அன்பு அல்ல மாம்சீக அன்பல்ல காதலின் அன்பல்ல அது தேவாதிதேவனின் அன்பு பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருப்பதினால் உங்கள் இருதயம் இரட்சிக்கப்பட்ட இருதயமாக மாறுகிறது அதற்கு முதல் அடையாளமாக காணப்படுவது.

தேவ அன்பு எப்படி இருக்கும் என்றால் நீ உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது உதாரணமாக ஒரு குழந்தையானது தன் தாய் மேல் ஏறிக்கொண்டு குதிப்பதும் தாயை  கிள்ளுவதுமான இப்படிப்பட்டவைகள் எதை செய்தாலும் அந்தத் தாய் அமைதியாக சகித்துக் கொள்கிறார்கள். ஆனால், அதுவே பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பிள்ளை அப்படி செய்யும்போது அந்த தாய் கோபப்படுவார்களானால் அவர்களிடத்தில் காணப்படாத விஷயம் தேவ அன்பு இல்லை என்பதுதான்.

 அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? பக்கத்து வீட்டிலுள்ள பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதே போல முதலாவது உங்கள் பிள்ளைகளை நீங்கள் வளர்க்கவேண்டும். பிள்ளைகள் என்றால் தாய் தகப்பனாருக்கு கனத்தை கொடுக்க வேண்டும் தேவ அன்பு உங்களுக்குள் இருந்தால் உங்களை எப்படி நேசிக்கிறீர்களோ அதேபோல மற்றவர்களையும் நேசிப்பீர்கள்.

இரண்டாவதான அடையாளம் பரிசுத்த  ஆவியினால் நடத்தபடுதல்

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

மேற்கண்ட வசனத்தின்படி  தேவ ஆவியானவரால் நீங்கள் நடத்தப்பட வேண்டும் இதுதான் இரண்டாவது அடையாளம் இதற்கு முன்பாக யார் உங்களை நடத்திகொண்டிருந்தது என்றால்? மாம்சம் நடத்தினது எப்படி நடத்தினதென்றால் கண்பார்க்கும் மனதுயோசிக்கும் என்றால் போய்க்கொண்டே இருப்போம். ஆனால், நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால ஆவிக்குரிய வாழ்க்கையில் யார் உங்களை நடத்துகிறார்கள். ஆவியானவர் உங்களை நடத்துவாரானால் ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சோதித்துப்பார்த்துதான் உங்களை நடத்துவார் ஆவியானவர் என்னை நடத்திய விதத்தை உங்களுக்கு சொல்கிறேன்.

ஒரு நாள் சென்னைக்கு போக புறப்பட்டேன் யாரோ ஒருவர் போகாதபடிக்கு எனக்குள் இருந்து என்னைத் தடுத்துக் கொண்டிருந்ததுபோல் இருந்தது, அதற்கு பின்பு அதையும் மீறி ஐந்து கிலோமீட்டர்  வரைக்கும் போய் திரும்பி வந்துவிட்டேன் வீட்டிலிருந்து மறுபடியும் புறப்பட்டு போகிறேன் பதினைந்து கிலோமீட்டர் வரை போய் மறுபடியும் திரும்பி வந்துவிட்டேன். அதோடு நான் நின்று இருக்கவேண்டும் தேவன் என்னை தடுக்கிறார் நீ போகவேண்டிய நீ பார்க்கவேண்டிய நபர் இல்லை என்று போகாதே போகாதே என்று தடுக்கிறார். ஆனாலும், என் மாம்சம் சொல்கிறது அவர் சொல்வதையெல்லாம் நீ கேட்காதே நீ போ நீ போ என்று சொல்கிறது. அதை மீறி நான் போனேன் நான் பார்க்கப்போன போதகர் டெல்லிக்குப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது என்று சொன்னார்கள் அப்பொழுது என்ன நடந்தது என்றால் ஆவியானவர் என்னை சரியாகதான் நடத்தினார் மாம்சத்தின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து அவமானப்பட்டு வந்தேன் ஆகவே பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்கு நாம் இடம்கொடுக்க வேண்டும்.

மூன்றாவது அடையாளம் ஆவியானவர் சாட்சி கொடுக்கும் வாழ்க்கை

ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்

பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவனுடைய பிள்ளை என்று சாட்சி கொடுக்கவேண்டும். இன்றைய நாட்களில் அநேகருடைய எண்ணம் போதகர் என்னை புகழ்ந்து பேச வேண்டும் அனைவரும் என்னை புகழ்ந்து பேச வேண்டும் என்று  நினைப்பதினால்தான் அவர்கள் இன்னும் இரட்சிக்கபடாமல் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மனுஷனுடைய புகழ்ச்சியை விரும்புகிறார்கள் பரிசுத்த ஆவியை விரும்புகிறவர்கள் தேவன் தான் என்னை கனப்படுத்த வேண்டும் என்று விரும்பவேண்டும் பரிசுத்த ஆவியானவர் இவர்கள் நல்லவர்கள் என்று சாட்சி கொடுக்க வேண்டும் நீங்கள் கிறிஸ்துவுக்குள் விசுவாசத்திற்குள் பக்திக்குள் இன்னும் வளரவேண்டும். 

என் மூலமாய் கர்த்தரை ஏற்றுக் கொண்டவர்கள் இன்றைக்கு ஊழியக்காரர்களாய்மாறி இருக்கிறார்கள் ஏனென்றால் நான் அவர்களை ஆண்டவருக்குள் நன்றாக நடத்தினபடியினால் இன்றைக்கு அவர்களால் ஊழியம் செய்ய முடிகிறது. அதைக்குறித்து எனக்கு பெருமையாக தான் உள்ளது இங்கே யார் நம்மை குறித்து சாட்சி கொடுக்க வேண்டும் போதகர் அல்ல பரிசுத்த ஆவியானவரே சாட்சி கொடுக்க வேண்டும் அந்த சாட்சி மட்டும் தான் மெய்யான சாட்சி நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்க வேண்டும்.

நான்காவதான அடையாளம் ஆவியின் கனிகள்

கலாத்தியர் 5:22-23 

22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை

இவ்வசனத்தை வாசித்து பார்ப்போம் என்றால் நீங்கள் எப்பொழுதும் ஆவியின் கனிகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் கனி கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் தேவனுடைய அன்பை விட்டு விலகும் போது அந்த கனி உங்களிடத்தில் இருக்காது ஆவியின் கனியினால் நிறைந்துகாணப்படவேண்டும். ஒரு மரம் வைத்தீர்கள் என்றால் அது அப்படியே இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? இல்லை அதே மரம் நன்றாக வளர்ந்து  நிறைய கனிகள் கொடுத்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள். இது நான் வைத்த மரம் என்று பெருமையாக சொல்வீர்கள் தேவனும் அப்படிப்பட்ட கனியைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறார்.

அந்தக் கனி என்னவென்றால் ஒன்பது விதமான கனிகள் ஒன்று அன்பு என்கிற கனி, இரண்டாவது சந்தோஷம் என்கிற கனி, மூன்றாவது சமாதானம் என்கிற கனி, நான்காவது நீடிய பொறுமை என்கிற கனி, ஐந்தாவது தயவு என்கிற கனி, ஆறாவது நற்குணம் என்கிற கனி, ஏழாவது விசுவாசம் என்கிற கனி, எட்டாவது சாந்தம் என்கிற கனி, ஒன்பதாவது இச்சையடக்கம் என்கிற கனி இத்தனையும் உங்களிடத்தில் காணப்பட வேண்டும் ஒவ்வொரு கனிகளும் உங்களிடத்தில் இருக்கிறதா இல்லையா என்று மனதிற்குள் யோசித்துப் பாருங்கள் இல்லையென்றால் அதை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மிடத்தில் அதிகமாக காணப்படாத காரியம் என்னவென்றால் நீடிய பொறுமை தயவு விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம் இவைகள்தான் நம்மிடத்தில் சரியாக காணப்படாது எனக்கு அதிகமாக இவற்றில்தான் குறைவு ஏற்படுகிறது எப்படி என்றால் குறிப்பாக சிறிய காரியத்திற்கு கூட கோபம் பயங்கரமாக வரும் அப்படி என்றால் என்ன அர்த்தம் எனக்குள் சாந்தம் இல்லை என்றுதான் அர்த்தம் கோப குணம் பிசாசினுடையது சாந்தம் இயேசு நாதருக்குரியது நான் சாந்தமாக இருந்தால் இயேசு எனக்குள் இருக்கிறார் நான் கோபம் அடைந்தால் எனக்குள் பிசாசுதான் காணப்படுவான் அப்பொழுது நீங்கள் கோபப்பட்டால் யார் உங்களோடு இருக்கிறார் பிசாசு தான் வாசம்பண்ணுகிறான் ஆகவே இந்த ஒன்பது விதமான கனிகளும் உங்களிடத்தில் உள்ளதா என்று பாருங்கள்

ஐந்தாவது அடையாளம் ஆவிக்குரியவைகளை அறிந்து கொள்ளுதல்

1 யோவான் 2:20. நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். 21. சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்

இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள காரியம் ஆவிக்குரிய காரியங்களை அறிந்திருப்பது அல்லது அறிந்து கொள்ள வேண்டியது அதாவது எது உலக காரியம் எது ஆவிக்குரிய காரியம் என்பதை பகுத்து அறிந்து கொள்ள வேண்டும். மனுஷனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது. பகுத்தறிவு என்றால் நன்மை எது தீமை எது என்று பகுத்தறிந்து கொள்வது. அதுதான் இங்கே சொல்லுகிறது நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை பகுத்து அறிந்து கொள்ள வேண்டும். இதுதான் ஐந்தாவது அடையாளம்.

ஆவியை குறித்து அறிந்து கொள்ளுதல் பிதா என்றால் யார் இயேசு என்றால் யார் பரிசுத்த ஆவியானவர் என்றால் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிலர் உங்களைப் பார்த்து கேட்பார்கள் நீங்கள் பிதா என்றும் இயேசு என்றும் ஆவியானவர் என்றும் சொல்கிறீர்களே இவர்களில் யாரை கடவுளாக வணங்குகிறீர்கள் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் இதற்குதான் பகுத்தறிவு வேண்டும் நன்றாக கவனியுங்கள் வேதாகமம் கூறுகிறது பிதா தம்முடைய குமாரனை அனுப்பினார் எப்படி அவருடைய குமாரனை அனுப்பினார் என்றால் ஒரு சிறிய விளக்கத்தை உங்களுக்கு  தருகிறேன்.

உங்களுக்கு நான் யார் என்றால் போதகர் இதுவே என் மனைவிக்கு நான் யார் என்று  கேட்டால் அவர்கள் சொல்வார்கள் அவர் என் கணவர் இதுவே என் பிள்ளைகளிடத்தில்  நீங்கள் கேட்டால் என்னை அவர்கள் அப்பா என்று சொல்லுவார்கள் மூன்றுபேரும் ஒரே நபரை தான்சொல்லுகிறார்கள் நீங்கள் போதகர் என்கிறீர்கள் என் மனைவி கணவர் என்கிறார்கள் என் பிள்ளைகள் அப்பா என்று சொல்லுகிறார்கள் அதே போல தான் நம்முடைய ஆண்டவர் ஆரம்பத்தில் உலகத்தை படைத்ததினாலே பிதாவாக இருந்தார்.

நம்மை இரத்தத்தினால் மீட்டு நம்மை இரட்சித்ததினாலே இரட்சகராக இருக்கிறார் அவர் அபிஷேகத்தினால் நம்மை நிரப்பினதினாலே ஆவியானவராக இருக்கிறார் இந்த அளவு நமக்கு அறிவு வேண்டும். அனேகர் குழப்புகிறார்கள் சிலர் பிதா இல்லை என்றும் சிலர் இயேசு இல்லை என்றும் சிலர் ஆவியானவர் இல்லை என்றும் சொல்கிறார்கள். அப்படி நீங்கள் இதிலே குழம்பிவிட்டால் மறுபடியும் நீங்கள் தேறவே முடியாது இதில் தெளிவாக இருக்கவேண்டும் நம்மை படைத்ததினாலே அவர் பிதாவாக இருக்கிறார்.

நாம் பாவத்தில் சிக்குண்டு மாட்டிக்கொண்டோம் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றினார் இரட்சித்தார் அதனால் அவர் இரட்சகராக இருக்கிறார். அதன் பின்பு பார்த்தால் அபிஷேகத்தை நம்மேல் ஊற்றி நம்மை உயிர்ப்பிக்கிறவராக இருக்கிறார் ஆகவே அவர் ஆவியானவராக இருக்கிறார். ஆகவே ஒரே தெய்வம் தான் மூன்று விதங்களில் கிரியை செய்கிறார் இதுதான் ஆவிக்குரிய காரியங்களை அறிந்து கொள்வது இரண்டு வசனங்களை நாம் வாசிக்கலாம் நன்றாய் நீங்கள் பொறுமையாக வாசித்தீர்களென்றால் உங்களுக்குப் புரியும்  

1 யோவான் 2:20-27  

1 யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார் 

அதைப்போல்

1 கொரிந்தியர் 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்

         இந்த வசனங்களில் பார்த்தால் ஆவிக்குரியவர்களை யாராலும் ஆராய முடியாது. ஆனால், ஆவிக்குரியவன் சகலத்தையும் ஆராய்ந்து கொள்ளக் கூடியவனாக இருக்கிறான் ஆவிக்குரியவர்களாக இருந்தால் ஆராய்ந்து பார்ப்பார்கள் உங்களை நீங்களே நிதானித்து  பார்ப்பீர்கள் உங்களை யாராலும் ஆராய்ந்து பார்க்க முடியாது ஏனென்றால் நீங்கள் ஆவிக்குரியவர்கள். 

ஆறாவது அடையாளம்  தேவனோடு ஐக்கியபடுதல்

1யோவான் 3. நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 4. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். 5. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 6. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்

        இவ்வசனங்களை வாசிக்கும்போது கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிகிறவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் எத்தனையோ பேர் எவ்வளவோ உயர் படிப்புகளை எல்லாம் படித்துவிட்டு ஆண்டவரிடத்தில் வந்தவுடனே முழங்கால்படியிட்டு ஆண்டவரே என்னை காப்பாற்றும் என்று சொல்கிறார்கள். ஆண்டவரே எனக்கு ஞானத்தை தாரும் என்று கேட்கிறார்கள் ஆண்டவரே பரிசுத்த ஆவியை எனக்குத் தாரும் என்று சொல்லுகிறார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றால் ஐக்கியபடுதல் தேவனுக்கு முன்பாக நான் ஒன்றும் இல்லை என்பதுதான் ஆறாவது கிறிஸ்துவுக்குள்  ஐக்கியபடுதல்.

ஏழாவது அடையாளம் நீதிமானாக வாழ்வது

1 யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 10. இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல

வேதம் சொல்லுகிறது நீதிமானாக வாழவேண்டும் பாவம் செய்கிறவர்கள் தேவனால் இன்னும் பிறக்கவில்லை, பாவம் செய்கிறவர்கள் தேவனை தரிசிப்பதில்லை நாம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக வாழ வேண்டும்

எட்டாவது அடையாளம் சகோதர அன்பு

அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16

சகோதர அன்பில் நிலைத்திருக்க வர்களாக நாம் இருக்கவேண்டும் எப்பொழுதும் நான் நல்லவன் நான் நான் என்று சொல்லாமல் அவர்களும் நல்லவர்கள்தான் என்று சொல்லி சகோதர அன்பிலே நிலைத்திருக்கவேண்டும். சிலர் தன்னைப்பற்றியே பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை அற்பமாக எண்ணுவார்கள். ஏன் தெரியுமா? சகோதர அன்பு அவர்களிடத்தில் இல்லை சகோதர அன்புவேண்டும் அது இல்லை என்றால் உங்களுக்கு சகோதர அன்பே இல்லை என்றுதான் அர்த்தம் இரட்சிக்கப்பட்டதற்கு அடையாளமே இல்லை 

ஒன்பதாவது அடையாளம் உலகத்தை மேற்கொள்ளுதல்

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4

நாம் உலகத்தை ஜெயிக்கிறவர்களாக இருக்க வேண்டும் நாம் உலகத்தோடு ஒத்து போய்விடக்கூடாது நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள் ஊர் ஓட ஒத்து ஓடு  என்று சொல்வார்கள் அதற்கு என்ன அர்த்தம் என்றால் ஊரே ஓடுகிறது நாமும் ஓட வேண்டும் இதுதான் இப்படிப்பட்டவர்கள் இயேசுவை அறியாதவர்களுக்கு அடையாளம். ஆனால், நீங்கள் இயேசுவை அறிந்தவர்கள் நீங்களும் அவர்களும் ஒன்றல்ல இயேசுவை அறிந்தவர்கள் வேறுதான் இயேசுவை அறியாதவர்கள் வேறு தான் இயேசுவை அறிந்தவர்கள் இயேசுவை அறியாதவர்களை இயேசுவை அறியும்படி மாற்ற வேண்டுமே தவிர நீங்களும் அவர்களைப் போல பேதையாக மாறிவிடக்கூடாது

பத்தாவது அடையாளம் விசுவாசத்தில் நிலைத்திருப்பது

என்ன செய்ய வேண்டுமென்றால் விசுவாசத்தின் மூலமாக உலகத்தை ஜெயிக்க வேண்டும் நீங்கள் இந்த பத்து அடையாளங்களில் எது நமக்குள் இருக்கிறது எது நமக்குள் இல்லை என்று பார்த்து இல்லாததை ஆண்டவரிடத்தில் கேளுங்கள் ஆண்டவரே இந்த அடையாளத்தை நான் பெற்றுக் கொள்ள எனக்கு உதவிசெய்யும் என்று சொல்லுங்கள் கர்த்தர் உங்களுக்கு மிகுந்த அற்புதங்களை செய்து ஆசீர்வதிக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *