அகசியா (Ahaziah)

(கர்த்தரின் தாபரிப்பு)

1. இஸ்ரவேலின் எட்டாம் இராஜா. இவன் ஆகாப், யோசபேல் என்பவர்களின் மகன். இரண்டு வருஷம் இராஜாவாயிருக்கையில் பாகாலைச் சேவித்து, கர்த்தருக்குக்கோபமூட்டினான் (1.இராஜா.22:51-53, 2.இராஜா.1:2-4).

மோவாபியர் இவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள் (2. இராஜா .1:1).

இவன் யோசபாத்தோடு தோழமை கொண்டு கப்பல்கள் செய்ததில் நஷ்டப்பட்டான் (2.நாளா.20:35-36).

இவன் மேல் வீட்டிலிருந்து விழுந்து வியாதிப்பட்டிருக்கையில், பாகால்சேபூலிடத்தில் விசாரிக்க ஆள் அனுப்பினான். எலியா அவர்களைச் சந்தித்து அகசியா சாவான் என்று சொன்னபடியே, அவன் செத்தான். அவனுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை (2.இராஜா.1:1-17).

2. யூதாவின் இராஜா (கி.மு.842-841). யோராமின் இளையமகன். ஆகாபு, யேசபேல் என்பவர்களின் பேரன் (2.இராஜா.8:25-29). இவனுடைய பெயர் யோவகாஸ் என்று 2.நாளா.21:17ல் சொல்லப்பட்டுள்ளது. இவன் 22 வயதில் அரசாளத் தொடங்கி ஒரு வருஷம் அரசாண்டான் (2.இராஜா.8:26). இவனுடைய தாயாகிய அத்தாலியாளின் யோசனைப்படி இவன் துன்மார்க்கமாய் நடந்தான் (2.நாளா.22:3).

ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபோது அவனைப் பார்க்கும்படி இவன் யெஸ்ரயேலுக்குப் போயிருந்தவேளையில், யெகூ இவனைக் கொல்லுவித்தான். அவனுடைய ஊழியக்காரார் இவனை அடக்கம்பண்ணினார்கள் (2.இராஜா.9:16-28, 2.நாளா.226-9).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *